

சென்னை: லூப் சாலையில் ஆக்கிரமிப்புகளை அகற்றி போக்குவரத்து நெரிசலை குறைக்க உயர் நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவை அமல்படுத்தவில்லை எனக்கூறி தொடரப்பட்ட அவமதிப்பு வழக்கை விசாரித்த உயர் நீதிமன்றம், சென்னை மாநகராட்சி ஆணையர், காவல் ஆணையர், மாவட்ட ஆட்சியர் டிச.1-ம் தேதி ஆஜராக உத்தரவிட்டுள்ளது.
மெரினா கடற்கரை கலங்கரை விளக்கம் முதல் பட்டினப்பாக்கம் வரையுள்ள லூப் சாலையில் உள்ள ஆக்கிரமிப்புகளை அகற்றுமாறு சென்னை உயர் நீதிமன்றம் கடந்த 2023, 2025-ம் ஆண்டுகளில் தாமாக முன்வந்து விசாரித்து உத்தரவு பிறப்பித்தது.
ஆனால், இந்த உத்தரவை மீறி அப்பகுதியில் சாலையோரக் கடைகள், உணவகங்கள் இயங்கி வருவதாகவும், இதனால் அப்பகுதியில் போக்குவரத்து நெரிசல் ஏற்படுவதாகவும் கூறி நொச்சிகுப்பத்தைச் சேர்ந்த ஆனந்த் உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார்.
இந்த வழக்கை ஏற்கெனவே விசாரித்த உயர் நீதிமன்றம், லூப் சாலையில் எவ்வித போக்குவரத்து இடையூறும் ஏற்படாமல் அதிகாரிகள் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என உத்தரவிட்டது.
ஆனால் அந்த உத்தரவையும் அதிகாரிகள் மதித்து நடக்கவில்லை என்று ஆனந்த் உயர் நீதிமன்றத்தில் அவமதிப்பு வழக்கு தொடர்ந்தார்.
நீதிபதிகள் ஏ.டி.ஜெகதீஷ் சந்திரா, ஷமீம் அகமது அமர்வில் இந்த வழக்கு விசாரணைக்கு வந்தது. அப்போது, மனுதாரர் தரப்பில் ஆஜரான வழக்கறிஞர் டி.எஸ்.லவனேஷ், “லூப் சாலையில் நெரிசல் இன்றி வாகனங்கள் சீராக இயங்கும் வகையில் ஆக்கிரமிப்புகளை அகற்றி போக்குவரத்து ஒழுங்குபடுத்தப்படும் என அரசு தலைமை வழக்கறிஞர் கடந்த ஆண்டு பிப்ரவரியில் உறுதி அளித்ததால் வழக்கு முடித்து வைக்கப்பட்டது.
ஆனால், இன்னும் அந்த பிரச்னைக்கு தீர்வு காணவில்லை” என்றார். இதுதொடர்பாக நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாக அரசு தரப்பில் ஆஜரான கூடுதல் தலைமை வழக்கறிஞர் அப்துல் ஹமீது, மாநகராட்சி, காவல் துறை, ஆட்சியர் தரப்பில் ஆஜரான வழக்கறிஞர்கள் பிரசாந்த் நடராஜ், நித்யா முத்துகுமாரசாமி, துரை குணசேகரன் தெரிவித்தனர்.
இதை ஏற்க மறுத்த நீதிபதிகள், இந்த அவமதிப்பு வழக்கில் சென்னை மாநகராட்சி ஆணையர், சென்னை காவல் ஆணையர், ஆட்சியர், போக்குவரத்து கூடுதல் காவல் ஆணையர் ஆகியோர் டிச.1-ம் தேதி ஆஜராக உத்தரவி்ட்டு விசாரணையை தள்ளிவைத்தனர்.