“மிசா கொடுமைகளை முதல்வர் விஜய் அரை மணி நேரம் தாங்குவாரா?” - கே.பாலகிருஷ்ணன்

திண்டிவனத்தில் செய்தியாளிடம் பேசிய மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் முன்னாள் மாநில செயலாளர் கே.பாலகிருஷ்ணன்

திண்டிவனத்தில் செய்தியாளிடம் பேசிய மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் முன்னாள் மாநில செயலாளர் கே.பாலகிருஷ்ணன்

Updated on
2 min read

விழுப்புரம்: “மிசா கொடுமைகளை அரை மணி நேரம் தாங்குவாரா?” என கேள்வி எழுப்பி, முதல்வர் விஜய்யின் பதிலுரைக்கு மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் முன்னாள் மாநிலச் செயலாளர் கே.பாலகிருஷ்ணன் கண்டனம் தெரிவித்துள்ளார்.

விழுப்புரம் மாவட்டம் திண்டிவனத்தில் செய்தியாளர்களிடம் இன்று அவர் பேசும்போது, “இந்திய வானவியல் ஆராய்ச்சி உட்பட பல்வேறு ஆராய்ச்சிகளுக்கு பயன்படும் இஸ்ரோ அமைப்பை தனியாருக்கு தாரை வார்க்க மத்திய அரசு முடிவு செய்துள்ளது. ஊழியர்கள் எதிர்ப்பு தெரிவித்தபோது, இஸ்ரோவை தனியாருக்கு வழங்கவில்லை, ஏவப்படும் ராக்கெட்டுகளைதான் தனியார் வசம் கொடுக்க உள்ளோம் என்கிறார்கள். ராக்கெட் ஏவுவதை தனியாருக்கு வழங்கிவிட்டால், இஸ்ரோவின் பணி என்ன?

நாடாளுமன்ற கூட்டத்தில், ஒரு நாள் கூட மக்கள் பிரச்சினை மற்றும் எதிர்க்கட்சிகளின் கருத்தை கேட்டு, விவாதம் நடத்தி, பதில் சொல்லும் நிலையில் மத்திய அரசு இல்லை. 25 நாட்கள் நடைபெற்ற நாடாளுமன்ற கூட்டத்தில் ஒரு நாள் கூட பிரதமர் மோடி மற்றும் உள்துறை அமைச்சர் வரவில்லை.

காய்கறி, மளிகை பொருட்களின் விலை உயர்ந்துள்ளது. ஒரு கிலோ அரிசி ரூ.35 கூடியிருக்கிறது. இது தொடர்பாக மத்திய, மாநில அரசுகள் என்ன செய்கிறது என்று தெரியவில்லை. பதுக்கல் இருப்பதால் விலை உயர்ந்து வருவதாக வணிகர்கள் கூறுகின்றனர். பதுக்கலை ஏன் தடுக்கவில்லை. விலைவாசி உயர்வை கட்டுப்படுத்த வேண்டும், மக்களை பாதுகாக்க வேண்டும் என்ற அக்கறை இல்லாமல் மத்திய, மாநில அரசுகள் உள்ளன.

தமிழக சட்டப்பேரவையில் மக்களின் பிரச்சினைகளுக்கு தீர்வு காணும் வகையில் ஆழமாக பேசவில்லை. கஷ்டப்பட்டு விவசாயி விளைவிக்கும் நெல்லை கொள்முதல் செய்யாததால், மழையில் நனைந்து வீணாகிறது. கொள்முதல் செய்த நெல்லை கூட பாதுகாக்க முடியாத நிலையில் தமிழக அரசு உள்ளது.

மேம்போக்காக பேசினாலும், மக்கள் கேட்பார்கள் என மற்ற ஆட்சியை போன்று தவெக ஆட்சியும் இருக்கிறது. இது தொடர்பாக பேச, சட்டபேரவையில் வழி இல்லை. தனிப்பட்ட விரோதங்களை தீர்த்துக் கொள்வது போல பேசுகிறார்கள்.

உடல்மொழியில் நியாயமில்லை:

காவல்துறை மானிய கோரிக்கை மீது முதல்வர் விஜய் பதில் சொல்கிறார். எதிர்க்கட்சிகள் முன்வைக்கும் விமர்சனங்களுக்கு முதல்வர் நிதானமாக பதில் சொல்ல வேண்டும். கொலையை எதிர்க்கட்சியினர் சுட்டிக்காட்டதான் செய்வார்கள். அதனால் அவர்கள் மீது பரஸ்பர பழியும், குற்றத்தையும் சுமத்துவது சரியா? இது என்ன பட்டிமன்றமா?

முதல்வர் விஜயின் உடல் மொழி நியாயமில்லை. 8 கோடி மக்களின் முதன்மை பிரதிநிதியாக உள்ள முதல்வர் விஜய்யே இப்படி பேசினால், அமைச்சர்கள் மற்றும் எம்எல்ஏக்கள் எப்படி பேசவார்கள்? உடல்மொழி கூட பொருத்தமாக அமையவில்லை என்பது வருத்தம்.

காவல் துறை மானிய கோரிக்கையில் காவல் துறை சம்பந்தமாக பேசினால் போதும். ஊழல் குற்றச்சாட்டை பேசுவதற்கு பொதுக் கூட்டமா? ஊழல் குற்றச்சாட்டுக்கு ஆதாரம் இருக்கிறது என சட்டப்பேரவையில் கூறுவதால் என்ன பலன்? ஆதாரம் இருந்து வழக்கு தொடர்ந்து தண்டனை பெற்று கொடுக்கலாம். அமலாக்கத் துறை பதிவு செய்துள்ள வழக்குகள் அனைத்தும் உண்மை என கூற முடியாது. செந்தில் பாலாஜி மீது ஊழல் குற்றச்சாட்டு இருப்பது எல்லோருக்கும் தெரிந்ததுதான். அமலாக்கத் துறை வழக்கை முதல்வர் விஜய் படித்து காட்ட வேண்டிய அவசியம் என்ன?

மிசா தாக்குதலை நியாயப்படுத்துவதா?

அவசர நிலை என்பது துயரமான சம்பவம். நாட்டில் அரை சர்வாதிகார ஆட்சி நடைபெற்றது. அடிப்படை உரிமைகளை பறித்தனர். யாரையும் கைது செய்யலாம் என்ற நிலை இருந்தது. சிறைச் சாலைகள் கொடூரமான அடக்குமுறை ஆயுதமாக பயன்படுத்தப்பட்டது.

தமிழக சிறையில் பலர் உயிரிழந்தனர். கம்யூனிஸ்ட் தலைவர்கள் கூட கடுமையான தாக்குதலுக்கு ஆளாகினர். மிசா தாக்குதலை நியாயப்படுத்துவது, தாக்குதலுக்கு உள்ளானவர்களை கொச்சைப்படுத்துவது போல் முதல்வர் விஜய் பேசுவது வன்மையான கண்டனத்துக்குரியது. அப்படியான கொடுமைகள் விஜய்க்கு நடந்தால் அரை மணி நேரம் தாங்குவாரா? இது அநாகரிகமானது. வன்மையான கண்டனத்துக்கு உரியது.

தவெக கூட்டணியில் இல்லை:

அமைதியான முறையில் மக்கள் போராட அனுமதி இல்லை. அப்படியான ஒரு மோசமான நிலை தவெக ஆட்சியிலும் நீடிக்கிறது. சட்டம் - ஒழுங்கின் பேரில் அனைவருக்கும் சமாதி கட்டுவதா?

எந்தச் சூழ்நிலையிலும் நாங்கள் அமைச்சரவையில் இடம்பெற மாட்டோம். ஒரு ஆட்சி அமையாமல் போய் விட கூடாது என்பதற்காக தவெகவுக்கு ஆதரவு அளித்தோம். தவெக கூட்டணியில் கம்யூனிஸ்ட் இல்லை. கூட்டணி தொடர்பான கூட்டத்துக்கு நாங்கள் போகபோவதில்லை. திமுக, தவெக கூட்டணியில் நாங்கள் இல்லை.

இடதுசாரிகள் இணைந்து செயல்பட ஆரம்பித்துள்ளோம். திருச்சியில் மிகப் பெரிய பேரணி நடத்த உள்ளோம்.

அமைச்சர்களிடம் கொள்கை முரண்பாடு:

தேர்தல் வரும்போது சூழலுக்கு ஏற்றார்போல் முடிவு செய்வோம். இடைத்தேர்தல் அறிவிக்கப்பட்டுள்ளது. யாருக்கு ஆதரவு கொடுப்பது என கலந்து பேசி முடிவு செய்வோம்.

ராகுல் காந்தி, விஜய் என யாராக இருந்தாலும், தேர்தலுக்கு முன்பாக பிரதமர் வேட்பாளரை முன்மொழிவது தவறானது. அதை ஏற்றுக் கொள்ளமாட்டோம். பாஜகவை வீழ்த்த வேண்டும் என்றால் ஓர் அணியை உருவாக்கிதான் செயல்பட வேண்டும்.

வி.பி.சிங், தேவகோடா, மன்மோகன் சிங் ஆகியோர் பிரதமர் வேட்பாளராக தேர்தலை சந்திக்கவில்லை. அதேபோல், தேர்தலுக்குப் பிறகு பிரதமரை தேர்வு செய்வதுதான் சாத்தியமானது.

தவெக அமைச்சர்களுக்குள்ளேயே கொள்கை முரண்பாடு உள்ளது. அவர்களிடம் தெளிவான புரிதல் இல்லை” என்று பாலகிருஷ்ணன் கூறினார்.

<div class="paragraphs"><p>திண்டிவனத்தில் செய்தியாளிடம் பேசிய மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் முன்னாள் மாநில செயலாளர் கே.பாலகிருஷ்ணன்</p></div>
‘மேகமலை மக்களின் வாழ்வுரிமையை பாதுகாப்பீர்’ - அரசுக்கு ஐஜேகே வலியுறுத்தல்

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in