

புதுடெல்லி: நாடு முழுவதும் மக்கள்தொகை கணக்கெடுப்புடன் சாதிவாரி கணக்கெடுப்பையும் சேர்த்து நடத்தும் மத்திய அரசின் முடிவை எதிர்த்து தாக்கல் செய்யப்பட்ட மனுவை உச்ச நீதிமன்றம் தள்ளுபடி செய்து உத்தரவிட்டுள்ளது.
மக்கள்தொகை கணக்கெடுப்புடன் சாதிவாரி கணக்கெடுப்பையும் சேர்த்து நடத்த தடை விதிக்கக் கோரி சுதாகர் கும்முலா என்பவர் உச்ச நீதிமன்றத்தில் பொதுநல வழக்கு தொடுத்திருந்தார்.
இந்த வழக்கை விசாரித்த தலைமை நீதிபதி சூர்ய காந்த், நீதிபதிகள் ஜாய்மால்யா பக்சி, விபுல் பஞ்சோலி ஆகியோர் அடங்கிய அமர்வு, இன்று மனுவை தள்ளுபடி செய்து உத்தரவிட்டது.
உச்ச நீதிமன்றம் தனது உத்தரவில், ‘மக்கள் தொகை கணக்கெடுப்பு என்பது சாதிவாரியாக இருக்க வேண்டுமா, இல்லையா என்பது போன்ற அனைத்தும் கொள்கை முடிவுகள். இதில் என்ன தவறு இருக்கிறது?
பிற்படுத்தப்பட்ட வகுப்பில் எத்தனை பேர் உள்ளனர், அவர்களுக்கு எத்தகைய திட்டங்கள் மேற்கொள்ளப்பட வேண்டும் என்பதை அரசு அறிந்திருக்க வேண்டும். இது கொள்கை ரீதியான அதிகார வரம்புக்குள் உள்ளது.
எனவே, இதுபோன்ற தரவுகளைச் சேகரிப்பதில் தவறில்லை. இந்த விவகாரத்தில் நீதிமன்றம் தலையிடாது’ என தெரிவித்துள்ளது.
சாதிவாரி கணக்கெடுப்பு பின்புலம்:
இந்தியாவில் 10 ஆண்டுகளுக்கு ஒருமுறை மக்கள்தொகை கணக்கெடுப்பு நடத்தப்பட்டு வருகிறது. கடைசியாக 2011-ம் ஆண்டு மக்கள்தொகை கணக்கெடுப்பு நடத்தப்பட்டது. இதற்கு அடுத்தபடியாக 2021-ம் ஆண்டு மக்கள்தொகை கணக்கெடுப்புக்கான பணிகள் 2020 ஏப்ரல் மாதத்தில் தொடங்கியிருக்க வேண்டும். ஆனால், கரோனா பெருந்தொற்று பரவியதையடுத்து, இந்த பணி தள்ளிவைக்கப்பட்டது. அதன் பிறகு மக்களவைத் தேர்தல் நடைபெற்றதால் மீண்டும் தள்ளிப்போனது.
இதுவரை ஆதி திராவிடர்கள் (எஸ்.சி.), பழங்குடியினத்தவர் (எஸ்.டி.), இதர பிற்படுத்தப்பட்டோர் (ஓபிசி) மற்றும் பொது பிரிவினர் என 4 பிரிவுகளின் அடிப்படையில் மட்டுமே மக்களை அரசு வகைப்படுத்தி வருகிறது. இதன் அடிப்படையில்தான் தேசிய அளவில் அரசு வேலைவாய்ப்பு மற்றும் கல்வி நிறுவன சேர்க்கையில் இடஒதுக்கீடு வழங்கப்பட்டு வருகிறது.
மக்கள் தொகை கணக்கெடுப்புடன் சாதிவாரி மக்கள்தொகை கணக்கெடுப்பையும் நடத்த வேண்டும் என்று காங்கிரஸ், திமுக உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் வலியுறுத்தி வந்தன. சாதி அடிப்படையில் அரசு வேலை வாய்ப்பு, கல்வி நிறுவன சேர்க்கையில் இடஒதுக்கீடு வழங்க வேண்டும் என்றும் சில கட்சிகள் வலியுறுத்தி வந்தன. இந்நிலையில், நாடு முழுவதும் மக்கள்தொகை கணக்கெடுப்புடன் சாதிவாரி கணக்கெடுப்பையும் சேர்த்து நடத்த அரசியல் விவகாரங்களுக்கான மத்திய அமைச்சரவை கூட்டத்தில் கடந்த ஆண்டு மே மாதம் ஒப்புதல் வழங்கப்பட்டது நினைவுகூரத்தக்கது.
2027-ம் ஆண்டு மக்கள்தொகைக் கணக்கெடுப்பு என்பது அதிகாரப்பூர்வ 16-வது தேசிய கணக்கெடுப்பாகும். இது 1931-க்குப் பிறகு விரிவான சாதிவாரி கணக்கெடுப்புடன் கூடிய மக்கள்தொகை கணக்கெடுப்பாகும். அதோடு, இது நாட்டின் முதல் முழுமையான டிஜிட்டல் கணக்கெடுப்பாகும் என்பது கவனிக்கத்தக்கது.