

மதுரை: தமிழகத்தில் மூடப்படும் டாஸ்மாக் கடைகளின் பார்களை குத்தகை எடுத்தவர்களுக்கு பணத்தை திருப்பி அளிப்பது தொடர்பாக முடிவு எடுக்குமாறு அரசுக்கு உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
தூத்துக்குடியைச் சேர்ந்த ராஜேஷ், கண்ணன் உள்ளிட்ட பலர், உயர் நீதிமன்ற மதுரை அமர்வில் தாக்கல் செய்த மனுவில், மூடப்படும் டாஸ்மாக் கடைகளில் குத்தகை பணம் செலுத்தி பார்களை நடத்தி வருகிறோம். இதனை மூடுவதால் எங்களின் வாழ்வாதாரம் பாதிக்கப்படும். எனவே, குத்தகை காலம் முடியும் வரை டாஸ்மாக் கடைகளை மூடக்கூடாது அல்லது மூடப்பட்ட நாட்களுக்கான தொகையை திருப்பித்தர உத்தரவிட வேண்டும் எனக் கூறியிருந்தனர்.
இந்த மனுவை விசாரித்த நீதிபதி பரத சக்கரவர்த்தி, மதுக்கடைகளை மூடும் தமிழக அரசின் உத்தரவு வரவேற்கத்தக்கது.கடை மூடப்படும் நாட்களுக்கான குத்தகை தொகையை திரும்ப அளிப்பது தொடர்பாக அரசு பரிசீலித்து 2 வாரங்களில் முடிவெடுக்க வேண்டும் என உத்தரவிட்டு வழக்கை முடித்து வைத்தார்.