ஜெம் வீரமணி | கோப்புப் படம்
சென்னை: போக்சோ வழக்கில் கைது செய்யப்பட்ட ஜெம் வீரமணி, சாந்தி, மகேந்திர சிம்மன், கணேசன் ஆகியோரின் போலீஸ் காவல் முடிந்ததை அடுத்து, அவர்கள் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டனர்.
சிறுமிகளை பாலியல் வன்கொடுமை செய்ததாக, போக்சோ வழக்கில் கைது செய்யப்பட்ட ஜெம் கிரானைட் அதிபர் வீரமணியும், அவருக்கு உடந்தையாக இருந்ததாக சாந்தி, அவரது கணவர் மகேந்திர சிம்மன், உதவியாளர் கணேசன் ஆகியோர் கைது செய்யப்பட்டனர்.
இந்நிலையில் வீரமணி, சாந்தி, மகேந்திர சிம்மன், கணேசன் ஆகியோரை 2 நாள் போலீஸ் காவலில் எடுத்து விசாரிக்க சென்னை போக்சோ சிறப்பு நீதிமன்றம், மத்திய குற்றப்பிரிவு போலீஸாருக்கு அனுமதி அளித்து உத்தரவிட்டிருந்தது. இவர்களிடம் துணை போலீஸ் கமிஷனர் கீதாஞ்சலி, உதவி கமிஷனர் ராஜலட்சுமி ஆகியோர் விசாரணை நடத்தினர்.
போலீஸ் காவல் இன்றுடன் முடிவடைந்ததை அடுத்து, ஜெம் வீரமணி உள்ளிட்ட நால்வரும் நீதிபதி எஸ்.பத்மா முன்பு போலீஸாரால் ஆஜர்படுத்தப்பட்டனர். இதையடுத்து, அவர்கள் நால்வரையும் மீண்டும் நீதிமன்றக் காவலில் புழல் சிறையில் அடைக்க நீதிபதி உத்தரவிட்டார்.