“மாணவர்கள் இடையே சாதிய வெறி வளர்ந்து நிற்பதற்கு யார் பொறுப்பு?” - அரசை சாடும் இபிஎஸ்

“மாணவர்கள் இடையே சாதிய வெறி வளர்ந்து நிற்பதற்கு யார் பொறுப்பு?” - அரசை சாடும் இபிஎஸ்
Updated on
1 min read

சென்னை: “மாணவர் ஜீவானந்தம் தாக்குதல் குறித்து உடனடியாக வழக்கு பதிந்து, சட்டபூர்வ நடவடிக்கையினை மேற்கொள்ள வேண்டும். இப்படி மாணவர்கள் இடையே சாதிய வெறி வளர்ந்து நிற்பதற்கு யார் பொறுப்பு?” என அதிமுக பொதுச் செயலாளர் இபிஎஸ் கேள்வி எழுப்பியுள்ளார்.

இது குறித்து அவர் தனது எக்ஸ் தளத்தில், “தூத்துக்குடி மாவட்டம், சாத்தான்குளம் அருகே முதலூரில், கடந்த 19-ம் தேதி (வியாழக்கிழமை) 11-ம் வகுப்பு மாணவர் ஜீவானந்தம் மீது பள்ளியிலேயே சக மாணவர்கள் சாதி வெறியில் கொலைவெறித் தாக்குதல் நடத்தியுள்ளதாக வரும் செய்தி அதிர்ச்சியளிக்கிறது. தாக்குதல் நடந்து நான்கு நாட்கள் ஆகியும் இதுவரை வழக்கு பதியாமல், எந்தவித நடவடிக்கையும் எடுக்காமல் திமுக அரசு இருப்பதாக செய்திகள் வருகின்றன.

இதுதான் சமூக நீதியா முதல்வர் ஸ்டாலின அவர்களே? இந்தச் சம்பவமெல்லாம் எந்த மாடலில் வருகிறது? இப்படி மாணவர்கள் இடையே சாதிய வெறி வளர்ந்து நிற்பதற்கு யார் பொறுப்பு? பிரச்சார மேடை போட்டு தன் ஆட்சி பற்றி இல்லாத பெருமைகளை ரீல் ரீலாக அளந்து விடும் முதல்வர், ரியலாக நடக்கும் இந்த சமூக அநீதிகளைப் பற்றி ஒருவார்த்தை பேசினாரா? அல்லது, இனியாவது பேசுவாரா? தன் கூட்டணி கட்சித் தலைவரே சுட்டிக்காட்டி இருக்கும் இந்தச் செய்திக்கு, தனது அரசின் நடவடிக்கையின்மைக்கு, என்ன விளக்கம் தரப்போகிறார் இந்த முதல்வர்?

மாணவர் ஜீவானந்தம் தாக்குதல் குறித்து உடனடியாக வழக்கு பதிந்து, சட்டபூர்வ நடவடிக்கையை மேற்கொள்ள வேண்டும் என ஸ்டாலின் மாடல் திமுக அரசை வலியுறுத்துகிறேன். தமிழக மக்களே, சமத்துவ சமுதாயம் காணும் நாளே உண்மையான விடியல். இந்த ஆட்சியை வீட்டுக்கு அனுப்பி, அந்த சமூகநீதி விடிவுகாலத்தை நோக்கி நாம் பயணிப்போம் ஒன்றாக” என்று அவர் தெரிவித்துள்ளார்.

“மாணவர்கள் இடையே சாதிய வெறி வளர்ந்து நிற்பதற்கு யார் பொறுப்பு?” - அரசை சாடும் இபிஎஸ்
“நீக்கப்பட்ட 328 உதவி பேராசிரியர்களை பணி நிரந்தரம் செய்க” - அண்ணாமலை

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in