

சென்னை: தமிழக சட்டப்பேரவை தேர்தல் ஏப்ரல் 23 ம் தேதி ஒரே கட்டமாக நடைபெறுகிறது. மே 4-ம் தேதி வாக்கு எண்ணிக்கை நடைபெற்று, முடிவுகள் அறிவிக்கப்படும் என்று தலைமை தேர்தல் ஆணையர் ஞானேஷ்குமார் டெல்லியில் அறிவித்தார்.
தமிழக சட்டப்பேரவைத் தேர்தல் தொடர்பாக தலைமைத் தேர்தல் ஆணையர் ஞானேஷ் குமார் கூறியதாவது: தமிழகத்தில் மொத்தம் உள்ள 234 தொகுதிகளுக்கும் ஏப்ரல் 23-ம் தேதி ஒரே கட்டமாக சட்டப்பேரவைத் தேர்தல் நடைபெறும். வாக்குகள் மே 4-ம் தேதி எண்ணப்பட்டு முடிவுகள் அறிவிக்கப்படும்.
வேட்புமனு தாக்கல் மார்ச் 30-ம் தேதி தொடங்கி ஏப்ரல் 6-ம் தேதி வரை நடைபெறும். மனுக்கள் மீதான பரிசீலனை ஏப்.7-ம் தேதி நடைபெறும். மனுவை திரும்ப பெற ஏப்.9-ம் தேதி கடைசி நாள். புதுச்சேரியில் ஏப்ரல் 9ஆம் தேதி வாக்குப்பதிவு நடைபெறும்.
தமிழகத்தில் 75,032 வாக்குச் சாவடிகள் உள்ளன. தமிழகத்தில் 5.67 கோடி வாக்காளர்கள் உள்ளனர். தமிழகத்தில் மே 10 ஆம் தேதியுடன் சட்டப்பேரவைக்கான பதவிகாலம் முடிவடைகிறது. வாக்குப்பதிவு நாளில் ஒவ்வொரு 2 மணி நேரத்துக்கும் வாக்குப்பதிவு சதவீதம் அறிவிக்கப்படும். வாக்குப்பதிவு இயந்திரங்களில் வேட்பாளர்களின் வண்ண புகைப்படங்கள் இடம்பெறும் என ஞானேஷ்குமார் தெரிவித்தார்.
தமிழ்நாடு, மேற்கு வங்கம், அசாம், புதுச்சேரி, கேரளம் ஆகிய 5 மாநிலங்களுக்கான சட்டப்பேரவைத் தேர்தல் தேதியை தலைமைத் தேர்தல் ஆணையர் ஞானேஷ்குமார் தலைமையிலான தேர்தல் ஆணையர்கள் இன்று புது டெல்லியில் அறிவித்தனர்.
இதன்படி தமிழகத்தில் ஒரே கட்டமாக 234 தொகுதிகளுக்கும் தேர்தல் நடைபெறுகிறது. தேர்தல் தேதி குறித்த அறிவிப்பு வெளியான நிலையில், தேர்தல் நடைபெற உள்ள தமிழகம், கேரளம், மேற்கு வங்கம், அசாம் மற்றும் புதுச்சேரியில் இன்று முதல் தேர்தல் நடத்தை விதிகள் அமலுக்கு வந்துள்ளன.
தேர்தலுக்கு தயாராகும் கூட்டணிகள்:
தமிழகத்தில் திமுக தலைமையிலான கூட்டணியில் சில கட்சிகளுக்கு ஏற்கெனவே தொகுதிகள் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளன. மற்ற கட்சிகளுடன் தொகுதி ஒதுக்கீடு தொடர்பான பேச்சுவார்த்தை நடைபெற்று வருகிறது.
அதிமுக - பாஜக கூட்டணியும் தேர்தலுக்கு தயாராகி வருகிறது. கூட்டணியில் இடம்பெற்றுள்ள பாமக, அமமுக, தமாகா உள்ளிட்ட கட்சிளுடன் தொகுதி பங்கீடு பேச்சு வார்த்தை நடத்தப்பட்டு வருகிறது.
அதேபோல, விஜய் தலைமையிலான தமிழக வெற்றிக் கழகமும் தேர்தல் பணிகளை தொடங்கி உள்ளது. சீமானின் நாம் தமிழர் கட்சி 234 தொகுதிகளுக்கும் வேட்பாளர்களை அறிவித்து களத்தில் இறங்கியுள்ளார்.