

அதிமுக ஆட்சியில் பழனிசாமி செய்த சாதனைகளை அவரால் கூற முடியுமா? என கோவையில் நடந்த தேர்தல் பிரச்சார பொதுக்கூட்டத்தில் முதல்வர் ஸ்டாலின் கேள்வி எழுப்பினார்.
கோவை மாவட்டத்தில் போட்டியிடும் திமுக மற்றும் கூட்டணிக் கட்சி வேட்பாளர்களை ஆதரித்து முதல்வர் ஸ்டாலின், கோவை கொடிசியா மைதானத்தில் நேற்று நடைபெற்ற பொதுக்கூட்டத்தில் பேசினார். பிரச்சார மேடைக்கு வருவதற்கு முன்னர், சின்னயம்பாளையத்திலிருந்து பிரச்சார மேடை வரை திறந்தவேனில் நின்றவாறு முதல்வர் ஸ்டாலின் ‘ரோடு ஷோ’ நடத்தினார்.
அதைத்தொடர்ந்து ஸ்டாலின் பேசியதாவது: நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தல், 2024 மக்களவைத் தேர்தலில் திமுகவுக்கு மாபெரும் வெற்றியை கோவை மக்கள் தந்தீர்கள். அது 2026 தேர்தலிலும் முழு வெற்றியாக தொடர வேண்டும்.2021 தேர்தலில் கொடுத்த வாக்குறுதிகள் மட்டுமின்றி, கொடுக்காத பல்வேறு திட்டங்களையும் நிறைவேற்றிவிட்டு உங்கள் முன்பு வந்துள்ளேன். இவ்வாறு நான் கூறியதை போல், அதிமுக ஆட்சியில் பழனிசாமி செய்த சாதனைகளை அவரால் கூற முடியுமா? மகளிர் உரிமைத் தொகை திட்டம், விடியல் பயணம் என பழனிசாமி நம் திட்டங்களை ஒன்று விடாமல் காப்பி அடித்து அறிக்கையாக வெளியிட்டுள்ளார்.
தமிழ்நாட்டில் பல்வேறு இனம், மொழி, மாநிலங்களைச் சேர்ந்த மக்கள் அமைதியாக, நிம்மதியாக வாழ்கின்றனர். வந்தாரை வாழ வைக்கும் நம்மைப் பார்த்து அபாண்டமாக பழி போட்டவர் பிரதமர் மோடி. குடியரசு தின விழாவில் நம் அலங்கார ஊர்திக்கு இடமில்லை என மறுத்தனர். இதனால் தான் தமிழ்நாட்டில் உங்களுக்கு இடம் இல்லை என மக்கள் கூறுகின்றனர். தமிழ்நாட்டின் மீது வெறுப்பு ஊறிப்போய் உள்ள குணம் அவர்களுக்கு.
கோவை, மதுரை மெட்ரோ ரயில் திட்டத்தை நிராகரித்த அரசு தான் பாஜக அரசு. 20 லட்சம் மக்கள் தொகை இல்லை என காரணம் தெரிவிக்கின்றனர். கோவை, மதுரைக்கு மெட்ரோ ரயில் திட்டத்துக்கு அனுமதி மறுக்க வேண்டிய அவசியம் என்ன?. அந்த 2 நகரங்களும் தமிழ்நாட்டில் இருப்பது தான் காரணம். தமிழ்நாட்டை பார்த்தால் பாஜகவுக்கு எப்படித் தெரிகிறது. பாஜகவுக்கு வாக்களிக்காதது என்ன பாவச் செயலா?
மத்திய பட்ஜெட் தயாரிக்கும் போது, இயற்கை பேரிடருக்கு நிவாரண நிதி தரும் போது தமிழ்நாட்டை பாஜக மறந்துவிடும். தேர்தல் வந்தால் இவர்களுக்கு தமிழ்நாடு நினைவுக்கு வரும். இப்படியெல்லாம் நீங்கள் தமிழ்நாட்டை பழிவாங்குவதால்தான், எங்கள் மக்களுக்கும் வாக்குச்சாவடிக்கு செல்லும் போது பாஜக நினைவுக்கு வராது. இனியும் வரக்கூடாது. நீங்கள் என்ன திட்டம் போட்டு எங்கள் வளர்ச்சியை தடுத்தாலும், எங்கள் மக்களுக்கான திட்டத்தை நான் தொடர்ந்து கொடுப்போம். திராவிட மாடல் சாதனைகளை நாங்கள் தொடர்ந்து வெற்றியாக படைத்துக் கொண்டே இருப்போம்.
இதன் தொடர்ச்சியாக அடுத்த 5 ஆண்டுகளி்ல் திராவிட மாடல் 2.0 ஆட்சியில் என்னெ்ன செய்யப்போகிறோம் என தேர்தல் அறிக்கை வெளியிட்டுள்ளோம். இந்த தேர்தலில் திமுக தேர்தல் அறிக்கை தான் சூப்பர் ஸ்டார். நாங்கள் சொன்னால், செய்வதை தான் சொல்வோம். கோவை மக்கள் இம்முறை 10-க்கு 10 வெற்றியை திமுகவுக்கு, மதச்சார்பற்ற முற்போக்கு கூட்டணிக்கு வழங்க வேண்டும். நீங்கள் வழங்கும் வாக்கு ஒரு கூட்டணிக்காக மட்டுமல்ல, தமிழ்நாட்டின் வளர்ச்சிக்கு வழங்கும் வாக்கு.
பொருளாதார வளர்ச்சி, ஆடைகள், காலணிகள்,மின்னணு பொருட்கள் ஏற்றுமதியில் நம்பர் 1 என, இந்தியளவில் சாதித்துவிட்டு நாங்கள் வாக்குகேட்க வந்துள்ளோம். ஆனால், கலவரம் செய்தால் ஜெயித்துவிடலாம் என நினைக்கும் கட்சிக்கு தமிழ்நாடு தக்கபதிலடி தந்தாக வேண்டும். நீங்கள் தருவீர்கள். தமிழ்நாடு அணியா, டெல்லி அணியா என்ற ஜனநாயக போரில் அரசியல் விருப்பு, வெறுப்புகளுக்கு அப்பார்ப்பட்டு, தமிழ்நாட்டை காக்க கோவையில் உள்ள எல்லோரும் திமுக தலைமையிலான மதச்சார்பற்ற முற்போக்கு கூட்டணியை ஆதரிக்க வேண்டும். இவ்வாறு அவர் பேசினார்.
வேட்பாளர்கள் கோவை தெற்கு - செந்தில்பாலாஜி, கோவை வடக்கு - துரை.செந்தமிழ்செல்வன், கிணத்துக்கடவு - கேவிகே.சபரி கார்த்திகேயன், வால்பாறை - ஆர்.சுதாகர், சூலூர் - தளபதி முருகேசன் மற்றும் கூட்டணிக் கட்சிகளான பொள்ளாச்சி - நித்தியானந்தன் (கொமதேக), சிங்காநல்லூர் காங்கிரஸ் வேட்பாளர் ஆகியோரை அறிமுகப்படுத்தி முதல்வர் ஸ்டாலின் பிரச்சாரத்தில் ஈடுபட்டார்.