

அதிமுக செய்தித் தொடர் பாளரும், முன்னாள் எம்எல்ஏ வுமான அண்ணாத்துரை வெளியிட்ட அறிக்கை: வரும் சட்டப்பேரவைத் தேர்தலுக்காக, லயோலா கல்லூரியின் முன்னாள் மாணவர்கள் நடத்திய கருத்துக் கணிப்புகள் வெளியிடப்பட்டுள்ளன. அதில் 234 தொகுதிகளிலும் கருத்துக் கணிப்பு எடுத்ததாகவும், முதல் இடத்தில் திமுகவும், 2-வது இடத்தில் த.வெ.க.வும், 3-வது இடத்தில் அதிமுகவும் இருப்பதாகக் கூறியுள்ளனர்.
லயோலா கல்லூரி முன்னாள் மாணவர்கள் அமைப்பு அனைத்து கருத்துக் கணிப் பிலும் திமுகதான் வெற்றி பெறும் என வெளியிடுவார்கள். ஆனால், அவர்கள் வெளியிட்ட கருத்துக் கணிப்புகளுக்கு மாறாக, அதிமுக மகத்தான வெற்றிபெற்று வந்துள்ளது.
தற்போது, ஒரு தொகுதிக்கு 344 பேர் வீதம், 234 தொகுதிகளிலும் கருத்துக் கணிப்பு எடுத்ததாகச் சொல்லப் படுகிறது. ஒரு தொகுதிக்கு 2 முதல் 3 லட்சத்துக்கும் அதிகமான வாக்காளர்கள் உள்ளனர். அதிலும், இவர்கள் கருத்துக் கணிப்பு எடுக்கும் போது, 97 லட்சம் போலி வாக் காளர்கள் எஸ்ஐஆர் மூலம் நீக்கப்பட்டுள்ளனர். இந்த கருத்துக்கணிப்பு உண்மையான வாக்காளர்களிடம் எடுக்கப் பட்டதா அல்லது போலி வாக் காளர்களிடம் எடுக்கப்பட்டதா? கருத்துக் கணிப்பு என்ற பெயரில் போலி நாடகத்தை அரங்கேற்றியுள்ளனர். திமுக அரசு மீது மக்கள் கொதித்துப் போய் உள்ளனர் என அதில் தெரிவித்துள்ளார்.