சவுக்கு சங்கருக்கு எதிரான குண்டர் சட்டம் ரத்து - உடனடியாக விடுவிக்க அரசு உத்தரவு

சவுக்கு சங்கருக்கு எதிரான குண்டர் சட்டம் ரத்து - உடனடியாக விடுவிக்க அரசு உத்தரவு
Updated on
1 min read

சென்னை: சவுக்கு சங்கருக்கு எதிரான குண்டர் சட்டம் ரத்து செய்யப்படுவதாகத் தெரிவித்துள்ள தமிழக அரசு, அவரை உடனடியாக விடுவிக்க உத்தரவிட்டுள்ளது.

பிரபல யூடியூபரான சவுக்கு சங்கர், கடந்த திமுக ஆட்சியில் முறைகேடுகள் மற்றும் ஊழல்கள் குற்றச்சாட்டுகளை முன்வைத்து வீடியோக்களை தனது யூடியூப் பக்கத்தில் பதிவேற்றி இருந்தார். மேலும், அதிகாரிகளின் அதிகார துஷ்பிரயோகம் செய்வதாகவும், அவர்கள் ஊழல்களில் ஈடுப்பட்டதாகவும் கூறிவந்தார்.

இதனிடையே, அவர் மீது பல்வேறு வழக்குகள் பதியப்பட்டன. பலமுறை கைது செய்யப்பட்ட சவுக்கு சங்கர், ஒவ்வொரு முறையும் ஜாமீன் பெற்று வெளியே வந்தார். இந்நிலையில், கடந்த ஏப்ரல் 9-ம் தேதி சவுக்கு சங்கர் மீது குண்டர் சட்டம் போடப்பட்டது. இது தொடர்பான உத்தரவை அப்போதைய பெருநகர சென்னை காவல் ஆணையர் பிறப்பித்திருந்தார்.

இந்நிலையில், சவுக்கு சங்கர் மீதான குண்டர் சட்டத்தை ரத்து செய்து தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது. அரசு வெளியிட்டுள்ள உத்தரவில், ‘சவுக்கு சங்கர் தடுப்புக் காவலில் (குண்டர் சட்டம்) வைக்கப்பட்டதற்கான காரணங்கள் குறித்த விவரங்கள், ஆலோசனை வாரியத்திடம் சமர்ப்பிக்கப்பட்டன. இது குறித்து ஆய்வு செய்த ஆலோசனை வாரியம், சவுக்கு சங்கரை தடுப்புக் காவலில் வைப்பதற்கு போதுமான காரணம் இல்லை என்று அறிவித்தது.

அதன்படி, சவுக்கு சங்கருக்கு எதிராக பிறப்பிக்கப்பட்ட தடுப்புக் காவல் உத்தரவை அரசு ரத்து செய்கிறது. வேறு ஏதேனும் சட்டத்தின் கீழ் அவர் தடுப்புக் காவலில் வைக்கப்பட்டிருந்தாலோ அல்லது ஏதேனும் நீதிமன்றத்தால் குற்றவாளி என தீர்ப்பளிக்கப்பட்டு தண்டனை அனுபவித்து வந்தாலோ தவிர, போதுமான காரணம் இல்லாததால் தடுப்புக் காவலில் இருந்து அவர் உடனடியாக விடுவிக்கப்பட வேண்டும்’ என்று அந்த உத்தரவில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த உத்தரவின் நகல்கள், சென்னை பெருநகர காவல் ஆணையர், சவுக்கு சங்கர், புழல் மத்திய சிறையின் கண்காணிப்பாளர், ஆலோசனைக் குழு தலைவர், காவல் துறைத் தலைவர், சிறைத்துறை டிஜிபி ஆகியோருக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளன. இந்த உத்தரவை அடுத்து சவுக்கு சங்கர் விரைவில் விடுவிக்கப்படுவார் என எதிர்பார்க்கப்படுகிறது.

சவுக்கு சங்கருக்கு எதிரான குண்டர் சட்டம் ரத்து - உடனடியாக விடுவிக்க அரசு உத்தரவு
சாதிவாரி கணக்கெடுப்பு நடத்துவதில் தவறு ஏதுமில்லை: உச்ச நீதிமன்றம்

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in