

காஞ்சிபுரம்: தனியார் பொறியியல் கல்லூரியில் மாணவி ஒருவர் ஏற்கெனவே தற்கொலை செய்து கொண்ட நிலையில், மாணவர் ஒருவர் தற்கொலைக்கு முயன்றுள்ளார்.
ஸ்ரீபெரும்புதூர் அருகே தனியார் பொறியியல் கல்லூரி இயங்கி வருகிறது. இந்தக் கல்லூரியில் பூந்தமல்லியைச் சேர்ந்த டேவிட் மகள் ஷெரின் (19) படித்து வந்துள்ளார். கடந்த 2-ம் தேதி வழக்கம்போல் கல்லூரிக்கு வந்த இவர், 5-வது மாடியிலிருந்து திடீரென குதித்து தற்கொலை செய்து கொண்டார்.
இதேபோல் இக்கல்லூரியில் படித்து வரும் திருவொற்றியூர் பிரபு மகன் சசிதரன் (19) என்ற மாணவரும் நேற்று முன்தினம் முதல் மாடியிலிருந்து குதித்து தற்கொலைக்கு முயன்றார். இதில் அவரது கை, கால்களில் எலும்பு முறிவு ஏற்பட்டுள்ளது.
இவர் போரூரில் உள்ள தனியார் மருத்துவமனையில் தீவிர சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ளார். அடுத்தடுத்து நிகழ்ந்த இச்சம்பவங்களால் பதற்றம் ஏற்பட்டுள்ளது. கல்லூரியில் மாணவ, மாணவிகளுக்குக் கடுமையான நெருக்கடிகள் கொடுக்கப்படுகிறதோ என்கிற ரீதியில் சமூக வலைதளங்களில் பல்வேறு கருத்துகள் பகிரப்பட்டன.
இந்தச் சம்பவங்களைத் தொடர்ந்து, கல்லூரிக்கு மறு அறிவிப்பு வரும் வரை விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த இரு சம்பவங்கள் குறித்து ஸ்ரீபெரும்புதூர் காவல்துறையினர் வழக்குப் பதிவு செய்துள்ளனர். காஞ்சிபுரம் எஸ்.பி. அரவிந்த் தலைமையில் நேரடி விசாரணை நடைபெற்றது. கல்லூரிப் பேராசிரியர்கள் மற்றும் மாணவர்களிடம் போலீஸார் தீவிர விசாரணை நடத்தினர்.
இது தொடர்பாக எஸ்.பி.அரவிந்த் கூறுகையில், “முதற்கட்ட விசாரணையில், மாணவி ஷெரின் குடும்பப் பிரச்சினை காரணமாகவே தற்கொலை செய்துகொண்டது தெரியவந்துள்ளது. இது தொடர்பாக அவர் கடிதம் ஒன்றையும் எழுதி வைத்துள்ளார்.
மாணவர் சசிதரனின் தற்கொலை முயற்சிக்கான முழுமையான காரணம் இதுவரை தெரியவில்லை. தற்போது அவர் சிகிச்சையில் உள்ளார். அவரது உயிருக்கு ஆபத்து இல்லை. விசாரணை தொடர்ந்து நடைபெறுகிறது” என்றார்.