சட்டவிரோத கிரானைட் குவாரி நடத்தி ரூ.277 கோடி மோசடி: வழக்கை ரத்து செய்ய ஐகோர்ட் மறுப்பு

மதுரை உயர் நீதிமன்றம்
மதுரை உயர் நீதிமன்றம்
Updated on
1 min read

மதுரை: சட்டவிரோத கிரானைட் குவாரி நடத்தி ரூ.277 கோடி மோசடி செய்த வழக்கை ரத்து செய்ய உயர் நீதிமன்றம் மறுத்துவிட்டது.

மதுரை மேலூரைச் சார்ந்த ஹரிலால் நசீர், வடிவேலு, கமருதீன் உள்ளிட்டோர் உயர் நீதிமன்ற மதுரை அமர்வில் தாக்கல் செய்த மனுவில், “எங்கள் மீது சட்டவிரோதமாக கிரானைட் குவாரி நடத்தி அரசுக்கு பல கோடி ரூபாய் இழப்பை ஏற்படுத்தியதாக வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.

இந்த வழக்கில் மதுரை மாவட்ட கனிமவள முறைகேடுகள் குறித்து விசாரிக்கும் சிறப்பு நீதிமன்றத்தில் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டுள்ளது. இந்த குற்றப்பத்திரிகையை ரத்து செய்து உத்தரவிட வேண்டும்” என்று தெரிவிக்கப்பட்டிருந்தது.

மனுவை நீதிபதி விஜயகுமார் விசாரித்தார். பின்னர் நீதிபதி, “மதுரா கிரானைட் குவாரி நிறுவனம் என்ற பெயரில் கிரானைட் கற்கள் வெட்டி எடுக்க மனுதாரர்கள் உரிமம் பெற்றுள்ளனர். இவர்கள் கடந்த 2005 முதல் 2012 ஆண்டுக்கு இடைப்பட்ட காலத்தில் அரசு நிலத்தில் 69,000 கன மீட்டர் அளவிற்கு சட்டவிரோதமாக கிரானைட் வெட்டி எடுத்ததாகக் கூறப்படுகிறது.

இந்த கற்களின் மதிப்பு சுமார் ரூ.277.42 கோடி என வழக்கில் கூறப்பட்டுள்ளது. கிரானைட் குவாரி உரிமையாளர் உள்ளிட்ட 20-க்கும் மேற்பட்டோர் மீது வழக்கு பதிவு செய்து குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டுள்ளது. இவர்கள் மீதான குற்றச்சாட்டு என்பது அரசு நிலங்களில் அனுமதி பெறாமல் கிரானைட் குவாரி கற்கள் வெட்டி எடுக்கப்பட்டு அரசுக்கு சுமார் ரூ. 277 கோடி இழப்பு ஏற்படுத்தியது.

இதில் மனுதாரர்கள் மேலாளராக, ஊழியராக பணியாற்றியதால் இந்த குற்றச்சாட்டில் தங்களுக்கு தொடர்பு இல்லை எனக் கூறி வழக்கை ரத்து செய்யக் கோரியுள்ளனர். குற்றப்பத்திரிக்கையில் மனுதாரர்களுக்கு எதிராக வெளிப்படையான குற்றச்சாட்டுகள் வைக்கப்பட்டுள்ளது.

எனவே, இந்த விவகாரத்தில் விசாரணை நீதிமன்றம் முழுமையான விசாரணை நடத்தினால் மட்டுமே மனுதாரர்களின் பங்கு என்ன என்பது அறிய முடியும். இதனால் வழக்கை ரத்து செய்ய முடியாது. மனு தள்ளுபடி செய்யப்படுகிறது” என உத்தரவிட்டார்.

மதுரை உயர் நீதிமன்றம்
“எங்களுக்கு இந்தியாவின் ஆதரவு இருக்கிறது” - அமெரிக்காவுக்கு இஸ்ரேல் பிரதமர் பதிலடி

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in