

திருவல்லிக்கேணி ஸ்ரீபார்த்தசாரதி கோயில் பிரம்மோற்சவ விழாவின் முக்கிய நிகழ்வான தேரோட்டம் நேற்று நடைபெற்றது. மாடவீதிகளில் ஏராளமான பக்தர்கள் வடம் பிடித்து தேர் இழுத்தனர். | படங்கள்: எல்.சீனிவாசன் |
சென்னை: திருவல்லிக்கேணி பார்த்தசாரதி கோயில் பிரம்மோற்சவ விழாவின் முக்கிய நிகழ்வான தேரோட்டம் விமரிசையாக நடைபெற்றது. திரளான பக்தர்கள் கலந்துகொண்டு, வடம் பிடித்து தேர் இழுத்தனர்.
சென்னை திருவல்லிக்கேணி பார்த்தசாரதி கோயில் 108 வைணவ திவ்ய தேசங்களில் ஒன்றாகும். இக்கோயிலில் ஸ்ரீபார்த்தசாரதி பெருமாளுக்கு சித்திரை மாதத்திலும், நரசிம்மருக்கு ஆனிமாதத்திலும் பிரம்மோற்சவம் நடைபெறும்.
அந்த வகையில், இந்த ஆண்டுக்கான பார்த்தசாரதி பெருமாள் பிரம்மோற்சவம் கடந்த 1-ம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. இதை தொடர்ந்து, காலை, மாலை வேளைகளில் புன்னைமரம், சேஷ வாகனம், சிம்ம வாகனம் ஆகியவற்றில் பெருமாள் வீதி உலா வந்து பக்தர்களுக்கு அருள்பாலித்தார்.
கடந்த 3-ம் தேதி கருட சேவை விமரிசையாக நடைபெற்றது. இதை தொடர்ந்து, ஹம்ச வாகனம், சூரிய பிரபை, சந்திர பிரபை, பல்லக்கு சேவை, அனுமந்த வாகனம், ஆனந்த விமானம், யானை வாகனம் எனத் தொடர்ச்சியாக உற்சவங்கள் நடைபெற்றன.
சர்வ அலங்காரத்துடன் தேரில் எழுந்தருளிய ஸ்ரீபார்த்தசாரதி பெருமாள்.
இந்நிலையில், விழாவின் முக்கிய நிகழ்வான தேரோட்டம் நேற்று கோலாகலமாக நடைபெற்றது. இதைக் காண நள்ளிரவு முதலே சென்னை மற்றும் சுற்று வட்டாரப் பகுதிகளில் இருந்து ஆயிரக்கணக்கான பக்தர்கள் கோயில் வளாகத்தில் குவிந்தனர்.
நேற்று அதிகாலை 3.30 மணி முதல் 4.30 மணிக்குள் பார்த்தசாரதி பெருமாள் சர்வ அலங்காரத்துடன் தேரில் எழுந்தருளினார். காலை 7 மணிக்கு ‘கோவிந்தா, கோவிந்தா’ முழக்கத்துடன் தேரோட்டம் தொடங்கியது.
மாட வீதிகளை வலம் வந்த தேர், காலை 9 மணி அளவில் நிலையை வந்தடைந்தது. இரவு 9 மணிக்கு தோட்டத் திருமஞ்சனம் நடைபெற்றது. இன்று காலை 6.15 மணிக்கு வெண்ணெய்தாழி உற்சவமும், இரவு குதிரை வாகன சேவையும் நடைபெற உள்ளது.
நாளை காலை 11 மணிக்கு தீர்த்தவாரி உற்சவம், இரவு கண்ணாடி பல்லக்கு சேவை நடைபெற உள்ளது. 10-ம் தேதி சப்தாவர்ணம் எனும் சிறிய திருத்தேர் நிகழ்வுடன் பிரம்மோற்சவ விழா நிறைவடைகிறது.