பேனரில் பெயர் புறக்கணிப்பு: பழநியில் அதிமுக எம்எல்ஏவை சமாதானப்படுத்திய அமைச்சர் ரமேஷ்

பேனரில் பெயர் புறக்கணிப்பு: பழநியில் அதிமுக எம்எல்ஏவை சமாதானப்படுத்திய அமைச்சர் ரமேஷ்
Updated on
2 min read

திண்டுக்கல்: திண்டுக்கல் மாவட்டம் பழநி முருகன் கோயில் ராக்கால நந்தவனம் திறப்புவிழா குறித்து முன்கூட்டியே தகவல் தெரிவிக்காதது, பேனரில் பெயர் விடுபட்டிருந்தது குறித்து அதிமுகவினர், அறநிலையத் துறை அமைச்சர் எஸ்.ரமேஷிடம் புகார் தெரிவித்தனர். இதையடுத்து, எம்எல்ஏவிடம் அமைச்சர் வருத்தம் தெரிவித்தார்.

இந்து சமய அறநிலையத் துறை அமைச்சர் எஸ்.ரமேஷ் இன்று காலை பழநி தண்டாயுதபாணி சுவாமி மலைக்கோயிலில் ஆய்வு மேற்கொண்டார். முன்னதாக, பெருந்திட்ட வளர்ச்சிப் பணிகளில் ஒரு பகுதியான பழநி - கொடைக்கானல் சாலை சந்திப்பில் ரூ.53.79 லட்சம் செலவில் அமைக்கப்பட்ட அலங்கார நுழைவு வாயில் மற்றும் அடிவாரம் மேற்கு கிரிவீதியில் ரூ.51.55 லட்சம் செலவில் புனரமைக்கப்பட்ட ராக்கால நந்தவனத்தை அமைச்சர் எஸ்.ரமேஷ், அரசு செயலாளர் குமரகுருபரன், இந்து சமய அறநிலையத்துறை ஆணையர் வினய் ஆகியோர் திறந்து வைத்தனர்.

இந்த நிகழ்ச்சியில் பழநி தொகுதி அதிமுக எம்எல்ஏ ரவிமனோகரன், கோயில் இணை ஆணையர் மாரிமுத்து உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். திறப்பு விழா பேனரில் முதல்வர் விஜய், அறநிலையத்துறை அமைச்சர் பெயர் மற்றும் விழாவுக்கு வராத மதுவிலக்கு மற்றும் ஆயத்தீர்வை துறை அமைச்சர் க.விக்னேஷ் பெயர் இடம் பெற்றிருந்தன. ஆனால், பழநி தொகுதி அதிமுக எம்எல்ஏ ரவிமனோகரன் பெயர் இடம் பெறவில்லை.

இது குறித்தும், விழா குறித்தும் முன்கூட்டியே தகவல் தெரிவிக்காதது குறித்தும், கோயில் இணை ஆணையருக்கு எம்எல்ஏ போன் செய்தால் அழைப்பை ஏற்பதில்லை எனவும், தொகுதி எம்எல்ஏவுக்கு கொடுக்கும் மரியாதை இதுதானா? என்று கேள்வி எழுப்பிய அதிமுகவினர் அமைச்சரிடம் புகார் தெரிவித்தனர். இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது.

தொடர்ந்து அமைச்சர், “கட்சி பாகுபாடு பார்க்காதீர்கள். இந்த தொகுதி எம்எல்ஏவும் மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்டவர் தான். அவரும் மக்கள் பிரதிநிதி தான். எனக்கு கொடுக்கும் மரியாதையை அவருக்கும் கொடுக்க வேண்டும். தயவு கூர்ந்து அவரிடம் சென்று பேசுங்கள்” என்று, இணை ஆணையருக்கு அறிவுறுத்தினார்.

இதையடுத்து, எம்எல்ஏ ரவிமனோகரனிடம் சென்று, ”தவறாக நினைக்க வேண்டாம். இனி இது போல் நடக்காது. நீங்கள் எந்த கட்சியாக இருந்தாலும் பிரச்சினை இல்லை. நீங்கள் மக்கள் பிரதிநிதி”, என்று கையைப் பிடித்து வருத்தம் தெரிவித்து சமாதானப்படுத்தினார். அதற்கு, எம்எல்ஏ ரவிமனோகரன், “பரவாயில்லை, இருக்கட்டும். நீங்கள் கிளம்புங்கள்” என்று அமைச்சர் கூறினார்.

பின்னர், அங்கிருந்து எம்எல்ஏ புறப்பட்டுச் சென்றார். தொடர்ந்து, வின்ச் ரயில், ரோப் கார் உள்ளிட்ட இடங்களில் அமைச்சர் ஆய்வு மேற்கொண்டார். சொந்த தொகுதி எம்எல்ஏ பெயரை புறக்கணித்தது தொடர்பாக தேவஸ்தானத்துக்கு அதிமுகவினர் சமூக வலைதளங்களில் தங்களது எதிர்ப்பை தெரிவித்து வருகின்றனர்.

பேனரில் பெயர் புறக்கணிப்பு: பழநியில் அதிமுக எம்எல்ஏவை சமாதானப்படுத்திய அமைச்சர் ரமேஷ்
தர்மேந்திர பிரதான் பதவி விலக இண்டியா கூட்டணி தலைவர்கள் ஒருமனதாக வலியுறுத்தல்

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in