முதல்வர் ஸ்டாலினுக்கு கொடைக்கானலில் உற்சாக வரவேற்பு: ஓய்வெடுப்பதற்காக குடும்பத்தினருடன் வருகை

5 நாட்கள் தங்குகிறார்; பாதுகாப்பு ஏற்பாடுகள் தீவிரம்
கொடைக்கானலுக்கு வந்த முதல்வர் ஸ்டாலினுக்கு சாலையின் இருபுறமும் திரண்டு நின்று கட்சியினர், பொதுமக்கள் உற்சாக வரவேற்பு அளித்தனர். அவர்களை நோக்கி கையசைத்த முதல்வர்.

கொடைக்கானலுக்கு வந்த முதல்வர் ஸ்டாலினுக்கு சாலையின் இருபுறமும் திரண்டு நின்று கட்சியினர், பொதுமக்கள் உற்சாக வரவேற்பு அளித்தனர். அவர்களை நோக்கி கையசைத்த முதல்வர்.

Updated on
2 min read

கொடைக்கானல்: ஓய்வெடுப்பதற்காக குடும்பத்தினருடன் கொடைக்கானலுக்கு வந்துள்ள முதல்வர் ஸ்டாலினுக்கு திமுகவினர், பொதுமக்கள் உற்சாக வரவேற்பு அளித்தனர். முதல்வர் வருகையை முன்னிட்டு கொடைக்கானலில் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது.

தமிழக சட்டப்பேரவைத் தேர்தல் வாக்குப்பதிவு கடந்த 23-ம் தேதி முடிவடைந்தது. வாக்கு எண்ணிக்கை மே 4-ம் தேதி நடைபெற உள்ளது. தேர்தலையொட்டி, முதல்வரும், திமுக தலைவருமான மு.க.ஸ்டாலின் கடந்த ஒரு மாதத்துக்கும் மேலாக பல்வேறு மாவட்டங்களுக்கும் தொடர்ச்சியாக சுற்றுப்பயணம் மேற்கொண்டு, தீவிர பிரச்சாரம் மேற்கொண்டார். தற்போது வாக்குப்பதிவு முடிவடைந்த நிலையில், குடும்பத்தினருடன் கொடைக்கானலில் 5 நாட்கள் ஓய்வெடுக்க உள்ளார்.

சென்னையில் இருந்து முதல்வர் ஸ்டாலின், தனது மனைவி, மகள், பேரன், பேத்தி உள்ளிட்ட குடும்பத்தினருடன் நேற்று காலை தனி விமானத்தில் புறப்பட்டு மதுரைக்கு வந்தார். அங்கிருந்து காரில் பிற்பகல் 2.45 மணிக்கு கொடைக்கானல் வந்தடைந்தார். வழிநெடுகிலும் சாலையோரம் திரண்ட திமுகவினர், பொதுமக்கள் முதல்வரை உற்சாகத்துடன் வரவேற்றனர். அவர்களை பார்த்து கையசைத்தபடி முதல்வர் ஸ்டாலின் சென்றார்.

கொடைக்கானல் - வத்தலக்குண்டு காட் ரோடு, பெருமாள்மலை, மூஞ்சிக்கல் ஆகிய இடங்களில் காத்திருந்த கட்சி நிர்வாகிகள் அவருக்கு புத்தகங்கள், சால்வையை வழங்கி வரவேற்றனர். பின்னர், கொடைக்கானல் வந்த முதல்வர் ஸ்டாலின், பாம்பார்புரம் பகுதியில் உள்ள தனியார் விடுதியில் குடும்பத்துடன் தங்கி ஓய்வெடுத்து வருகிறார். விடுதியில் அவரைப் பார்க்க கட்சியினர், முக்கிய பிரமுகர்கள் யாருக்கும் அனுமதி அளிக்கப்படவில்லை. 29-ம் தேதி வரை இங்கு தங்கும் முதல்வர் 30-ம் தேதி சென்னை திரும்ப உள்ளார்.

முதல்வர் வருகையையொட்டி கொடைக்கானலில் ஏராளமான போலீஸார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர். கொடைக்கானல் மலைப் பகுதியில் 30-ம் தேதி வரை ட்ரோன்கள் (ஆளில்லா விமானங்கள்) பறக்க தடை விதித்து மாவட்ட ஆட்சியர் சரவணன் உத்தரவிட்டுள்ளார். அதே நேரம், சுற்றுலா பயணிகளுக்கு எந்தவித கட்டுப்பாடுகளும் விதிக்கப்படவில்லை.

முதல்வர் தினமும் காலையில் விடுதி வளாகம் அல்லது நட்சத்திர ஏரி பகுதியில் நடைபயிற்சி மேற்கொள்ள உள்ளார். அடுத்த 2 நாட்கள் விடுதியிலேயே தங்கி ஓய்வெடுக்கிறார். பின்னர், மன்னவனூரில் உள்ள சூழல் சுற்றுலா மையம், செம்மறி ஆடு ரோம ஆராய்ச்சி மையம், கொடைக்கானல் சூரிய ஆராய்ச்சிக் கூடம், ரோஜா பூங்கா உள்ளிட்ட இடங்களை அடுத்தடுத்த நாட்களில் பார்வையிட உள்ளார். நட்சத்திர ஏரியில் படகு சவாரி, ஏரிச் சாலையில் சைக்கிளிங் செல்ல உள்ளார்.

முதல்வரின் மனைவி துர்கா ஸ்டாலின், கொடைக்கானலில் உள்ள குறிஞ்சியாண்டவர் கோயில், பூம்பாறை குழந்தை வேலப்பர் கோயிலில் சிறப்பு வழிபாடு நடத்த உள்ளார். சென்னை திரும்புவதற்கு முன்பு திண்டுக்கல் மாவட்ட அமைச்சர்கள், முக்கிய நிர்வாகிகளை முதல்வர் சந்திப்பார் என்று திமுக வட்டாரத்தில் கூறப்படுகிறது.

கடந்த 2021 பேரவைத் தேர்தல் மற்றும் 2024 மக்களவைத் தேர்தல் முடிந்த பிறகும், ஸ்டாலின் குடும்பத்தினருடன் கொடைக்கானலுக்கு வந்து ஓய்வெடுத்தார். அந்த தேர்தல்களில் திமுக கூட்டணி வெற்றி பெற்றது. அந்த சென்டிமென்ட் காரணமாகவே தற்போதும் அவர் கொடைக்கானல் வந்துள்ளதாக கட்சியினர் தெரிவித்தனர்.

வெற்றிச் சின்னம் காட்டிய முதல்வர்: சென்னையில் இருந்து மதுரை விமான நிலையம் வந்த முதல்வர் ஸ்டாலினிடம் சட்டப்பேரவைத் தேர்தல் வெற்றி வாய்ப்பு குறித்து செய்தியாளர்கள் கேள்வி எழுப்பினர். அதற்கு அவர், கட்டைவிரலை உயர்த்தி வெற்றிச் சின்னம் காட்டினார். தேர்தலுக்கு முன்பாக, கடந்த மாதம் காங்கிரஸ் கட்சியுடன் தொகுதிப் பங்கீடு உடன்பாடு ஏற்பட்டபோது ‘வெற்றிகரமாக முடிந்தது’ என்பதற்கு அடையாளமாக முதல்வர் ஸ்டாலின் சைகை காட்டியது வலைதளங்களில் வேகமாக பரவியது. அதே போல, முதல்வர் நேற்று வெற்றிச் சின்னம்காட்டியதும் வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

<div class="paragraphs"><p>கொடைக்கானலுக்கு வந்த முதல்வர் ஸ்டாலினுக்கு சாலையின் இருபுறமும் திரண்டு நின்று கட்சியினர், பொதுமக்கள் உற்சாக வரவேற்பு அளித்தனர். அவர்களை நோக்கி கையசைத்த முதல்வர்.</p></div>
தேர்தல் முடிவுகள் வெளியாகும் நாளான மே 4-ம் தேதி விஜய் ஆஸ்திரேலியா பயணம்?

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in