அரசு நிதியுதவி பெறும் தனியார் பள்ளிகள் அரசின் உத்தரவை செயல்படுத்த மறுக்க கூடாது: உயர் நீதிமன்றம்

அரசு நிதியுதவி பெறும் தனியார் பள்ளிகள் அரசின் உத்தரவை செயல்படுத்த மறுக்க கூடாது: உயர் நீதிமன்றம்
Updated on
2 min read

மதுரை: அரசின் நிதி உதவியை பெறும் தனியார் பள்ளிகள் அரசின் உத்தரவை செயல்படுத்த மறுக்கக் கூடாது என உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

விருதுநகர் டபிள்யூ புதுப்பட்டி ஸ்ரீ ரேணுகா இந்து உயர் நிலைப்பள்ளி ஓவிய ஆசிரியை சாரதா. இவர் பள்ளியில் உபரி ஆசிரியாராக இருப்பதாக கூறி குருஞான சம்பந்தர் இந்து மேல்நிலைப் பள்ளிக்கு இடமாறுதல் செய்யப்பட்டார்.

இருப்பினும் குருஞானசம்பந்தர் பள்ளி ஆண்கள் பள்ளியாக இருப்பதாலும், அங்கு பெண் ஆசிரியர்களுக்கான போதிய வசதிகள் இல்லை என்று கூறி அவரை பணியில் சேர்க்க பள்ளி நிர்வாகம் மறுத்துவிட்டது. இதையடுத்து நாடார் மகமை உயர் நிலைப் பள்ளிக்கு மாற்றப்பட்டார்.

இந்நிலையில், நாடார் மகமை பள்ளி வசிப்பிடத்தில் இருந்து வெகு தொலைவில் இருப்பதாகவும், பள்ளிக்கு செல்ல தினமும் 4 மணி நேரம் பயணிக்க வேண்டும் எனவே இடமாறுதல் உத்தரவை ரத்து செய்யக் கோரி உயர் நீதிமன்ற மதுரை அமர்வில் மனுத் தாக்கல் செய்தார்.

மனுவை விசாரித்த நீதிபதி, மனுதாரரை குருஞான சம்பந்தர் பள்ளியில் சேர்க்க பரிசீலிக்கவும், மனுதாரர் பள்ளியில் சிறப்பு வசதிகள் கோரக்கூடாது என்றும் உத்தரவிடப்பட்டது. இந்த உத்தரவு நிறைவேற்றப்படாத நிலையில் நீதிமன்ற அவமதிப்பு மனு தாக்கல் செய்தார்.

இரு மனுக்களையும் விசாரித்து நீதிபதி பி.புகழேந்தி பிறப்பித்த உத்தரவு: குருஞான சம்பந்தர் பள்ளி நிர்வாகம் தாக்கல் செய்த பதில் மனுவில், பள்ளி முழுக்க முழுக்க மாணவர்களுக்கான (ஆண்) மேல்நிலைப் பள்ளி. பள்ளியில் பெண் ஆசிரியர்களோ அல்லது பெண் பணியாளர்களோ பணியமர்த்தப்படுவதில்லை. பெண் ஆசிரியரை பணியமர்த்துவதற்குத் தேவையான கட்டமைப்பு வசதிகள் இல்லை எனக் கூறப்பட்டிருந்தது.

வழக்கு ஏற்கெனவே விசாரணைக்கு வந்தபோது குருஞான சம்பந்தர் பள்ளியில் சேர்க்கப்பட்டால் பெண் ஆசிரியர் என்ற காரணத்துக்காக சிறப்புச் சலுகையையோ அல்லது கூடுதல் வசதிகளையோ கோரமாட்டேன் என்று மனுதாரர் உறுதிமொழி அளித்தார்.

இதனால் அவரை பள்ளியில் சேர்க்க தகுதி அடிப்படையில் பரிசீலிக்க உத்தரவிடப்பட்டது. இருப்பினும் நீதிமன்ற உத்தரவு நிறைவேற்றப்படவில்லை. ஆண்கள் பள்ளி என்று கூறி மனுதாரரை பணியில் சேர்க்க மறுத்த பள்ளி அரசிடமிருந்து நிதியுதவி பெறும், சிறுபான்மையினர் அல்லாத ஒரு தனியார் பள்ளியாகும்.

அரசு உதவி பெறும் ஒரு நிறுவனம், தனியார் நிறுவனமாகத் தனது அடையாளத்தைத் தக்கவைத்துக்கொண்டாலும், அரசிடமிருந்து நிதி உதவியைப் பெறுகிறது. அரசிடமிருந்து மானிய உதவியை ஏற்றுக்கொண்ட பிறகு, அத்தகைய உதவி தொடர்பான சட்டரீதியான கடமைகளுக்கும் அது சம அளவில் கட்டுப்பட்டதாகிறது.

விதிகளின் கீழ் வழங்கப்பட்ட அதிகாரங்களைப் பயன்படுத்தித் தகுதியுள்ள அதிகாரியால் ஒரு பணியிட மாற்றம் உத்தரவிடப்பட்டால், அந்த முடிவை மறு ஆய்வு செய்வதற்கோ அல்லது பணியிட மாற்றம் செய்யப்பட்ட ஆசிரியரை பணியில் அமர்த்துவதா இல்லையா என்பதைத் தாங்களே தீர்மானிப்பதற்கோ நிர்வாகத்திற்கு அதிகாரம் இல்லை.

பெண் ஆசிரியரை பணியில் சேர்க்க மறுக்க அது ஒரு ஆண்கள் பள்ளி என்றும், ஒரு பெண் ஆசிரியருக்குத் தேவையான உள்கட்டமைப்பு வசதிகள் இல்லை என்றும் கூறும் காரணங்களை ஏற்க முடியாது. ஆண்கள் பள்ளியில் ஒரு பெண் ஆசிரியரை பணியமர்த்துவதை சட்டமோ அல்லது விதிகளோ தடை செய்யவில்லை. சட்டரீதியான தடை ஏதுமில்லாத நிலையில், பள்ளி நிர்வாகம் எழுப்பிய ஆட்சேபனைக்கு எந்தவொரு சட்ட அடிப்படையும் இல்லை.

சட்டப்பூர்வமான உத்தரவுகளைப் பின்பற்ற தவறும் நிறுவனத்திற்கான மானிய உதவியை நிறுத்திவைக்க அரசுக்கு சட்டம் அதிகாரம் அளிக்கிறது. எனவே மனுதாரரை இரண்டாவதாக ஒரு பள்ளிக்கு இடமாறுதல் செய்து பிறப்பித்த உத்தரவு ரத்து செய்யப்படுகிறது.

மனுதாரர் முதலில் பணிபுரிந்த பள்ளியில் ஒரு காலியிடம் ஏற்பட்டுள்ளது. அந்த பணியிடத்தில் மனுதாரரை நியமிக்கவும் பரிசீலிக்கலாம். இந்த நடைமுறையை 4 வாரத்தில் முடிக்க வேண்டும் என்று நீதிபதி உத்தரவில் கூறியுள்ளார்.

அரசு நிதியுதவி பெறும் தனியார் பள்ளிகள் அரசின் உத்தரவை செயல்படுத்த மறுக்க கூடாது: உயர் நீதிமன்றம்
சட்டவிரோத கிரானைட் குவாரி நடத்தி ரூ.277 கோடி மோசடி: வழக்கை ரத்து செய்ய ஐகோர்ட் மறுப்பு

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in