

விடுதலைப் போராட்ட வீரர் வீரபாண்டிய கட்டபொம்மனின் நினைவு தினத்தையொட்டி சென்னை லோக்பவனில் உள்ள அவரது படத்துக்கு ஆளுநர் ஆர்.வி.அர்லேகர் மலர் தூவி மரியாதை செலுத்தினார்.
சென்னை: விடுதலைப் போராட்ட வீரர் வீரபாண்டிய கட்ட பொம்மனின் 227-வது நினைவு நாள் நேற்று அனுசரிக்கப்பட்டது. இதையொட்டி, கிண்டி ஆளுநர் மாளிகையில் வைக்கப்பட்டிருந்த அவரது படத்துக்கு ஆளுநர் ராஜேந்திர விஸ்வநாத் அர்லேகர் மலர் தூவி மரியாதை செலுத்தினார்.
முதல்வர் மற்றும் பல்வேறு அரசியல்கட்சித் தலைவர்கள் வீரபாண்டிய கட்டபொம்மனை நினைவுகூர்ந்து புகழாரம் சூட்டினர்.
முதல்வர் விஜய்: ஆங்கிலேய ஆட்சியின் அடக்குமுறைக்கு அடிபணியாமல் உரிமைக்காகவும், சுயமரியாதைக்காகவும் இறுதிவரை போராடியவர் வீரபாண்டிய கட்டபொம்மன்.
அநீதிக்கு எதிராகக் குரல் கொடுக்கும் துணிவும், உரிமைகளைக் காக்கும் உறுதியும், தாய்மண்ணை போற்றும் உணர்வும் ஒவ்வொருவரிடமும் வளர வேண்டும் என்பதற்கு அவரது வாழ்க்கை, ஒரு வரலாற்று பாடமாகும்.
திமுக தலைவர் மு.க.ஸ்டாலின்: தூக்கு மேடைக்கு நடந்து செல்லும்போதும் துணிச்சலோடும், கர்வத்தோடும் சென்ற விடுதலை போராளி வீரபாண்டிய கட்டபொம்மன்.
மானம்தான் பெரிதென வாழ்ந்து, அந்நியர் ஆட்சிக்கு எதிரான கனலை மக்கள் மனதில் விதைத்த அவரது வீரத்துக்கு தலைவணங்குகிறேன். தமிழ்நிலத்தின் தன்மானம் காத்த தியாகி வீரபாண்டிய கட்டபொம்மன் வாழ்க.
அதிமுக பொதுச்செயலாளர் பழனிசாமி: ஆங்கிலேய ஏகாதிபத்தியத்துக்கு அடிபணிய மறுத்து, தாய்நாட்டின் சுதந்திரத்துக்காக தன் உயிரையே தியாகம் செய்த பாஞ்சாலங்குறிச்சியின் மாவீரர் வீரபாண்டிய கட்டபொம்மனின் நினைவு நாளில், தாய்நாடு காக்க மரண கயிற்றையே அரவணைத்துக் கொண்ட அவர்தம் தீரத்தையும், தியாகத்தையும் போற்றி வணங்குகிறேன்.
தமிழக பாஜக தலைவர் நயினார் நாகேந்திரன்: ஆங்கிலேயர்களின் அடக்குமுறைக்கும், அந்நிய ஆட்சிக்கும் அடிபணிய மறுத்து, தாய்நாட்டின் சுதந்திரத்துக்காக துணிச்சலுடன் போராடிய வீரபாண்டிய கட்டபொம்மனின் வீரமும், தியாகமும் இந்திய வரலாற்றில் என்றும் அழியாது இடம்பெறும்.
அமமுக பொதுச்செயலாளர் டிடிவி தினகரன்: ஆங்கிலேயர்களின் ஆதிக்கத்துக்கு அஞ்சாமலும், அடக்குமுறைக்கு அடிபணியாமலும், மண்ணின் உரிமைக்காகவும் மக்களின் விடுதலைக்காகவும் துணிந்து நின்ற மாவீரர் வீரபாண்டிய கட்டபொம்மன். அவரது வீரத்தையும் தியாகத்தையும் எந்நாளும் நினைவில் வைத்து வணங்கிடுவோம்.
வீ த லீடர்ஸ் தலைவர் அண்ணாமலை: ஆங்கிலேய ஏகாதிபத்தியத்துக்கு எதிராக அஞ்சாமல் நின்று, தாய்நாட்டின் சுதந்திரத்துக்காக இறுதிவரை போராடி, தன்னுயிரை தியாகம் செய்த வீரபாண்டிய கட்டபொம்மனின், துணிச்சலும், தியாகமும் வரலாற்றில் என்றும் நிலைத்திருக்கும்.
இதேபோல் எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதி, திமுக துணைப் பொதுச்செயலாளர் கனிமொழி எம்.பி. உள்ளிட்டோரும் வீரபாண்டிய கட்டபொம்மனை நினைவுகூர்ந்தனர்.