

`இந்து தமிழ் திசை’ நாளிதழின் ‘பெண் இன்று’ சார்பில் சென்னை வேல்ஸ் பல்கலைக்கழகம் திருவான்மியூர் வளாகத்தில் நேற்று நடைபெற்ற மகளிர் திருவிழாவின்போது போட்டிகளில் பங்கேற்ற வாசகிகள். | படங்கள்: எஸ்.சத்தியசீலன் |
சென்னை: “பட்டங்கள் ஆள்வதும் சட்டங்கள் செய்வதும் பாரினில் பெண்கள் நடத்த வந்தோம்; எட்டும் அறிவினில் ஆணுக்குப் பெண் இங்கே இளைப்பில்லை காண் என்று கும்மியடி” என பாரதி கண்ட கனவின்படி இன்றைய தலைமுறை பெண்கள் பார் முழுவதும் வியக்கும் வகையில் சாதனைகளை படைத்து வருகின்றனர்.
அவர்களை அடையாளப்படுத்தும் விதமாகவும், பெண்களைப் போற்றும் வகையிலும் ‘இந்து தமிழ் திசை’ நாளிதழின் ‘பெண் இன்று’ சார்பில் மகளிர் திருவிழா சென்னை திருவான்மியூரில் உள்ள வேல்ஸ் பல்கலைக்கழக வளாகத்தில் நேற்று கோலாகலமாக நடைபெற்றது.
இந்த விழாவில் துணை செய்தி ஆசிரியரும், ‘பெண் இன்று’ சிறப்பு பக்க பொறுப்பாளருமான பிருந்தா சீனிவாசன் வரவேற்புரையாற்றினார்.
சிறப்பு விருந்தினராகப் பங்கேற்ற முன்னாள் ஏடிஜிபி வனிதா, திருவான்மியூர் வேல்ஸ் பல்கலைக்கழக கல்வி மற்றும் நிர்வாகத்துக்கான கேம்பஸ் இயக்குநர் சசிரேகா, ரெயின்போ குழந்தைகள் நல மருத்துவமனையின் மூத்த மருத்துவ நிபுணர் ஷீலா ஆகியோர் குத்துவிளக்கு ஏற்றி விழாவைத் தொடங்கி வைத்தனர்.
தமிழக அரசின் கலை இளமணி விருது பெற்ற கடலூரைச் சேர்ந்த மோகன சங்கரியின் பரதநாட்டியம், கண்களுக்கு விருந்து படைத்தது.
இந்த நிகழ்ச்சியில் முன்னாள் ஏடிஜிபி வனிதா பேசியதாவது: சமூகத்தில் பெண்கள் நடத்தப்படும் விதம், அதற்கு அவர்கள் அளிக்கும் எதிர்வினை ஆகியவை பெண்களின் இருப்பையும் அடையாளத்தையும் தீர்மானிப்பதில் முக்கியப் பங்கு வகிக்கிறது. பெண்கள் சக்திவாய்ந்தவர்களாக இருக்க வேண்டுமெனில் படிக்க வேண்டும்.
நேற்று இருந்ததைவிட இன்று ஒரு படி முன்னேறிய மனிதராக இருக்க வேண்டும். வாசிப்பு மூலம் அறிவைப் பெருக்கிக்கொள்ள முடியும்.
செய்தித்தாள்களைத் தொடர்ந்து படிப்பது அவசியம். தலைப்புச் செய்திகளை மட்டும் பார்ப்பதுடன் நிறுத்திக்கொள்ளாமல், செய்திகளின் பின்னணியையும் தெரிந்துகொள்ள வேண்டும்.
கணினி, செயற்கை நுண்ணறிவு, புதிய தொழில்நுட்பங்கள் ஆகியவை வளர்ந்து வரும் காலத்தில், தொழில்நுட்பத்தைப் பயன்படுத்தத் தெரிந்திருப்பது மட்டுமே அறிவாகிவிடாது. நாம் என்ன தகவலைப் பெறுகிறோம், அதை எப்படிப் புரிந்துகொள்கிறோம் என்பதும் முக்கியம்.
பெண்கள் வீட்டைக் கவனிப்பதில் முக்கியப் பங்கு வகிக்கிறார்கள். குடும்பத்தில் வேலைகளைப் பகிர்ந்துகொள்வதுடன், ஒவ்வொருவரின் திறமைக்கும் விருப்பத்துக்கும் ஏற்ற பொறுப்புகளை வழங்க வேண்டும். வீட்டுப் பணிகளுக்கு இடையில் பெண்களுக்கெனத் தனிப்பட்ட நேரமும் சிந்திப்பதற்கான வாய்ப்பும் இருக்க வேண்டும்.
மகளிர் திருவிழாவில் பங்கேற்ற வாசகிகளில் ஒரு பகுதியினர்.
குழந்தை பெற்றுக்கொள்ள வேண்டும், குடும்பத்தைப் பேண வேண்டும் என்ற சமூக அழுத்தங்களால் பெண்கள் பல்வேறு நிர்பந்தங்களை எதிர்கொள்கிறார்கள். பெண்கள் தங்கள் உடை, வாழ்க்கை முறை, தனிப்பட்ட முடிவுகள் ஆகியவற்றில் சுயமாக முடிவெடுக்க வேண்டும்.
அதேநேரம், குடும்பத்தினரிடையே உரையாடலும் பரஸ்பர புரிதலும் இருக்க வேண்டும். எதையும் ஏன், எதற்கு, எப்படி என்று கேள்வி கேட்கும் சிந்தனையைத் தூண்டும் கல்வியே பயனுள்ளதாக இருக்கும்.
பாரதியார் பெண்களின் சமத்துவம் குறித்து அக்காலத்திலேயே வலியுறுத்திய கருத்துகளையும் நினைவில் கொள்ள வேண்டும். இவ்வாறு அவர் பேசினார்.
தொடர்ந்து, வேல்ஸ் பல்கலைக்கழக கல்வி மற்றும் நிர்வாகத்துக்கான கேம்பஸ் இயக்குநர் சசிரேகா பேசியதாவது: பொது இடங்களில் சுதந்திரமாக நடமாடுவதற்கான உரிமையும் வாய்ப்பும் பெண்களுக்கும் இருக்க வேண்டும்.
இரவு நேரங்களில் தேநீர்க் கடைகள் உள்ளிட்ட பொது இடங்களில் ஆண்கள் இயல்பாக கூடும் நிலையில், பெண்களைக் காண்பது அரிதாக உள்ளது. பெண்ணை மதிக்கும் குடும்பம்தான் சிறப்பாக இருக்கும்.
கடலூர் செம்மண்டலம் பகுதியைச் சேர்ந்த சிறுமி மோகன சங்கரி பரத நாட்டியம் ஆடினார்.
குடும்பத்தின் வளர்ச்சியில் பெண்களின் பங்களிப்பு முக்கியமானது. அதேபோல, பெண்களுக்கு எதிரான வன்கொடுமைகளைத் தடுப்பதற்கான மாற்றம் ஒவ்வொருவரிடம் இருந்தும் தொடங்க வேண்டும். அந்த மாற்றம் மனதளவில் ஏற்றுக்கொள்ளப்பட வேண்டும்.
பெண்களின் வாழ்க்கைப் பயணம் இனிமையானதாக இருந்தாலும், பல சவால்களையும் கொண்டது. அந்த பயணத்தில் தன்னம்பிக்கையுடன் வாழ்வதுடன், வாழ்க்கையின் நிறைவில், மனநிறைவுடன் வாழ்ந்தோம் என்ற உணர்வைப் பெற வேண்டும்.
இவ்வாறு பேசினார். இதைத் தொடர்ந்து, உதயம் பருப்பு வகைகளைப் பயன்படுத்தி சுவையாக சமைத்துக்கொண்டு பெருந்திரளாக வந்த வாசகிகளுக்கு பரிசுகள் வழங்கப்பட்டன.
‘மகளிர் திருவிழா’வுக்கே உரித்தான உற்சாக போட்டிகளும், பரிசுகளும் கொண்டாட்டத்துடன் தொடங்கியது. வயது பேதமின்றி 18 வயது முதல் 85 வயது வரை உள்ள வாசகிகளும் நிகழ்வில் பங்கேற்றனர். பல்வேறு போட்டிகளில் வெட்கம் மிளிர இளம் பெண்களுக்கு போட்டியாக, மூத்த பெண்களும் பங்கேற்றனர்.
முன்னாள் ஏடிஜிபி வனிதா, டாக்டர்.ஷீலா, முனைவர் வி.சசிரேகா
வாசகிகள் பங்கேற்ற ஃபேஷன் ஷோ, பலூன் உடைத்தல், கயிறு இழுத்தல், பாட்டுக்கு பாட்டு, நடனம் உள்ளிட்ட பல்வேறு போட்டிகள் நடத்தப்பட்டு, அனைவருக்கும் பரிசுகள் வழங்கப்பட்டன. நிகழ்ச்சியின் ஆரம்பம் முதல் நிறைவு வரை தொகுப்பாளினி தேவி கிருபாவின் கலகலப்பு பெண்களை உற்சாகப்படுத்தியது.
இந்த நிகழ்ச்சியை உதயம் இட்லி அரிசி, பருப்பு வகைகள் நிறுவனத்துடன் இணைந்து ‘இந்து தமிழ் திசை’ நடத்தியது. மேலும், லலிதா ஜுவல்லரி, ஸ்ரீஐஸ்வர்யா சாரீஸ், ரெபியூட் வாட்டர், மஹாத்ரி ஃபுட்ஸ், ஹெல்த் பாஸ்கெட், சத்யா ஏஜென்சீஸ், ருச்சி ஊறுகாய், அட்வென்சர் மீடியா ஹவுஸ், வர்த்தமானன் பதிப்பகம், சௌபாக்யா என்டர்பிரைசஸ், காட்டன் ஹவுஸ், டோம்ஸ் ஸ்டேஷனரி, மாலாஸ் ஃப்ரூட்ஸ் ஆகிய நிறுவனங்களும் நிகழ்ச்சியை இணைந்து வழங்கின.
நிகழ்ச்சியின் டிவைன் பார்ட்னர் கிரி, ஹெல்த் பார்ட்னர் ரெயின்போ சில்ரன்ஸ் ஹாஸ்பிடல்ஸ், வென்யூ பார்ட்னர் வேல்ஸ் பல்கலைக்கழகம் - திருவான்மியூர் வளாகம், பிவெரேஜ் பார்ட்னர் கோத்தாஸ்காபி உள்ளிட்ட நிறுவனங்களும் இணைந்து பங்காற்றின.
மேலும், போட்டிகளின் வாயிலாக இரண்டு மகளிர் பம்பர் பரிசை தட்டி சென்றனர். நிகழ்வில் பங்கேற்ற அனைவருக்கும் அறுசுவை உணவு அளிக்கப்பட்டதுடன், வாசகிகளுக்கு நிச்சயப்பரிசும் வழங்கப்பட்டன.