பர்கூர் தொகுதியில் ‘பட்டாசு’ வெடிக்கப் போவது யார்?

பர்கூர் தொகுதியில் ‘பட்டாசு’ வெடிக்கப் போவது யார்?
Updated on
2 min read

தமிழக சட்டப்பேரவை தொகுதிகளின் வரிசையில் 52-வது இடத்தில் பர்கூர் தொகுதி உள்ளது. 1977-ல் ஊத்தங்கரை சட்டப்பேரவைத் தொகுதியிலிருந்து பிரிக்கப்பட்டு புதிதாக இத்தொகுதி உருவானது. பின்னர் 2011-ல் தொகுதி மறுசீரமைப்பின் போது, காவேரிப்பட்டணம், கிருஷ்ணகிரி தொகுதிகளிலிருந்து புதிய ஊராட்சிகள் இத்தொகுதியில் இணைக்கப்பட்டன.

இத்தொகுதியில் அதிகமுறை அதிமுக வெற்றி பெற்றுள்ளது. குறிப்பாக கடந்த 1989 தேர்தலில் அதிமுக ஜெயலலிதா, ஜானகி அணியாகப் பிரிந்து தேர்தலை சந்தித்த நிலையில், இத்தொகுதியில் ஜெ. அணி சார்பில் போட்டியிட்ட ராஜேந்திரன் வெற்றி பெற்றார்.

தொடர்ந்து 1991-ல் இத்தொகுதியில் போட்டியிட்ட அதிமுக பொதுச்செயலாளர் ஜெயலலிதா வெற்றி பெற்று முதல் முறையாக முதல்வரானார். தொடர்ந்து 1996 தேர்தலில் போட்டியிட்ட ஜெயலலிதா வெற்றி வாய்ப்பை இழந்தார். இதனால், அரசியல் வரலாற்றில் முக்கியத்துவம் வாய்ந்த தொகுதியாக இது உள்ளது.

இத்தொகுதியில் ஜவுளி வியாபாரம், கிரானைட் தொழிற்சாலைகள், மா சாகுபடி, நர்சரிகள், அரசம்பட்டியில் தென்னை சாகுபடி, போச்சம்பள்ளியில் மிகப்பெரிய சந்தை, போச்சம்பள்ளி சிப்காட்டில் ஓலா எலெக்ட்ரிக் இருசக்கர வாகனம் மற்றும் காலணி தயாரிக்கும் தொழிற்சாலைகள் என தொழில் வளர்ச்சி மற்றும் வேளாண் வளர்ச்சியை நோக்கி இத்தொகுதி படிப்படியாக முன்னேறி வருகிறது.

இங்கு தமிழ், தெலுங்கு மொழி பேசும் மக்கள் அதிகம் வசிக்கின்றனர். வன்னியர் சமூகத்தினர் அதிகம் உள்ளனர். வெள்ளாள கவுண்டர்கள், 24 மனை தெலுங்கு செட்டியார்கள், நாயுடு, பட்டியலின சமூக மக்கள் உள்ளனர். இதேபோல, சிறுபான்மையினரும் பரவலாக உள்ளனர்.

கடந்த கால தேர்தல்களைப் பொறுத்தவரை இதுவரை மாநில திராவிட கட்சிகளே மாறி மாறி வெற்றி பெற்றுள்ளன. கடந்த 1977, 1980, 1984, 1989, 1991, 2001, 2006, 2011, 2016 தேர்தல்களில் அதிமுகவும், 1971, 1996, 2009, 2021 தேர்தல்களில் திமுகவும் வெற்றி பெற்றது. 2021 தேர்தலில் திமுகவைச் சேர்ந்த டி.மதியழகன் வெற்றி பெற்றார்.

தொகுதியில் நிலவும் பிரச்சினைகள்

எண்ணேகோல்புதூர் கால்வாய் திட்டத்தின் மூலம் படேதலாவ் ஏரி தண்ணீர் கொண்டு வரும் திட்டம், தென்பெண்ணை ஆற்றின் உபரிநீரை மின்மோட்டார் மூலம் ஓதிக்குப்பம் ஏரிக்கும், கால்வாய்கள் மூலம் ஏரி, குளங்களில் நிரப்பும் திட்டம் உள்ளிட்ட நீர்பாசன திட்டங்கள் செயல்படுத்தப்பட வேண்டும்.

போச்சம்பள்ளி சந்தையை மேம்படுத்திட வேண்டும். போச்சம்பள்ளி ஒன்றியத்தை தரம் உயர்த்துதல், தென்னை மதிப்புக்கூட்டு பொருட்கள் தொழிற்சாலைகள், போச்சம்பள்ளி பேருந்து நிலையத்தை விரிவுபடுத்த வேண்டும்.

பர்கூரில் ஜவுளி பூங்காவும், மா ஏற்றுமதி மண்டலமும் உருவாக்க வேண்டும். இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பு உருவாக்குதல், சீரான குடிநீர் விநியோகம், நிலத்தடி நீர்மட்டத்தை உயர்த்துவதற்கான நீர்மேலாண்மைத் திட்டங்கள் இத்தொகுதி மக்களின் கோரிக்கையாகவும், எதிர்பார்ப்பாகவும் உள்ளது.

வேட்பாளர்களின் பின்புலம்

தற்போதைய தேர்தலில் திமுக சார்பில் சிட்டிங் எம்எல்ஏ மதியழகன் மீண்டும் போட்டியிடுகிறார். 2016 தேர்தலில் திமுக சார்பில் போட்டியிட்டு வெற்றி வாய்ப்பை இழந்த இ.சி.கோவிந்தராசன் 2024-ல் திமுகவிலிருந்து விலகி அதிமுகவில் இணைந்தார். இவர் தற்போது அதிமுக சார்பில் போட்டியிடுகிறார்.

நாம் தமிழர் கட்சி சார்பில் கவின், தமிழக வெற்றிக் கழகம் சார்பில் முரளிதரன் உள்ளிட்டோர் தேர்தல் களத்தில் உள்ளனர். திமுக வேட்பாளர் மதியழகன் தொகுதிக்குக் கடந்த 5 ஆண்டுகள் செய்த திட்டங்கள் குறித்தும், அரசம்பட்டி தென்னைக்கு புவிசார் குறியீடு பெற்றது, தனது சொந்த நிதியில் மேற்கொள்ளப்பட்ட பணிகள், திமுக அரசின் சாதனைகளைக் கூறி வாக்கு சேகரிப்பு பணியில் கட்சி நிர்வாகிகள், கூட்டணி கட்சியினருடன் களத்தில் வெற்றி இலக்கை குறி வைத்து பிரச்சாரத்தில் தீவிரம் காட்டி வருகிறார்.

ஏற்கெனவே எம்எல்ஏவாக இருந்தது இவருக்குத் தொகுதியில் நல்ல அறிமுகத்தைக் கொடுத்துள்ளது. மேலும், கூட்டணி பலம் இத்தொகுதியில் திமுகவுக்கு கை கொடுக்கும் என்ற நம்பிக்கை அவரிடம் உள்ளது.

தொகுதி மக்களிடம் நன்கு பரிச்சயமான அதிமுக வேட்பாளர் கோவிந்தராசன் அதிமுக ஆட்சிக்காலத்தில் செய்த வளர்ச்சி பணிகளை பட்டியலிட்டு வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டு வருகிறார். குறிப்பாக ஜெயலலிதா இத்தொகுதியில் வெற்றி பெற்றபோது செய்யப்பட்ட பல்வேறு திட்டங்களை குறிப்பிட்டு களத்தில் தேர்தல் பணியில் ஈடுபட்டு வருகிறார்.

வேட்பாளர் அறிவிப்பின்போது கட்சிக்குள் ஏற்பட்ட அதிருப்தி மற்றும் திமுகவிலிருந்து வந்தவருக்கு வாய்ப்பு என்ற கட்சிக்குள் நிலவும் அதிருப்திகள் இவருக்கு பலகீனத்தை ஏற்படுத்தியுள்ளது. இருப்பினும் தேர்தல் பணியில் தீவிரமாக ஈடுபட்டுள்ளார்.

தவெக வேட்பாளர் முரளிதரன், கட்சியின் தேர்தல் வாக்குறுதிகளையும், தனது சமூக வாக்குகள் மற்றும் விஜய் ரசிகர்கள் வாக்குகளும் கைகொடுக்கும் என்ற நம்பிக்கையோடு களப்பணியில் உள்ளார்.

நாதக வேட்பாளர் கவின், அரசியல் மாற்றத்திற்கான வாக்குகள் தனக்கு பலம் சேர்க்கும் என்ற நம்பிக்கையோடு வாக்காளர்களைச் சந்தித்து வருகிறார். தேர்தல் களத்தில் திமுக-அதிமுக இடையே போட்டி நிலவி வருகிறது. இத்தொகுதியில் தொடர் வெற்றியை திமுக பெறுமா என்பது தேர்தல் முடிவுகள் மூலமே தெரியவரும்.

வாக்காளர்கள் விவரம்

ஆண் - 1,17,135

பெண் - 1,20,197

மூன்றாம் பாலினத்தவர் - 17

மொத்த வாக்காளர்கள் - 2,37,349

பர்கூர் தொகுதியில் ‘பட்டாசு’ வெடிக்கப் போவது யார்?
அண்ணாநகர் தொகுதியில் வாக்குகளை அள்ளப்போகும் வேட்பாளர் யார்?

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in