அரூர் தொகுதியை அள்ளப்போவது யார்?

அரூர் தொகுதியை அள்ளப்போவது யார்?
Updated on
2 min read

தமிழக சட்​டப்​பேரவை தொகு​தி​களின் வரிசைப் பட்டியலில் 61-வதாக இடம்பெற்றுள்ளது அரூர் (தனி) தொகுதி. தருமபுரி மாவட்டத்தின் கடைக்கோடி பகுதியில் உள்ளது அரூர் தொகுதி. மிகவும் பின்தங்கிய பகுதிகளை கொண்டதாகவும், கிராமப் பகுதிகள், மலைவாழ் கிராமங்கள் அதிகம் கொண்டதாகவும் இத்தொகுதி அமைந்துள்ளது.

அரூர் நகராட்சி, கம்பைநல்லூர் பேரூராட்சி, மற்றும் மொரப்பூர், தீர்த்தமலை, கோட்டப்பட்டி, நரிப்பள்ளி உள்ளிட்ட வளர்ந்து வரும் நகரப் பகுதிகளை கொண்டுள்ளது. இத்தொகுதியில் புகழ்பெற்ற தீர்த்தமலை தீர்த்தகிரீஸ்வரர் கோயில், டி.அம்மாப்பேட்டை சென்னியம்மன் கோயில், மொரப்பூர் முனியப்பன் கோயில், மொரப்பூர் ரயில் நிலையம், வள்ளிமதுரை அணை ஆகியவை தொகுதியின் அடையாளமாக உள்ளன.

சாதிவாரியாக வன்னியர் அதிக அளவிலும், அடுத்ததாக தாழ்த்தப்பட்டோர், மலைவாழ் மக்கள், கொங்கு வேளாள கவுண்டர், முதலியார், செட்டியார் மற்றும் சிறுபான்மையினர் (முஸ்லிம் மற்றும் கிறிஸ்தவர்) உள்ளனர்.

தொகுதியில் நிலவும் பிரச்சினைகள்

அரூர் தொகுதியில் வேலை வாய்ப்பு ஒரு பெரிய பிரச்சினையாக உள்ளது. இங்குள்ள மக்கள் போதிய வேலைவாய்ப்பு இல்லாததால் கோவை, திருப்பூர், பெங்களூரு உள்ளிட்ட பெரு நகரங்களுக்கு கட்டிட வேலை, கல்உடைக்கும் தொழில் செய்யவும், கார்மெண்ட்ஸ் கம்பெனிகளுக்கும் சென்று அங்கேயே தங்கி பணியாற்றி வருகின்றனர்.

சித்தேரி, சிட்லிங் உள்ளிட்ட மலைப்பகுதி சார்ந்த கிராமங்களில் வாழும் பழங்குடி மக்களிடையே போதிய விழிப்புணர்வு இல்லாத நிலையில் அவர்களை சிலர் மரம் வெட்ட ஆந்திர மாநிலத்திற்கு அழைத்துச் செல்லும் நிலையும் உள்ளது.

தொகுதியில் முக்கிய நீர் ஆதாரமாக வள்ளி மதுரை அணைக்கட்டின் வாயிலாக அதனைச் சார்ந்த பகுதிகள் பாசனவசதி பெறுகின்றன. தொகுதியையொட்டி நீண்ட தூரத்திற்கு தென் பெண்ணையாறு ஓடினாலும் அதன் மூலம் பெறுகின்ற பயன் ஏதுமில்லை.

ஆற்றின் கரையோர பகுதி விவசாயிகள் தங்களுக்கு தென்பெண்ணையாற்றிலிருந்து நீரேற்றம் செய்து ஏரிகளை நிரப்ப வேண்டும் என்ற கோரிக்கையை நீண்ட வருடங்களாக வலியுறுத்தி வருகின்றனர்.

வேட்பாளர்களின் பின்புலம்

இத்தொகுதியில் இதுவரை நடந்த தேர்தல்களில் 5 தேர்தல்களில் (1980, 1984, 2016, 2019 இடைத்தேர்தல், 2021) அதிமுக வெற்றி பெற்று இத்தொகுதியில் தனது பலத்தை நிரூபித்துள்ளது. மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் (1977, 1989, 2006, 2011) 4 முறையும், திமுக (1971, 1996), காங்கிரஸ் (1967, 1991) தலா இரண்டு முறையும், இந்திய கம்யூனிஸ்ட் (2001) ஒருமுறையும் வெற்றிபெற்றுள்ளன.

தொகுதியில் தற்போதைய சட்டப்பேரவை உறுப்பினராக அதிமுகவைச் சேர்ந்த ஒன்றிய செயலாளர் சம்பத்குமார் உள்ளார். கடந்த 2021 தேர்தலில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் வேட்பாளர் குமாரை 30,362 வாக்குகள் வித்தியாசத்தில் வீழ்த்தி சம்பத்குமார் வெற்றி பெற்றார். 2019 (இடைத்தேர்தல்), 2021 என இரு முறை வெற்றிபெற்ற அவர் மூன்றாவது முறையாக மீண்டும் அதிமுக சார்பில் போட்டியிடுகிறார்.

மனக்கசப்பில் விசிக

திமுக கூட்டணியில் அரூர் தொகுதியில் விடுதலை சிறுத்தைகள் மற்றும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சிகள் போட்டியிட கடுமையாக முயன்றன. அரூர் தொகுதி பெற பெரும் முயற்சி செய்தும் முடியவில்லை என திருமாவளவனே வருத்தப்படும் அளவிற்கு இத்தொகுதியில் போட்டியிட விடுதலை சிறுத்தைகள் ஆர்வமாக இருந்தனர். ஆனால், இம்முறை திமுகவே மீண்டும் களத்தில் இறங்கி உள்ளது.

திமுக வேட்பாளராக சண்முகம் போட்டியிடுகிறார். முதல் முறையாக சட்டப்பேரவைத் தேர்தலில் களமிறங்குகிறார். அரூர் தொகுதி கிடைக்காததால் ஆரம்பத்தில் சிறிது மனகசப்புடன் இருந்த விசிகவினர் தற்போது திமுக வெற்றிக்கு மும்முரமாக ஈடுபாடு காட்டத் தொடங்கியுள்ளனர். இது தவிர தவெக சார்பில் ராகேஷ், நாம் தமிழர் கட்சி சார்பில் அனிதா, தமிழக வாழ்வுரிமைக் கட்சி சார்பில் மணிலா ஆகியோர்

களத்தில் இருந்தாலும் உண்மையான போட்டி அதிமுக-திமுக இடையில் தான் நிலவுகிறது. இத்தொகுதியில் இரு கட்சிகளுக்கும் பக்கபலமாக அதிமுக கூட்டணியில் பாமக இருப்பதும், திமுகவுடன் விடுதலை சிறுத்தைகள் இருப்பதும் போட்டியை மேலும் கடுமையாக்கியுள்ளது.

கடந்த கால வரலாற்றின்படி வாக்கு எண்ணிக்கையின் போது, முதல் பாதி சுற்றுகளில் அதிமுக-பாமக கூட்டணி வலுவான முன்னிலை பெறும், அதேபோல், பிற்பாதி சுற்றுகளில், திமுக கூட்டணி கூடுதல் வாக்குகள் பெறும் என்பதால் கடைசி சுற்றுவரை பரபரப்பு நீடிக்கும். இதனிடையே அரூர் தொகுதியில், பரவலாக விஜய்யின் தமிழக வெற்றிக் கழகம் காலூன்றி உள்ளது.

அதிலும் குறிப்பாக அரூர் நகரம் தவிர, பல்வேறு கிராமப்பகுதியிலும் 18 முதல் 35 வயது வரையிலான இளைஞர்கள், இளம்பெண்கள் ஆதரவு பரவலாக உள்ளது. அவர்களின் முழுமையான பலம் தேர்தல் முடிவில்தான் தெரியும். இக்கட்சியினர் பெறும் வாக்குகள் இத்தொகுதியில் வெற்றி யாருக்கு என நிர்ணயிப்பதில் முக்கியமாக இருக்கும் என்பது நிதர்சனமான உண்மை

வாக்காளர்கள் விவரம்

ஆண் - 1,21,453

பெண் - 1,22,264

மூன்​றாம் பாலினத்​தவர் - 25

மொத்த வாக்​காளர்கள் - 2,43,742

அரூர் தொகுதியை அள்ளப்போவது யார்?
தி.நகர் தொகுதியில் தீயாய் வேலை செய்யும் கட்சிகள் - முந்துவது யார்?

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in