

எடப்பாடி சட்டப்பேரவை தொகுதியில் ஜலகண்டாபுரத்தில் அதிமுக பொதுச் செயலாளர் பழனிசாமி மற்றும் பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் இணைந்து பிரச்சாரம் மேற்கொண்டனர்.
அதிமுகவை உடைக்க வேண்டும் என திமுக பல அவதாரம் எடுத்ததுபோல், பாமகவை உடைக்க எடுத்த முயற்சிகளை அன்புமணி தவிடு பொடியாக்கி விட்டார் என அதிமுக பொதுச்செயலாளர் பழனிசாமி தெரிவித்துள்ளார்.
தமிழகம் முழுவதும் அதிமுக மற்றும் கூட்டணி சார்பில் போட்டியிடும் வேட்பாளர்களை ஆதரித்து அதிமுக பொதுச்செயலாளர் பழனிசாமி சூறாவளி தேர்தல் பிரச்சார சுற்றுப்பயணம் மேற்கொண்டார். இதனை தொடர்ந்து, தனது சொந்த தொகுதியான எடப்பாடி சட்டப்பேரவை தொகுதியில் ஜலகண்டாபுரம், செட்டிமாங்குறிச்சி, எடப்பாடி, கொங்கணாபுரம் ஆகிய 4 இடங்களில் நேற்று தீவிர பிரச்சாரத்தில் ஈடுபட்டார்.
ஜலகண்டாபுரத்தில் நடந்த பிரச்சாரத்தில் அதிமுக பொதுச்செயலாளர் பழனிசாமியுடன் பாமக தலைவர் அன்புமணி கலந்து கொண்டார். கூட்டத்தில் பழனிசாமி பேசியதாவது: நான் முதல்வராக இருந்த போது என்னென்ன பிரச்சினைகளை சந்தித்தேனோ, அதை அன்புமணி ராமதாஸ் சந்தித்து விட்டார். இரண்டு பேரும் பிரச்சினைகளை சந்தித்து விட்டு தான் உங்களை சந்திக்கிறோம். அதிமுகவை உடைக்க வேண்டும் என திமுக பல அவதாரம் எடுத்ததுபோல், பாமகவை உடைக்க எடுத்த முயற்சிகளை அன்புமணி தவிடு பொடியாக்கி விட்டார். அதிமுக மற்றும் பாமகவை வீழ்த்த முடியாது.
ஸ்டாலின் எண்ணம் எல்லாம் நிராசையாகிவிட்டது. அவர் கண்ட கனவு ஒன்று, நடந்தது ஒன்று. ஸ்டாலின் ஆட்சிக்கு முடிவு கட்டும் தேர்தல் தான் இந்த தேர்தல். ஸ்டாலின் தன்னுடைய மகனை உயர்ந்த இடத்தில் அமர்த்த வேண்டும் என நினைத்துக் கொண்டு இருக்கிறார். மக்களின் நலனை பற்றி கவலைப்படாதவர் ஸ்டாலின்.
மக்களின் ஆதரவுடன் தேர்தலில் அதிமுக வெற்றி பெற்று ஆட்சிக்கு வரும். திமுகவின் துணை பொதுச்செயலாளரும், எம்.பி.யுமான திருச்சி சிவா, காமராஜரை தரக்குறைவாக பேசியதை, ஸ்டாலினால் தட்டிக் கேட்க முடியவில்லை. எல்லாவற்றிலும் கமிஷன் வருவதால் திமுக கண்டு கொள்வதில்லை. தமிழகத்தில் சட்டம் ஒழுங்கு சீர் கெட்டுள்ளது.
தற்போது, சட்டப்பேரவை தேர்தலில் மிகப்பெரிய வெற்றியை தாருங்கள். எடப்பாடி தொகுதியில் நான் நிற்கவில்லை. இந்த தொகுதியின் மக்கள் தான் வேட்பாளர்கள். என்னை அதிக வாக்கு வித்தியாசத்தில் வெற்றி பெற வையுங்கள். யாராக இருந்தாலும், எப்போது வேண்டுமானலும் என்னை சந்திக்கக் கூடியவனாக நான் எளிமையாக இருக்கிறேன். இவ்வாறு அவர் பேசினார்.
பிரச்சாரத்தில் அன்புமணி பேசும்போது, “தமிழகத்தில் அதிக வாக்கு வித்தியாசத்தில் பழனிசாமியை இந்த தொகுதியில் வெற்றி பெற வைக்க வேண்டும். இன்னும் 2 வாரத்தில் ஆட்சி மாற்றம் நடக்கும். பழனிசாமி முதல்வராக வருவது உறுதி. தமிழகத்தில் உள்ள தாய்மார்கள், பெண்களுக்கு பாதுகாப்பு வேண்டுமென்றால் பழனிசாமி முதல்வராக வர வேண்டும். தமிழகம் முழுவதும் நம் கூட்டணி வெற்றி பெறும்” என்றார்.