

திமுக சார்பில் புதுச்சேரி மற்றும் காரைக்கால் சட்டப்பேரவை தேர்தலுக்கு விருப்ப மனு அளித்தவர்களிடம் சென்னை அண்ணா அறிவாலயத்தில் முதல்வர் ஸ்டாலின் நேர்காணல் நடத்தினார். உடன் கட்சி நிர்வாகிகள்.படம் எல் சீனிவாசன்
சட்டப்பேரவை தேர்தலில் புதுச்சேரியில் திமுக சார்பில் போட்டியிட விருப்ப மனு அளித்தவர்களுக்கு நேற்று அண்ணா அறிவாலயத்தில் நேர்காணல் நடத்தப்பட்டது.
தமிழகத்தில் சட்டப்பேரவை தேர்தல் ஏப்ரல் 23-ம் தேதி நடைபெறவுள்ளது. புதுச்சேரியில் ஏப்ரல் 9-ம் தேதி வாக்குப்பதிவு நடைபெறுகிறது. இதையடுத்து ஆளும் கட்சியான திமுக தேர்தல் பணிகளை தீவிரப்படுத்தியுள்ளது.
இதனிடையே திமுக-வில், தேர்தலில் போட்டியிடுவதற்கான விருப்ப மனுக்கள் கடந்த பிப்ரவரி 20 முதல் மார்ச் 6-ம் தேதி வரை பெறப்பட்டன. இதில் அமைச்சர்கள், மூத்த நிர்வாகிகள், இளைஞரணி பொறுப்பாளர்கள் என 15,372 பேர் விருப்ப மனுக்களை வழங்கியிருந்தனர்.
இந்நிலையில், விருப்ப மனு அளித்தவர்களுக்கான நேர்காணல் சென்னை அண்ணா அறிவாலயத்தில் நேற்று தொடங்கியது. முதல் நாளில் புதுச்சேரி தொகுதிகளில் போட்டியிட விருப்ப மனுக்கள் வழங்கிய 116 பேர்களிடம் நேர்காணல் நடத்தப்பட்டது.
திமுக தலைவர் மு.க ஸ்டாலின், பொதுச்செயலாளர் துரைமுருகன், பொருளாளர் டி.ஆர்.பாலு, முதன்மைச் செயலாளர் கே.என்.நேரு, அமைப்புச் செயலாளர் ஆர்.எஸ்.பாரதி, புதுச்சேரி மண்டல பொறுப்பாளர் ஜெகத்ரட்சகன் எம்பி ஆகியோர் அடங்கிய குழு விருப்ப மனு அளித்தவர்களிடம் தனித்தனியாக நேர்காணல் நடத்தியது. அப்போது தொகுதி நிலவரம், வெற்றி வாய்ப்பு, தேர்தல் செலவுகள் உள்ளிட்ட விவரங்களை முதல்வர் ஸ்டாலின் கேட்டதாகக் கூறப்படுகிறது.
புதுச்சேரி தேர்தலில் காங்கிரஸுடன் தொகுதிப் பங்கீடு இன்னும் நிறைவடையாத நிலையில், அங்கு விருப்ப மனு அளித்தவர்களிடம் திமுக நேர்காணல் நடத்தி இருக்கிறது.
புதுச்சேரியை தொடர்ந்து தமிழகத்தில் உள்ள அனைத்து சட்டப்பேரவை தொகுதிகளுக்கான வேட்பாளர் நேர்காணல் இன்று (மார்ச் 18) தொடங்கி மார்ச் 22-ம் தேதி வரை நடைபெறவுள்ளது அதேபோல், தேர்தல் முடிவு வெளியாகும் நாளுக்கான கவுன்ட்டவுன் டிஜிட்டல் திரையும் அறிவாலயம் வளாகத்தில் வைக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.