ஒட்டன்சத்திரம் தொகுதியில் திமுக - தமாகா இடையே கடும் போட்டி... முந்துவது யார்?

30 ஆண்டுகள் எம்எல்ஏவாக உள்ள அர.சக்கரபாணிக்கு மீண்டும் வெற்றி கிடைக்குமா?
ஒட்டன்சத்திரம் தொகுதியில்  திமுக - தமாகா இடையே கடும் போட்டி... முந்துவது யார்?
Updated on
2 min read

பழநி: ஒட்டன்சத்திரம் தொகுதியை கைப் பற்றுவதில் திமுகவுக்கும், அதிமுக கூட்டணியில் உள்ள தமாகாவுக்கும் இடையே கடும் போட்டி நிலவி வருகிறது. திண்டுக்கல் மாவட்டம் ஒட்டன்சத்திரம் தொகுதிக்குட்பட்ட பகுதிகளில் விவசாயம் முக்கிய தொழிலாக உள்ளது. தமிழகத்தில் உள்ள மிகப்பெரிய காய்கறி மார்க்கெட்டுகளில் ஒட்டன்சத்திரம் காய்கறி மார்க்கெட்டும் ஒன்று.

இத்தொகுதியில் காங்கிரஸ் 4 முறையும், அதிமுக 3 முறையும், திமுக 9 முறையும் வெற்றி பெற்றுள்ளன. கடைசியாக 1991 தேர்தலில் அதிமுக வெற்றி பெற்றது. அதன் பிறகு 1996 முதல் 2021 வரையிலான 6 தேர்தல்களிலும் திமுக வெற்றி பெற்றுள்ளது. கடந்த 30 ஆண்டுகளாக இத்தொகுதியின் எம்எல்ஏவாக அமைச்சர் அர.சக்கரபாணி உள்ளார்.

2021 தேர்தலில் அதிமுக சார்பில் ஒட்டன்சத்திரம் ஒன்றியச் செயலாளர் என்.பி.நடராஜன் போட்டியிட்டு தோல்வி அடைந்தார். இந்த முறை மீண்டும் போட்டியிட அவர் முயற்சி செய்தார். ஆனால், இத்தொகுதியை கூட்டணி கட்சியான தமாகாவுக்கு அதிமுக ஒதுக்கி விட்டது. அக்கட்சி சார்பில் விடியல் எஸ்.சேகர், பாஜகவின் தாமரை சின்னத்தில் போட்டியிடுகிறார்.

இந்த முறையும் தங்களுக்கு எளிதான வெற்றி கிடைக்கும் என்று தொடக்கத்தில் நினைத்த திமுகவினருக்கு விடியல் எஸ்.சேகரின் தீவிரப் பிரச்சாரம் மிகப்பெரிய சவாலாக உருவெடுத்துள்ளது.

தற்போதைய எம்எல்ஏவின் நிறை வேற்றப்படாத வாக்குறுதிகள், ஆளுங்கட்சிக்கு எதிரான பொதுவான அதிருப்திகளை தனக்கு சாதகமாக்கி பிரச்சாரம் செய்து வருகிறார். இவர் 2001 தேர்தலில் ஸ்டாலினை எதிர்த்து சென்னை ஆயிரம் விளக்கு தொகுதியில் போட்டியிட்டு 7,272 வாக்குகள் வித்தியாசத்தில் தோல்வியடைந்தார்.

2006-ல் காங்கயம் தொகுதியில் வெற்றி பெற்று எம்எல்ஏவானார். தற்போது பலமான கூட்டணியுடன் களமிறங்கியுள்ள விடியல் எஸ்.சேகர் வெற்றி பெற்றாக வேண்டும் என்ற முனைப்பில் தீவிரமாக களப்பணியாற்றி வருகிறார்.

ஒட்டன்சத்திரம் நகரின் குடிநீர் பிரச்சினையை தீர்க்க கொண்டுவரப்பட்ட காவிரி குடிநீர் திட்டம் முழுமை பெறாமல் இருப்பது, தொப்பம்பட்டி ஒன்றியத்தை இரண்டாக பிரித்து கள்ளிமந்தயத்தை தலைமையிடமாக கொண்டு புதிய ஒன்றியம் அமைக்காதது, காய்கறிகளை சேமிக்க குளிர்பதன கிட்டங்கி, கண் வலி கிழங்குக்கு நிரந்தர விலை உட்பட விவசாயிகளின் பிரச்சினைகளை தீர்க்காதது உள்ளிட்டவற்றை கூறி அதிமுக கூட்டணி கட்சியினர் வாக்கு சேகரித்து வருகின்றனர்.

போட்டி கடுமையாகி உள்ளதால் வீடு வீடாகச் சென்று திமுகவினர் தீவிர பிரச்சாரத்தில் ஈடுபட்டு வருகின்றனர். அர.சக்கரபாணி அனைத்து மக்களின் நிகழ்வுகளிலும் தவறாமல் பங்கேற்பது, வீட்டுக்கு வீடு அன்பளிப்பு சீர்களை அள்ளிக் கொடுப்பது, அரசு கல்லூரிகள், அரசு போட்டித் தேர்வு பயிற்சி மையத்தை கொண்டு வந்தது, காய்கறி மார்க்கெட்டை மேம்படுத்தியது உள்ளிட்டவற்றை எடுத்துக்கூறி பிரச்சாரம் செய்து வருகின்றனர்.

ஒட்டன்சத்திரம் தொகுதியில் திமுக கூட்டணிக்கும், அதிமுக கூட்டணிக்கும் இடையேதான் கடும் போட்டி காணப்படுகிறது. தவெக, நாம் தமிழர் ஆகிய கட்சிகள் பெரிய அளவில் தாக்கத்தை ஏற்படுத்தவில்லை. இவ்விரு கட்சியினரும் தங்களால் இயன்ற அளவு மக்களை சந்தித்து வாக்குச் சேகரித்து வருகின்றனர்.

அவர்களுக்கு கணிசமான வாக்குகள் கிடைக்கலாம். ஆனால் தேர்தலில் வெற்றி, தோல்வியை நிர்ணயிக்கும் அளவுக்கு இருக்காது என்று அரசியல் விமர்சகர்கள் தெரிவிக்கின்றனர். கடந்த 30 ஆண்டுகளாக திமுக வசம் உள்ள ஒட்டன்சத்திரம் தொகுதியை இந்த முறையும் அக்கட்சி கைப்பற்றுமா? அல்லது இத்தொகுதி புதிய எம்எல்ஏவை பெறப்போகிறதா என்பது மே 4-ம் தேதி வாக்கு எண்ணிக்கையின்போது தெரிந்துவிடும்.

ஒட்டன்சத்திரம் தொகுதியில்  திமுக - தமாகா இடையே கடும் போட்டி... முந்துவது யார்?
கள்ளக்குறிச்சி தொகுதியை கைப்பற்றுவது யார்?

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in