

பொள்ளாச்சி: பொள்ளாச்சியை அடுத்த நெகமம் அருகே கார் மீது லாரி மோதியதில் கணவன், மனைவி உள்பட 4 பேர் உயிரிழந்தனர்.
சேலம் மாவட்டம், காடையம்பட்டியைச் சேர்ந்தவர் தனபால் (37). இவரும், மனைவி மேனகா (35), மகள் கனிஷ்கா (17), மகன் சுர்ஜித் (12) மற்றும் மேனகாவின் சகோதரரின் மகள் சினேகா (23) ஆகியோரும் வால்பாறைக்கு சுற்றுலா வந்துவிட்டு நேற்று மதியம் சொந்த ஊர் புறப்பட்டனர். பொள்ளாச்சியில் இருந்து பல்லடம் நோக்கி நேற்று மதியம் காரில் சென்று கொண்டிருந்தனர்.
நெகமம் அருகே வந்தபோது, எதிரே வந்த லாரி கட்டுப்பாட்டை இழந்து கார் மீது மோதியது. இதில் தனபால், மேனகா, சினேகா ஆகியோர் படுகாயமடைந்து சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். காயத்துடன் உயிருக்கு போராடிக் கொண்டிருந்த கனிஷ்கா மற்றும் சுர்ஜித் ஆகியோரை அருகில் இருந்தவர்கள் மீட்டு, பொள்ளாச்சி அரசு மருத்துவமனைக்கு அனுப்பினர். ஆனால் வழியிலேயே கனிஷ்கா உயிரிழந்தார். காயமடைந்த சுர்ஜித் கோவை அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
தகவலறிந்து பொள்ளாச்சி துணை காவல் கண்காணிப்பாளர் நவீன்குமார் சம்பவ இடத்தில் விசாரணை நடத்தினார். உயிரிழந்தவர்களின் உடல்கள் உடற்கூராய்வுக்காக மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டன. நெகமம் போலீஸார் வழக்கு பதிந்து லாரி ஓட்டுநர் கிருஷ்ணகிரியைச் சேர்ந்த சரவணனை கைது செய்தனர்.