

சென்னை: மின்சார வாகன உள்கட்டமைப்புக்கான தேவையைக் கருத்தில் கொண்டு, சென்னை ரயில்வே கோட்டத்தின் 21 புறநகர் ரயில் நிலையங்களில் மின்சார வாகன பேட்டரி மாற்றும் வசதி ஏற்படுத்தப்பட்டுள்ளது. இதன்மூலம், ரயில்வே நிர்வாகத்துக்கு ஆண்டுக்கு ரூ.53.43 லட்சம் வருவாய் கிடைக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
தெற்கு ரயில்வேயில் சென்னை ரயில்வே கோட்டத்தின் நிலையான மற்றும் சுற்றுச்சூழலுக்கு உகந்த போக்குவரத்தை மேம்படுத்தும் நோக்கில், மத்திய அரசு மற்றும் ரயில்வே வாரியத்தின் பசுமைப் போக்குவரத்து கொள்கையின்படி, கார்பன் உமிழ்வைக் குறைக்கவும் மின்சார வாகனங்களின் பயன்பாட்டை ஊக்குவிக்கவும் சென்னை முழுவதும் உள்ள முக்கிய புறநகர் ரயில் நிலையங்களில் மின்சார வாகனங்களுக்கான பேட்டரி மாற்றும் நிலையங்களை அமைக்கும் பணியைத் தொடங்கியுள்ளது.
இந்த பேட்டரி மாற்றும் நிலையங்களை நிறுவி இயக்குவதற்காக 5 ஆண்டுகளுக்கு மொத்தம் 21 ஒப்பந்தங்கள் வழங்கப்பட்டுள்ளன. இதன்மூலம் ரயில்வே நிர்வாகத்துக்கு ஆண்டு உரிமக் கட்டணமாக ரூ.53.43 லட்சம் வருவாய் கிடைக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
மேலும் இத்தகைய வசதிகளை பயணிகள் வருகை அதிகம் உள்ள நிலையங்களில் விரிவுபடுத்த முடிவு செய்யப்பட்டுள்ளது. இதுகுறித்து சென்னை ரயில்வே கோட்ட அதிகாரிகள் கூறியதாவது: பயணிகள் வருகை அதிகமுள்ள ரயில் நிலையங்களில், மின்சார வாகன பேட்டரி மாற்றும் வசதி ஏற்படுத்தப்படுகிறது.
அந்த வகையில், சென்னை சென்ட்ரல், அண்ணனூர், பசுமை வழிச்சாலை, கொரட்டூர், கோட்டூர்புரம், சிந்தாதிரிப்பேட்டை, முண்டகக்கண்ணி அம்மன் கோவில், கோடம்பாக்கம், மந்தைவெளி, சென்னை எழும்பூர், திருவல்லிக்கேணி, திருமயிலை, பெருங்குடி, பல்லாவரம், சைதாப்பேட்டை, பரங்கிமலை, தரமணி, திருவான்மியூர், வேளச்சேரி, வில்லிவாக்கம், வண்ணாரப்பேட்டை ஆகிய 21 புறநகர் ரயில் நிலையங்களில் இந்த வசதி ஏற்படுத்தப்பட்டுள்ளன.
இந்த பேட்டரி மாற்றும் முறை, மின்சாரம் தீர்ந்த பேட்டரிகளை மிகக் குறுகிய காலத்துக்குள் முழுமையாக சார்ஜ் செய்யப்பட்ட பேட்டரிகளாக மாற்றிக்கொள்ள வழிவகை செய்கிறது. அங்கீகரிக்கப்பட்ட சார்ஜ் பாயின்ட் ஆபரேட்டர்களின் (CPOs) மொபைல் செயலிகள் மூலம் இந்த வசதியை எளிதாகப் பயன்படுத்த முடியும்.
ஒப்பந்தத்தின்படி, உரிமம் பெற்ற நிறுவனங்களே இந்த வசதிகளை நிறுவி இயக்கி, பராமரிக்கும் பொறுப்பை ஏற்கும். ரயில்வே நிர்வாகம் நிலைய வளாகத்துக்குள் அதற்கான இடத்தை வழங்கும். இந்த வசதியை ஏற்படுத்த மிகக் குறைந்த இடத்தையே எடுத்துக்கொள்வதால், பயணிகளுக்கு எந்த இடையூறும் ஏற்படாது.
லட்சக்கணக்கான பயணிகள் பயணிக்கும் சென்னை கோட்டத்தின் புறநகர் ரயில் நிலையங்களில் அமைக்கப்படும் இந்த வசதி, மின்சார வாகனங்களைப் பயன்படுத்துபவர்களுக்கு உதவியாக அமையும். இந்த வசதியை விரிவுபடுத்த, கூடுதல் இடங்களை அடையாளம் கண்டு வருகிறோம் என்று அவர்கள் கூறினர்.