வேலை வாங்கித் தருவதாக மோசடி திமுக முன்னாள் அமைச்சர் சிவசங்கரிடம் விசாரணை

வேலை வாங்கித் தருவதாக மோசடி திமுக முன்னாள் அமைச்சர் சிவசங்கரிடம் விசாரணை
Updated on
1 min read

சென்னை: தமிழக போக்குவரத்து துறையில் வேலை வாங்கித் தருவதாக கூறி ரூ.23 லட்சம் மோசடி நடைபெற்ற வழக்கில் கடந்த 24-ம் தேதி அரியலூரைச் சேர்ந்த இளஞ்செழியன் கைது செய்யப்பட்டார்.

ஓய்வு பெற்ற காவல் உதவி ஆய்வாளர் சீனிவாசன் அளித்த புகாரில் முன்னாள் அமைச்சர் சிவசங்கருக்கும் இந்த மோசடியில் தொடர்பு இருப்பதாக புகாரில் தெரிவித்ததன் பேரில் முதல் தகவல் அறிக்கையில் சிவசங்கர் தொடர்பான தகவல்கள் இடம் பெற்று இருந்தது.

இதனை அடுத்து சென்னை மத்திய குற்றப்பிரிவு போலீஸார் திமுக முன்னாள் போக்குவரத்து துறை அமைச்சர் சிவசங்கரை ஜூலை 1-ம் தேதி விசாரணைக்கு நேரில் ஆஜராகுமாறு சம்மன் அனுப்பி இருந்தனர்.

அதனை ஏற்று சிவசங்கர் நேற்று காலை 10 மணி அளவில் ஆஜரானார். அவரிடம் உதவி ஆணையர் திருநாவுக்கரசு விசாரணை நடத்தினார். இளஞ் செழியனிடமும் விசாரணை நடத்தப்பட்டது. அவர்கள் இருவரையும் ஒரே அறையில் வைத்து மாறி மாறி கேள்வி கேட்டு விசாரித்தனர். சிவசங்கரிடம் மதியம் 2 மணி வரை 4 மணிநேரம் விசாரணை நடந்தது.

பின்னர் செய்தியாளர்களிடம் சிவசங்கர் கூறியதாவது:

பொய் புகார்

இந்த வழக்கில் என் மீது பொய்யான குற்றச்சாட்டு கூறப்பட்டுள்ளது. இளஞ்செழியனுக்கும் எனக்கும் எவ்வித தொடர்பும் இல்லை. புகார் கொடுத்துள்ள சீனிவாசனையும் எனக்கு தெரியாது.

அவரை நான் சந்திக்கவும் இல்லை. விசாரணையில் போலீஸார் கேட்ட கேள்விகளுக்கு நான் முறையாக பதிலளித்தேன். விசாரணைக்கு அழைத்தால் மீண்டும் ஆஜராவேன். இந்த வழக்கை சட்டப்படி சந்திப்பேன். இவ்வாறு அவர் கூறினார்.

வேலை வாங்கித் தருவதாக மோசடி திமுக முன்னாள் அமைச்சர் சிவசங்கரிடம் விசாரணை
பொதுப்பணித் துறையில் லஞ்சம் கொடுத்து ஏமாந்தவர்கள் புகார் தரலாம்: அமைச்சர் ஆதவ் அர்ஜுனா அறிவுறுத்தல்

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in