இண்டியா கூட்டணியின் பிரம்மாண்ட பேரணி - டெல்லியில் குவிந்த ஏராளமான தொண்டர்கள்

14,000 துணை ராணுவத்தினர், போலீஸார் பாதுகாப்பு
இண்டியா கூட்டணியின் பிரம்மாண்ட பேரணி - டெல்லியில் குவிந்த ஏராளமான தொண்டர்கள்
Updated on: 
1 min read

புது டெல்லி: புது டெல்லியின் ராம்லீலா மைதானத்தில் இண்டியா கூட்டணியின் பிரம்மாண்ட பேரணி இன்று நடைபெறவுள்ளது. இதற்கான ஏற்பாடுகள் முழுவீச்சில் நடைபெற்று வருகின்றன. இதற்கான பாதுகாப்புப் பணிக்காக 14 ஆயிரம் துணை ராணுவத்தினர் மற்றும் போலீஸார் குவிக்கப்பட்டுள்ளனர்.

தேர்தல் முறைகேடுகளுக்காக தலைமைத் தேர்தல் ஆணையர் ஞானேஷ் குமார் பதவி விலகக் கோரி பல்வேறு மாநிலங்களில் இருந்தும் இண்டியா கூட்டணியினர் இன்று தலைநகர் டெல்லிக்கு வருகை தந்துள்ளனர்.

ராம்லீலா மைதானத்தில் நடைபெறும் இண்டியா கூட்டணியின் பேரணிக்காக ‘சலோ டெல்லி’ (டெல்லி நோக்கிச் செல்வோம்) என்று முழக்கமிடும் சுவரொட்டிகள் ஒட்டப்பட்டுள்ளன. அங்கு பாதுகாப்புப் பணிக்காக 14 ஆயிரம் துணை ராணுவம் மற்றும் போலீஸார் குவிக்கப்பட்டுள்ளனர். ‘ஸ்டூடண்ட்ஸ் ஃபெடரேஷன் ஆஃப் இந்தியா’ (SFI) அமைப்பும் இந்தப் பேரணிக்கு ஆதரவு அளித்துள்ளது.

இண்டியா கூட்டணியின் பேரணியை முன்னிட்டு, இன்று மத்திய டெல்லியில் போக்குவரத்து மாற்றங்கள் செய்யப்பட்டுள்ளன. இந்தப் பேரணிக்காக இன்று (ஞாயிற்றுக்கிழமை) அதிகாலையிலேயே டெல்லியின் ராம்லீலா மைதானத்தில் பல்வேறு கூட்டணி கட்சிகளின் ஆதரவாளர்கள் திரளத் தொடங்கினர். தலைநகரின் பிற பகுதிகளிலும் கட்சிகளின் தொண்டர்கள் ஒன்று கூடினர்.

சமாஜ்வாதி கட்சித் தொண்டர்கள் அக்கட்சியின் தலைவர் அகிலேஷ் யாதவின் இல்லத்திற்கு வெளியே கூடினர். காங்கிரஸ் ஆதரவாளர்கள் இமாச்சல பவனுக்கு வெளியே ஒன்றுகூடி, அங்கிருந்து பேரணி நடைபெறும் இடத்திற்குப் புறப்பட்டனர். இந்த போராட்டத்திற்காக பல்வேறு மாநிலங்களிலிருந்து தங்கள் கட்சித் தொண்டர்களை அந்தந்த கட்சிகள் திரட்டி வந்துள்ளன.

ராம்லீலா மைதானத்தில் நடைபெறவுள்ள இண்டியா கூட்டணியின் பேரணிக்காக, மத்திய டெல்லியில் போக்குவரத்து கட்டுப்பாடுகள், வாகன வழித்தட மாற்றங்கள் மற்றும் பேருந்து வழித்தட மாற்றங்கள் அமல்படுத்தப்பட்டுள்ளன. இந்தப் பேரணி காலை 10 மணி முதல் மாலை 5 மணி வரை நடைபெறவுள்ள நிலையில், மாற்று வழிகள் மற்றும் பொதுப் போக்குவரத்து குறித்த அறிவிப்புகளை போலீஸார் வெளியிட்டுள்ளனர்.

இண்டியா கூட்டணியின் பிரம்மாண்ட பேரணி - டெல்லியில் குவிந்த ஏராளமான தொண்டர்கள்
ராம் லீலா மைதானத்தில் இண்டியா கூட்டணி இன்று பேரணி: ஏஐஎஸ்ஏ தலைவர் நேஹா போரா ஆதரவு

X