வேடசந்தூர் தொகுதியில் கைகொடுக்க போவது சமுதாய பலமா, பண பலமா?

திமுக, அதிமுக இடையே கடும் போட்டி
வேடசந்தூர் தொகுதியில் கைகொடுக்க போவது சமுதாய பலமா, பண பலமா?
Updated on
1 min read

திண்டுக்கல்: வேடசந்தூர் தொகுதியில் வெற்றி பெறும் கட்சிதான் தமிழகத்தில் ஆட்சி அமைக்கும் என்ற சென்டிமென்ட் தொடர்ந்து நடப்பதால், இந்த தொகு தியைக் கைப்பற்ற திமுக, அதிமுக இடையே கடும் போட்டி நிலவுகிறது.

திண்டுக்கல் மாவட்டத்தில் உள்ள ஏழு தொகுதிகளில் பரப்பளவிலும், வாக்காளர் எண்ணிக்கையிலும் பெரிய தொகுதியாக உள்ளது வேடசந்தூர். இந்த தொகுதியில் வேடசந்தூர், பாளையம், வடமதுரை, அய்யலூர், எரியோடு ஆகிய பேரூராட்சிகளும், வடமதுரை, வேடசந்தூர், குஜிலியம்பாறை ஆகிய ஊராட்சி ஒன்றியத்துக்கு உட்பட்ட கிராம ஊராட்சிகளும் உள்ளன.

தொகுதியில் நிலவும் பிரச்சினைகள்

வறண்ட பகுதியான இந்த தொகுதியில் விவசாயத்தை முழுமையாக நம்ப முடியாத நிலையில், நூற்பாலைகளில் அதிகம் பேர் பணிபுரிகின்றனர். பலர் அருகிலுள்ள கரூர் மாவட்டத்துக்கு வேலைக்கு செல்கின்றனர்.

நூற்பாலைகள் தவிர வேறு தொழில்கள் இல்லாததால் மக்கள் வேறு மாவட்டங்களுக்கு வேலை தேடி செல்லும் நிலை உள்ளது. தொகுதியில் சிப்காட் தொழிற்பேட்டை அமைக்கும் திட்டம் ஏட்டளவில்தான் உள்ளது.

காவிரி கூட்டு குடிநீர் திட்டம் மூலம் கிராமப்புறங்களில் ஓரளவு குடிநீர் பிரச்சினைக்கு தீர்வு காணப்பட்டுள்ளது. இருந்தபோதும் நிலத்தடி நீர்மட்டம் குறைவாக உள்ளது.

இதற்கு காரணம் தொகுதியில் ஓடும் குடகனாறு ஆற்றில் மணல் கொள்ளை தொடர்ந்து நடப்பதுதான்.

குடகனாற்றுக்கு வரும் தண்ணீரை தடுப்புச்சுவர் கட்டி வேறு பகுதிக்கு திருப்பி விடுவதாகவும் குற்றச்சாட்டு உள்ளது. இதனால் குடகனாறு ஆண்டில் 12 மாதங்களும் வறண்டுதான் காணப்படுகிறது. பெரும்பாலும் கழிவுநீர்தான் இந்த ஆற்றில் ஓடுகிறது. குடகனாற்றை சீரமைக்க பலமுறை கோரிக்கை வைத்தும் நடவடிக்கை இல்லை.

இதுவரை வென்றவர்கள்:

1971 முதல் வேடசந்தூர் தொகுதியில் நடந்த தேர்தல்களில் அதிமுக ஏழு முறையும், திமுக 4 முறையும், காங்கிரஸ் ஒரு முறையும் வென்றுள்ளன.

தற்போதைய கள நிலவரம்

தற்போது திமுக சார்பில் வீராசாமிநாதன், அதிமுக -பரமசிவம், தவெக- நாகஜோதி, நாம் தமிழர் கட்சி சார்பில் காஜாஉசேன் அகமது உள்ளிட்ட 11 பேர் களத்தில் உள்ளனர்.

இருந்தபோதும் திமுக, அதிமுக இடையே நேரடிப் போட்டி நிலவுகிறது.

வேடசந்தூர் தொகுதியில் வெற்றி பெறும் கட்சிதான் ஆட்சி அமைக்கும் என்ற சென்டிமென்ட் தொடர்ந்து இருந்து வருகிறது.

இதனால் வேடசந்தூரை கைப்பற்றியே ஆக வேண்டும் என்ற முனைப்பில் திமுக, அதிமுக வேட்பாளர்கள் களம் இறங்கி மக்கள் ஆதரவை திரட்டி வருகின்றனர்.

அதிமுக வேட்பாளருக்கு அவரது சமுதாய வாக்குகள் கைகொடுக்கும் என்ற நம்பிக்கை உள்ளது. திமுக வேட்பாளர் பண பலத்தை மட்டும் நம்பி களம் இறங்கியுள்ளார். இருவருக்கும் கடும் போட்டி ஏற்பட்டுள்ளது.

வேடசந்தூர் தொகுதியில் கைகொடுக்க போவது சமுதாய பலமா, பண பலமா?
கள்ளக்குறிச்சி தொகுதியை கைப்பற்றுவது யார்?

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in