“அரசியல் தலைவர்களுக்கு குடும்ப ஒழுக்கம் முக்கியம்” - விஜய்யை மறைமுகமாக சாடிய வைகோ

“அரசியல் தலைவர்களுக்கு குடும்ப ஒழுக்கம் முக்கியம்” - விஜய்யை மறைமுகமாக சாடிய வைகோ
Updated on
2 min read

மதுரை: “கற்பையும், மானத்தையும் உயிரியினும் பெரிதாகக் முன்னிறுத்தி வாழும் தமிழ்நாட்டில் எப்படியும் வாழ்க்கை நடத்துவேன். யாரோடும் மேடைக்கு வந்து நிற்பேன் என சொல்லும் அபாயம் நேர்ந்திருக்கிறது. அரசியல் தலைவர்களுக்கு குடும்ப ஒழுக்கம் முக்கியமானது” என தவெக தலைவர் விஜய்யை மதிமுக பொதுச் செயலாளர் வைகோ மறைமுகமாக சாடினார்.

தமிழகத்திற்கான நிதியை வழங்காத மத்திய அரசு மற்றும் சிலிண்டர் தட்டுப்பாடு கண்டித்து மதசார்பற்ற முற்போக்கு கூட்டணி கட்சிகள் சார்பில், மதுரை முனிச்சாலை சந்திப்பில் நேற்று ஆர்ப்பாட்டம் நடந்தது.

மாநகர் மாவட்ட திமுக செயலாளர் கோ. தளபதி தலைமை வகித்தார். பூமிநாதன் எம்எல்ஏ, காங்கிரஸ் மாநகர் மாவட்ட தலைவர் நல்லமணி, மார்க்சிஸ்ட் கம்யூ., மாவட்ட செயலாளர் கணேசன், மதிமுக மாவட்ட செயலாளர் முனியசாமி மற்றும் விசிக, எஸ்டிபிஐ உள்ளிட்ட கூட்டணி கட்சிகளின் நிர்வாகிகள் திரளாக பங்கேற்றனர்.

ஆர்ப்பாட்டத்தில் மதிமுக பொதுச் செயலாளர் வைகோ பேசியதாவது: இன்றைக்கு சமையல் எரிவாயு சிலிண்டர் அடியோடு நின்று போய்விடுமோ என்ற மனக்கலக்கத்துக்கு அனைத்து தரப்பு மக்களும் நினைக்கின்றனர். இனிமேல் வாகனங்களுக்கு பெட்ரோல், டீசல் போட முடியுமா என்ற கவலை வாட்டுகிறது. படித்துவிட்டு வளைகுடா நாடுகளுக்கு சென்று அங்கே கிடைக்கும் ஊதியத்தை பெற்றோருக்கு அனுப்பும் லட்சக்கணக்கான இளைஞர்களின் எதிர்காலமும் கேள்வி குறியாக உள்ளது. அவர்கள் உயிரோடு திரும்ப முடியுமா என்ற அதிர்ச்சி, அச்சத்தில் உயிரை கையில் பிடித்துக் கொண்டுள்ளனர்.

இவ்வளவு மனத்துயரத்துக்கும் காரணம் அமெரிக்க வெள்ளை மாளிகைக்குள்ளே நுழைந்து அதிபர் நாற்காலியிலே ஹிட்லரின் மறு உருவமாக உட்கார்ந்துள்ள டொனால்டு ட்ரம்ப். அமெரிக்க நாட்டின் ஜனநாயகவாதிகள் ஒன்று சேர்ந்து அவர் மீது தலை குற்றச்சாட்டு (இம்பீஸ்மென்ட்)கொண்டு வந்து பதவியில் இருந்து நீக்கவேண்டும்.

இந்திய பிரதமர் மோடி சொல்லுகிறார், ரஷ்யாவிலே இருந்து கச்சா எண்ணெய் வாங்க அமெரிக்கா அனுமதித்ததாக சொல்வது கேவலம். ரஷ்யாவிலே கச்சா எண்ணெய் வாங்க ட்ரம்ப் அனுமதி கொடுப்பதற்கு அவர் யார்?. இந்தியா அமெரிக்காவின் கொத்தடிமையா?. 120 கோடி மக்களின் தன்மானத்தை அவர் அடகு வைத்துவிட்டார். இச்சூழலில் இந்தியாவில் இருக்கும் முற்போக்கு ஜனநாயக சக்திகள் ஒன்று சேர்ந்து மோடி அரசையும், அவரது கூட்டணி கட்சிகளையும் எதிர்க்கும் நிலையில் தமிழகம் முழுவதும் இந்த ஆர்ப்பாட்டம் நடக்கிறது.

நமது முழக்கம் அவர்களின் செவிட்டு காதுகளில் போய் விழாது. ஆனால் மக்கள் சிந்திக்க வேண்டும். துன்பம் இழைக்கும் முதல் குற்றவாளி பிரதமர் மோடி., கூட்டு குற்றவாளி அதிமுக மற்றும் அதிலுள்ள கட்சிகள். இவர்களுக்கு பாடம் புகட்டுங்கள். இதற்கான சரியான சந்தர்ப்பம் தான் தேர்தல். இந்த ஜனநாயக யுத்தத்தில் தேசிய ஜனநாயக கூட்டணி வேட்பாளர்களை படுதோல்வி அடைய செய்யவேண்டும். அவர்களுக்கு டெபாசிட் மிஞ்சக்கூடாது. இதற்கு இடையில் திடீர் பிரவேசமாக ஓரிருவர் நுழைந்திருக்கின்றனர். அவர்களைப் பற்றி தனிப்பட்ட முறையில் யோசிக்கவில்லை.

1984-ல் ஈழத் தமிழர் மாநாடுக்கு சென்றிருந்தேன். அந்நாட்டின் பிரதான கட்சிகளின் வேட்பாளர்கள் பேசும்போது, ‘பெயரை சொல்லி நான் ஒரு ஒழுங்கான குடும்பம் நடத்துகிறேன். எனக்கு ஒரு மனைவி ,மூன்று பிள்ளைகள் இருக்கின்றனர். கட்டுக்கோப்பான இல்லறத்தை நடத்துகிறேன். என்னை தேர்தலில் வெற்றி பெற செய்யுங்கள்’ என்றனர். இந்நாட்டில் யாரும், யாரோடும் கைகோர்க்கலாம்.யாரும் யாரையும் காதலிக்கலாம். பந்தங்களே கிடையாது.

இஷ்டத்துக்கு வாழலாம் என்ற அமெரிக்காவில் கூட எம்பியாக, ஆளுநராக , குடியரசுத் தலைவராக போட்டியிட அடிப்படை தகுதி இருக்கிறது. கற்பையும், மானத்தையும் உயிரியினும் பெரிதாகக் முன்னிறுத்தி வாழும் தமிழ்நாட்டில் எப்படியும் வாழ்க்கை நடத்துவேன். யாரோடும் செல்வேன். யாரோடும் கரம் கோர்பேன். யாரோடும் மேடைக்கு வந்து நிற்பேன் என சொல்லும் அபாயம் நேர்ந்திருக்கிறது.

அரசியல் தலைவர்களுக்கு குடும்ப ஒழுக்கம் முக்கியமானது. தமிழகத்தின் மானம், மரியாதை பெருமை, உரிமைகளை காக்க வேண்டும். தவறான முடிவை செய்துவிடாதீர்கள். தமிழகம் நாசமாக போய்விடும். சமையல் எரிவாயு பிரச்சனை மட்டுமல்ல, ஏராளமான அபாயமும் வரலாம். என்டிஏ ஆட்சியில் வஞ்சிக்கப்படுவது நமது தமிழ்நாடு தான். நிதி கொடுப்பதில்லை. போதிய திட்டங்களை ஒதுக்குவதில்லை.

சொற்ப நிதியை கொண்டுதான் நமது முதல்வர் ஸ்டாலின், பிற மாநிலங்கள் மூக்கில் விரல் வைக்கக்கூடிய அளவுக்கு சாதனைகள் நிறைவேற்றுகிறார். அவரே தொடர்ந்து முதல்வராக வேண்டும். மாயத் தோற்றம், மாயாஜால காட்சி, கண்கட்டி வித்தைகளுக்கு உங்கள் வீட்டு பிள்ளைகள் பலியாகிவிடவேண்டாம். திமுக கூட்டணிக்கு ஆதரவளியுங்கள். இவ்வாறு பேசினார்.

“அரசியல் தலைவர்களுக்கு குடும்ப ஒழுக்கம் முக்கியம்” - விஜய்யை மறைமுகமாக சாடிய வைகோ
தமிழக சட்டப்பேரவைக்கு ஏப்.23ல் ஒரே கட்டமாக தேர்தல்: மே.4ல் வாக்கு எண்ணிக்கை

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in