

தருமபுரி வள்ளலார் திடலில் நடந்த தேர்தல் பிரச்சார நிகழ்ச்சியில் தேசிய ஜனநாயக கூட்டணி வேட்பாளர்களை ஆதரித்து அதிமுக பொதுச் செயலாளர் பழனிசாமி வாக்கு சேகரித்தார்.
பிரதமர் மோடியை எதிர்த்துப் பேசிவிட்டு, பிறகு மோடி தமிழகம் வரும்போது வெள்ளைக் குடை பிடித்த வேந்தர் இரட்டை வேடம் போடும் ஸ்டாலின் என தருமபுரி பிரச்சாரத்தில் அதிமுக பொதுச் செயலாளர் பழனிசாமி பேசினார்.
தருமபுரி மாவட்டத்தில் உள்ள 5 சட்டப்பேரவைத் தொகுதிகளில் அதிமுக தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணியில் போட்டியிடும் பாலக்கோடு-கே.பி.அன்பழகன் (அதிமுக), பென்னாகரம்-செல்வம் (பாமக), தருமபுரி-சவுமியா அன்புமணி (பாமக), பாப்பிரெட்டிப்பட்டி-மரகதம் (அதிமுக), அரூர் (தனி)-சம்பத்குமார் (அதிமுக) ஆகியோரை ஆதரித்து அதிமுக பொதுச் செயலாளர் பழனிசாமி நேற்று பிரச்சாரம் செய்தார்.
தருமபுரி வள்ளலார் திடலில் நடந்த பிரச்சார கூட்டத்தில் பழனிசாமி பேசியதாவது: திமுக ஆட்சியில் இன்று பெண்களுக்கு பாதுகாப்பு இல்லாத சூழல் தான் ஏற்பட்டுள்ளது. திமுக-வின் நல்லாட்சியை பொறுத்துக் கொள்ள முடியாமல் தமிழகத்தில் பெண்களுக்கு பாதுகாப்பு இல்லை என பழனிசாமி தமிழக அரசின் மீது குறை கூறுகிறார் என முதல்வர் ஸ்டாலின் சொல்கிறார். நாங்கள் குறை சொல்லவில்லை. உங்களின் புள்ளி விவரங்கள் தான் சொல்கிறது.
பெண்களுக்கு எதிரான பாலியல் துன்புறுத்தல்கள் தொடர்பாக உங்கள் ஆட்சியில் 26 ஆயிரத்து 651 வழக்குகள் பதிவாகி இருப்பதை உங்கள் புள்ளி விவரம் தான் தெரிவிக்கிறது. ஆனால், தமிழகத்தில் பாலியல் சீண்டல்களே இல்லை என ஜமுக்காளத்தில் வடிகட்டிய பொய்யை ஸ்டாலின் பேசி வருகிறார். குழந்தைகள் முதல் பாட்டிகள் வரை இந்த ஆட்சியில் பாலியல் துன்புறுத்தல்களுக்கு உள்ளாகி வருகின்றனர். இந்த அரசு தமிழகத்துக்கு தேவையா?
பழனிசாமி பாஜக-வுக்கு அடிமை என்கிறார் ஸ்டாலின். தமிழகத்துக்கு நன்மை எனில் ஆதரவும், எதிரான திட்டம் எனில் எதிர்ப்பும் தெரிவிப்பது தான் எங்கள் நிலைப்பாடு. திமுக போன்று கூஜா தூக்கும் கட்சியல்ல அதிமுக. பிரதமர் மோடியை எதிர்த்துப் பேசிவிட்டு, பிறகு மோடி தமிழகம் வரும்போது வெள்ளைக் குடை பிடித்த வேந்தர் இரட்டை வேடம் போடும் ஸ்டாலின்.
நீட் தேர்வுக்கு விலக்கு பெற்றுத் தருவோம் என்று 2021 தேர்தலுக்கு முன்பு கூறிய ஸ்டாலினும், அவரது கூட்டணி கட்சியினரும் பெற்றுக் கொடுத்தார்களா? 39 எம்.பி-க்கள் இருந்தும் தமிழக பிரச்சினைகளை தீர்க்க நாடாளுமன்றத்தில் குரல் கொடுக்கும் திராணி திமுக-வுக்கு இருக்கிறதா? தில்லு, திராணி, தெம்பு என எதுவும் இல்லாத கட்சி திமுக.
பல மடங்கு மின் கட்டணத்தை உயர்த்திய, குப்பைக்கு வரி விதித்த அரசு திமுக அரசு. கழிப்பறைகளை பராமரிப்பதில் கூட ஊழல் செய்த அரசு திமுக அரசு. கடன் வாங்க நிபுணர் குழு அமைத்த அரசு திமுக அரசு. தமிழக வரலாற்றில் தொடக்கம் முதல் 2021 வரை பெறப்பட்ட கடன் ரூ.4 லட்சத்து 21 ஆயிரம் கோடி தான்.
ஆனால், முதல்வர் ஸ்டாலின் நடத்திய 5 ஆண்டு ஆட்சியில் பெறப்பட்டுள்ள கடன் ரூ.5 லட்சம் கோடி. கடந்த அதிமுக ஆட்சியில் தமிழகத்துக்கு 11 அரசு மருத்துவக் கல்லூரிகளையும், 7 சட்டக் கல்லூரிகளையும் கொண்டு வந்தோம். ஸ்டாலின் அரசு ஒரு அரசு மருத்துவக் கல்லூரியையாவது கொண்டு வந்ததா? ஏழை, எளிய மாணவர்கள் குறைந்த கட்டணத்தில் உயர்கல்வி பயிலும் சூழலை ஏற்படுத்தி உயர்கல்வி பயில்வோரின் சதவீதத்தை உயர்த்தியது அதிமுக அரசு தான்.
அரசுத் துறைகளில் உள்ள 5.5 லட்சம் காலிப் பணியிடங்களை நிரப்புவோம் என்று கூறி ஆட்சிக்கு வந்த ஸ்டாலின், 5 ஆண்டில் வெறும் 94 ஆயிரம் பேரைத் தான் பணியமர்த்தி உள்ளார். புதுப்புது பெயர்களை சூட்டி திட்டங்களை அறிவித்து மக்களை ஏமாற்றி 5 ஆண்டு ஆட்சி செய்த திமுக அரசு மக்களுக்கான எந்த திட்டங்களையும் கொண்டு வரவில்லை. அரசு ஊழியர்கள், தூய்மைப் பணியாளர்கள், சத்துணவு பணியாளர்கள், செவிலியர்கள் என பல தரப்பினருக்கும் வாக்குறுதி அளித்து ஏமாற்றி வாக்குகளை பெற்று ஆட்சிக்கு வந்த திமுக அவர்களுக்கு எதையும் செய்யவில்லை.
தருமபுரி மாவட்டத்தில் கடந்த அதிமுக ஆட்சியின்போது அறிவிக்கப்பட்டும் திமுக அரசால் கிடப்பில் விடப்பட்ட மற்றும் ஆமைவேகத்தில் மேற்கொள்ளப்பட்டு வரும் நீர்ப்பாசன திட்டங்கள், அதிமுக ஆட்சி அமைந்ததும் நிறைவேற்றப்படும். விலைவாசி உயர்வை எதிர்கொள்ள ஒவ்வொரு குடும்பத்துக்கும் ரூ.10 ஆயிரம் உதவித் தொகை, குடும்பத் தலைவிகளுக்கு மாதம் தோறும் ரூ.2,000, அனைத்து ரேஷன் அட்டைகளுக்கும் குளிர் சாதன பெட்டி வழங்கப்படும்.
தீபாவளி தோறும் பெண்களுக்கு பட்டுப்புடவை வழங்கப்படும். ரேஷன் கடைகளில் எண்ணெய், பருப்பும் விலையின்றி வழங்கப்படும். இவையெல்லாம் நிறைவேற, தேசிய ஜனநாயக கூட்டணி வேட்பாளர்களை நீங்கள் ஆதரிக்க வேண்டும். இவ்வாறு அவர் பேசினார்.