

காரைக்கால்: "புதுச்சேரியின் வளர்ச்சியை விரைவுபடுத்துவதில் அரசு கவனம் செலுத்தி வருகிறது” என காரைக்காலில் நடைபெற்ற புதுச்சேரி விடுதலை நாள் விழாவில் புதுச்சேரி வேளாண் மற்றும் விளையாட்டுத்துறை அமைச்சர் ஜி.என்.எஸ்.ராஜசேகரன் தெரிவித்தார்.
பிரெஞ்சு ஆதிக்கத்தின் கீழ் இருந்த புதுச்சேரி, காரைக்கால், மாகே, ஏனாம் ஆகிய பிராந்தியங்கள் 1954 நவ.1-ம் தேதி இந்தியாவுடன் இணைந்தன. அதனால் நவ.1-ம் தேதியன்று புதுச்சேரி விடுதலை நாளாக அரசு சார்பில் கொண்டாடப்பட வேண்டும் என பல்வேறு அமைப்புகள் வலியுறுத்தி வந்தன. அதனடிப்படையில் 2014-ம் ஆண்டு நவ.1 ம் தேதி முதல் ஆண்டு தோறும் விடுதலை நாள் விழா கொண்டாடப்பட்டு வருகிறது.
காரைக்கால் கடற்கரை சாலையில் இன்று நடைபெற்ற 72- வது புதுச்சேரி விடுதலை நாள் விழாவில், புதுச்சேரி வேளாண் மற்றும் விளையாட்டுத் துறை அமைச்சர் ஜி.என்.எஸ்.ராஜசேகரன் தேசியக் கொடியை ஏற்றி வைத்து, காவல் துறையினரின் அணிவகுப்பு மரியாதையை ஏற்றுக் கொண்டார். தொடர்ந்து அமைச்சர் ராஜசேகரன், சார் ஆட்சியர் பூஜா, மாவட்ட முதுநிலை காவல் கண்காணிப்பாளர் வினய் குமார் காட்கே ஆகியோர் சமாதானப் புறாக்களை பறக்கவிட்டனர்.
பின்னர் நிகழ்ச்சியில் உரையாற்றிய அமைச்சர் ஜி.என்.எஸ்.ராஜசேகரன், “காரைக்காலில் 30 படுக்கை வசதி கொண்ட ஆயுஷ் மருத்துவமனை, அரசு பொது மருத்துவமனையில் 50 படுக்கை வசதிகள் கொண்ட தீவிர சிகிச்சைப் பிரிவு புதிதாக அமைக்கப்பட்டு வருகின்றன. மேலும் காரைக்காலில் 400 மீ செயற்கை தடகள ஓடுகளம் அமைக்கும் பணி நடைபெறுகிறது.
காரைக்கால் மாவட்டம் தனிச்சிறப்பு மிக்க கலாச்சாரத்தை கொண்டிருப்பதோடு பல்வேறு விதமான பண்பாடுகள் சங்கமிக்கும் இடமாகவும் வளர்ச்சி அடைந்திருக்கிறது. புதுச்சேரி மாநிலத்தின் வளர்ச்சியை விரைவுபடுத்துவதிலும், மக்கள் நலனை பாதுகாப்பதிலும் அரசு அதிக கவனம் செலுத்தி வருகிறது.” என தெரிவித்தார்.
இந்த விழாவில் தியாகிகள் கவுரவிக்கப்பட்டனர். பள்ளி மாணவ, மாணவிகள் மற்றும் கலை பண்பாட்டுத்துறை சார்பில் வெளி மாநில கலைஞர்களின் கலை நிகழ்ச்சிகள் நடைபெற்றன. அணிவகுப்பில் சிறப்பிடம் பெற்றோருக்கு பரிசுகள் வழங்கப்பட்டன. தியாகிகள், அதிகாரிகள், மாணவர்கள், பொதுமக்கள் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.