

படம்: நா.தங்கரத்தினம்
ஒட்டன்சத்திரம்: “தமிழகத்தில் கொலை, கொள்ளை, திருட்டு, பாலியல் தொல்லை அதிகரித்துள்ளது. மகளிருக்கு பாதுகாப்பு கொடுக்க முடியாத திமுக அரசை தூக்கி எறிய வேண்டிய கடமை மகளிருக்கு இருக்கிறது” என்று தமாகா தலைவர் ஜி.கே.வாசன் தெரிவித்துள்ளார்.
ஒட்டன்சத்திரம் தொகுதியில் அதிமுக கூட்டணி சார்பில் போட்டியிடும் தமாகா வேட்பாளர் விடியல் எஸ்.சேகரை ஆதரித்து, அக்கட்சியின் தலைவர் ஜி.கே.வாசன் செவ்வாய்கிழமை (ஏப்.14) காலை பிரச்சாரத்தில் ஈடுபட்டார். அப்போது அவர் பேசுகையில், “மக்கள் விரோத, கொடுத்த வாக்குறுதிகளை நிறைவேற்றாமல் மக்களின் கழுத்தை அறுத்த திமுக அரசை வீட்டிற்கு அனுப்ப வேண்டியது அவசியம்.
அவர்களுக்கு தண்டனை ஆட்சி மாற்றத்தை கொடுப்பது தான். விலைவாசி உயர்வு, குப்பைக்கு வரி என மக்களின் மீது சுமையை அதிகரித்தது திமுக அரசு. மகளிர் நாட்டினுடைய கண்கள். ஆனால், மகளிருக்கு தமிழகத்தில் பாதுகாப்பில்லை. தமிழகத்தில் கொலை, கொள்ளை, திருட்டு, பாலியல் தொல்லை அதிகரித்துள்ளது. மகளிருக்கு பாதுகாப்பு கொடுக்க முடியாத திமுக அரசை தூக்கி எறிய வேண்டிய கடமை மகளிருக்கு இருக்கிறது.
தமிழகத்தில் எந்த துறையிலும் முன்னேற்றம் இல்லை. திமுக அரசு, மத்திய அரசை எதிரியாக பார்க்கிறது. இந்தியாவை மோடி வல்லரசாக மாற்றுவார். இந்தியா பாதுகாப்பான நாடாக இருக்கிறது என்றால் அதற்கு மோடி தான் காரணம். அதிமுக ஆட்சிக்கு வந்தவுடன் தமிழகத்தில் 3 மாதத்தில் போதைப் பொருட்கள் ஒழிக்கப்படும். மக்கள் விரோத, தீய சக்தியை வீட்டுக்கு அனுப்ப வேண்டும்.
கொடுத்த வாக்குறுதிகளை நிறைவேற்றாமல் மக்களை சாலையில் போராட வைத்தது திமுக அரசு. ஜனநாயகத்தை குழித்தோண்டி புதைத்த திமுக அரசு. 30 ஆண்டுகளாக ஒட்டன்சத்திரம் தொகுதியை சிறையில் வைத்திருக்கும் அமைச்சர் (அர.சக்கரபாணி) மீது மக்கள் கடும் கோபத்தில் இருக்கிறார்கள். ஒட்டன்சத்திரத்தில் இருந்து முருங்கையை வெளிநாடுகளுக்கு ஏற்றுமதி செய்ய நடவடிக்கை எடுக்கப்படும். ஒட்டன்சத்திரத்தில் காய்கறிகள் ஏற்றுமதி மையம் அமைக்கப்படும்” இவ்வாறு அவர் பேசினார்.