

முன்னாள் அமைச்சர் ராஜேந்திர பாலாஜி
சிவகாசி: "லயோலா கல்லூரி முன்னாள் மாணவர்கள் என்ற பெயரில் கருத்து கணிப்பு வெளியிடுபவர்களை எனக்குத் தெரியும். இது திமுக போடும் நாடகம். மக்களிடையே அது எடுபடாது" என முன்னாள் அமைச்சர் ராஜேந்திர பாலாஜி தெரிவித்துள்ளார்.
சிவகாசியில் அதிமுக பூத் கமிட்டி நிர்வாகிகள் ஆலோசனை கூட்டம் ஞாயிற்று கிழமை நடைபெற்றது. இதில் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்ட முன்னாள் அமைச்சர் ராஜேந்திர பாலாஜி பேசியதாவது: 2026- ம் ஆண்டு அதிமுகவுக்கானது. விருதுநகர் மாவட்டத்தில் 7 தொகுதிகளிலும் வெற்றி பெற்று பொதுச்செயலாளருக்கு வலு சேர்க்க வேண்டும்.
ராஜபாளையத்தில் 62, ஶ்ரீவில்லிபுத்தூரில் 68, விருதுநகரில் 90, சிவகாசியில் 59 பேர் என தமிழகம் முழுவதும் 234 தொகுதிகளுக்கு 10 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் விருப்ப மனு தாக்கல் செய்துள்ளனர். பழனிசாமி தலைமையில் அதிமுக 100 சதவீத வளர்ச்சியை பெற்றுள்ளது. களத்திலேயே அதிமுகவுக்கும் திமுகவுக்கும் இடையே தான் போட்டி. வருபவர்கள் வரட்டும்.
இருப்பவர்களை வைத்துக் கொண்டு வெற்றி பெறும் வல்லமை பொதுச்செயலாளர் பழனிசாமிக்கு உண்டு. நாம் நினைக்கின்ற கூட்டணியை பொதுச் செயலாளர் அமைக்க உள்ளார். பிரச்சினைகள் தீர்ந்து, வெற்றியை நோக்கி நமது கூட்டணி நகர்ந்து கொண்டிருக்கிறது. அதனால் எந்த ஐயமும் வேண்டாம் வெற்றி அதிமுகவுக்கு தான்.
திமுக ஆட்சியாளர்களால் என் மீது பல்வேறு வழக்குகள் நெருக்கடிகள் வந்த போது, அதிமுகவையும் தலைமையையும் விட்டுக் கொடுத்து பேசியது கிடையாது. திமுக ஆட்சியால் நாம் மட்டுமல்ல தமிழக மக்களும் பாதிக்கப்பட்டுள்ளனர். நாங்கள் தான் திமுகவை தோற்கடிக்க கூடியவர்கள், நாங்கள் ஆதரித்தால் தான் ஆட்சி அமைக்க முடியும், புதிய வரலாறு, வெளிச்சமான தலைவர் என கூறுபவர்களுக்கு 234 தொகுதிகளிலும் வேட்பாளர்களை நிறுத்தும் பலம் உள்ளதா.
பூத் அமைப்பே இல்லாத சிலர் சித்து விளையாட்டை விளையாடி வருகின்றனர். தேர்தல் களம் என்பது அதிமுகவுக்கும் திமுகவுக்கும் இடையே தான். திரையில் பார்த்தவர்களை நேரில் பார்க்க ஆசைப்படுவது இயல்பு. யார் வந்தாலும் கூட்டம் கூடும். லயோலா கல்லூரி முன்னாள் மாணவர்கள் என்ற பெயரில் கருத்து கணிப்பு வெளியிடுபவர்களை எனக்குத் தெரியும். இது திமுக போடும் நாடகம். மக்களிடையே அது எடுபடாது. இந்த கருத்துக் கணிப்பை பொய்யாக்கி அதிமுக - பாஜக கூட்டணி வெற்றி பெற நாம் உழைக்க வேண்டும். இவ்வாறு அவர் பேசினார்.