

திருச்சி: “திமுக ஆட்சியில் ஏற்பட்ட சட்டம் - ஒழுங்கு குளறுபடிகளை நாங்கள் சரிசெய்து வருகிறோம்” என அறநிலையத் துறை அமைச்சர் ரமேஷ் தெரிவித்துள்ளார்.
முத்துராமலிங்க தேவரின் 119-வது பிறந்தநாளையொட்டி தமிழகம் முழுவதும் அவரது உருவசிலைக்கு பல்வேறு கட்சியினரும், அமைப்பினரும் மாலை அணிவித்து மரியாதை செலுத்தி வருகின்றனர். இதன் ஒரு பகுதியாக இன்று திருச்சி மத்திய பேருந்து நிலையம் அருகில் உள்ள தேவர் சிலைக்கு தமிழக அறநிலையத் துறை அமைச்சர் ரமேஷ் மற்றும் தவெக நிர்வாகிகள், கட்சியினர் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்.
தொடர்ந்து செய்தியாளர்களிடம் பேசிய அமைச்சர் ரமேஷ், “தேசியமும், தெய்வீகமும் இரு கண்களாக கொண்டு, சுதந்திரப் போராட்டத்தில் செயல்பட்டவர் முத்துராமலிங்க தேவர். அவருக்கு இன்று மாலை அணிவித்து மரியாதை செலுத்தியுள்ளோம். முதல்வர் இன்று சென்னையில் மரியாதை செலுத்தியுள்ளார்.
எல்லா தலைவர்களின் மீதும் அன்பும், மரியாதையும் கொண்டவர் நமது முதல்வர். நல்ல விஷயங்களை முன்னெடுக்கக் கூடியவர். இதை வைத்து அரசியல் செய்ய வேண்டும் என சில நினைக்கின்றனர். இதை வைத்து அரசியல் செய்யக் கூடாது.
அதிமுக பொதுச் செயலாளர் பழனிசாமி தொடர்ந்து தோல்வியை சந்தித்து வருகிறார். அவருக்கு நிம்மதி இல்லை என்பதுதான் யதார்த்தம், எனவே, அதனை பெரிதாக எடுத்துக்கொள்ள தேவையில்லை. மக்கள் மகிழ்ச்சியாக உள்ளனர், முதல்வரை பாராட்டி வருகின்றனர்.
இதற்கு முன்னால், மக்கள் பணத்தை தொட்டவர்களும், சுரண்டியவர்களுக்கும் சரி, இந்த ஆட்சி என்ன தண்டனை தர வேண்டுமோ, அந்த முயற்சியில் ஈடுபட்டு வருகிறது. இதில் அரசியல் காழ்ப்புணர்ச்சி இல்லை.
திமுக ஒரு ஊழல் கட்சி, தீய சக்தி என தொடர்ந்து கூறி வருகிறோம், அந்த அளவு மக்கள் பணத்தை சுரண்டி உள்ளனர். அதற்கான பலனை அவர்கள் அனுபவிப்பார்கள்.
சட்டம் - ஒழுங்கு பிரச்சினை கடந்த 4 மாதங்களில் புதிதாக முளைத்து வரவில்லை. இவர்கள் ஆட்சியில் போட்ட விதைகளைதான் தற்பொழுது சரிப்படுத்தி வருகிறோம், விலைவாசி உயர்வை கட்டுப்படுத்த தமிழக அரசு அனைத்து நடவடிக்கை எடுத்து வருகிறது” என்று அமைச்சர் ரமேஷ் கூறினார்.