

சென்னை: “இந்த 100 நாள் ஆட்சி மக்களுக்கான சர்க்கார் அல்ல, வெறும் ‘சர்க்கஸ் சர்க்கார்” என திமுக சட்டத்துறை இணைச் செயலாளர் இ.பரந்தாமன் தெரிவித்தார்.
சென்னையில் செய்தியாளர்களிடம் பேசிய அவர், ‘தவெக அரசு பொறுப்பேற்ற போது ‘இட்ஸ் எ பிகினிங் ஆஃப் ஏ நியூ எரா’ என்று சொன்னார். உண்மைதான், 100 நாளில் 546 குற்றச் சம்பவங்களைச் செய்த ஒரு புதிய சகாப்தம். இன்றைக்கு விஜய்யினுடைய சர்க்கஸ் சர்க்கார் ஆட்சியின் சாதனை இது. 'பெண்கள் பாதுகாப்பை ரொம்ப நான் ஸ்ட்ரிக்ட்டா வச்சிருப்பேன்'னு சொன்னார்.
ஆனால், இன்னைக்கு பெண்களுக்கான பாதுகாப்பு எந்த அளவில் தமிழ்நாட்டில் இருக்கின்றது என நாட்டு மக்களுக்கே நன்றாகத் தெரியும். தவெக கட்சியில் இருக்கக்கூடிய பெண்களுக்கே பாதுகாப்பு கொடுக்க முடியாத ஒரு பலவீனமான சர்க்காராகத்தான் இது இருக்கிறது.
'போதை கலாச்சாரத்திலிருந்து நம்ம பசங்களை மீட்க வேண்டும், அவர்களைக் காப்பாற்ற வேண்டிய பொறுப்பு நமக்கு இருக்கு' என்று சொன்னார். ஆனால், போதை பழக்கமும், கடத்தலும் இங்கு தீவிரமாக இருக்கிறது. 'இந்தக் கல்லூரி வளாகத்தில் போதைப்பொருள் கடத்தப்படுகிறது, விற்கப்படுகிறது' என்று காவல் துறைக்குத் தகவல் கொடுத்த கோவை கல்லூரி மாணவன் அமுதனுக்கு பாதுகாப்பு கொடுக்க முடியாத வெட்கக்கேடான சர்க்கஸ் சர்க்கார் அரசுதான் இந்த விஜய்யின் அரசு.
'ஜென்ஸீ' பிள்ளைகள் எல்லாம் ஆர்வமாக வாக்களித்தார்களே, இந்த முதல்வருக்கு, இன்றைக்கு 'ஜென்ஸீ'-கள் மட்டும் ஏறத்தாழ 10-க்கும் மேற்பட்ட இளைஞர்கள் கொல்லப்பட்டிருக்கிறார்கள், இந்த கொலைப் பழியை முதல்வர் ஏற்றுக்கொண்டுதான் ஆக வேண்டும். இந்த 100 நாளில் பல குற்றச் சம்பவங்கள் தமிழ்நாட்டில் நடந்திருக்கிறது. நான் ஏற்கனவே சொன்னது மாதிரி 546 குற்றச் சம்பவங்கள் இருக்கிறது.
இந்த ஒரு வாரத்தில் மட்டும் நடந்த குற்றங்களின் எண்ணிக்கையை எடுத்துக்கொண்டால், கோவையில் போதைப்பொருளைப் பற்றித் தகவல் கொடுத்ததாகச் சொல்லி, அமுதன் என்கிற மாணவனை அடித்துக் கொன்றுள்ளனர். அந்த மாணவன் போதை பொருள் பற்றி கொடுத்த தகவலை காவல் துறையே போதை கும்பலிடம் கொடுத்துள்ளது. ஆனால், சட்டப்பேரவையில் 'இரு கோஷ்டிகளுக்கு இடையேயான மோதல்'னு சொல்லி வழக்கின் தன்மையை திசைதிருப்புகிறார் முதல்வர்.
அமுதனுடைய தாயார் சொல்லுகிறார்கள், 'அரசின் மீது எங்களுக்கு நம்பிக்கை இல்லை; எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதிதான் எங்களுக்கு நீதி பெற்றுத் தர வேண்டும்' என்று சொல்லுகிறார்கள் என்றால், ஆளுகிற அரசின் மீது இந்த நாட்டு மக்களுக்கு நம்பிக்கை இல்லை. எதிர்க்கட்சியாக இருக்கக்கூடிய திராவிட முன்னேற்றக் கழகத்தின் மீதுதான் நம்பிக்கை இருக்கிறது என்பதை இது காட்டுகிறது.
நேற்றைக்கு திருவொற்றியூரில் இரண்டு அமைச்சர்களை (ஆதவ் அர்ஜுனா மற்றும் ராஜ்மோகன்) ஓட விட்டிருக்கிறார்கள். இந்த 100 நாள் சாதனை என்னவென்று சொன்னால், அமைச்சர்களைத் தலைதெறிக்க ஓட வைத்ததுதான் இந்த 100 நாள் சாதனை. இதே மாதிரி தண்டையார்பேட்டையில் கஞ்சா விற்றதைத் தட்டிக் கேட்ட பையனை அம்மிக்கல்லைத் தூக்கிப் போட்டுக் கொலை செய்திருக்கிறார்கள். திருவெறும்பூரில் இரண்டு தவெககாரர்கள் ஒருத்தரை வெட்டிக் கொலை செய்திருக்கிறார்கள்.
விருதுநகரில் ஒரு பள்ளி மாணவியை துன்புறுத்தியதைத் தட்டிக் கேட்ட அப்பாவை வெட்டிக் கொன்றிருக்கிறார்கள். காஞ்சிபுரத்தில் கோயில் திருவிழாவில் இரண்டு இளைஞர்களை வெட்டிக் கொன்றிருக்கிறார்கள். திருப்பூரில் காதலை மறுத்த பெண்ணைக் கொலை செய்ததோடு மட்டுமல்லாமல், அந்த அம்மாவையும் கொன்றிருக்கிறார்கள். ஈரோட்டில் ஃபேன்சி ஸ்டோருக்குள் புகுந்து ஒரு பெண்ணைக் கத்தியால் குத்தியிருக்கிறார்கள். இதெல்லாம் கடந்த ஒரு வாரத்தில் நடந்த குற்றச் சம்பவங்கள்.
அம்பத்தூர் புதூரில் ஆட்டோவில் ஒரு பெண்ணை உட்கார வைத்து கழுத்தை அறுத்து ரோட்டில் வீசியிருக்கிறார்கள். இந்த மாதிரியான குற்றச் சம்பவங்கள் எல்லாம் இதற்கு முன்னால் நடந்ததே இல்லை. சினிமா படத்தில் வருகிற மாதிரியான கொலைக் காட்சிகளை அரங்கேற்றிக் கொண்டிருக்கிறார்கள். கும்மிடிப்பூண்டியில் 17 வயது இளைஞனைக் கொன்று கல்லறை மேல போட்டு ரீல்ஸ் எடுத்து வெளியிடுகிறார்கள். இதெல்லாம் எந்தக் கலாச்சாரத்தைக் காட்டுகிறது?
ஒரு திரைத்துறையிலிருந்து வந்தவர் தமிழ்நாட்டுக்கு முதல்வர். அதனுடைய விளைவு என்னவென்றால், நீங்கள் திரைப்படத்தில் நடித்த ஹீரோயிசத்தைப் பார்த்து இன்றைக்கு தமிழ்நாட்டு இளைஞர்கள் இதைச் செய்கிறார்கள். தமிழ்நாட்டு இளைஞர்களுக்கு நீங்கள் ஒரு தவறான முன்னுதாரணமாக இருக்கிறீர்கள் என்பதைத்தான் இது காட்டுகிறது.
'நான் ஆட்சிக்கு வந்த பிறகு மக்களுக்கான ஆட்சியைத் தருவேன்' என்று சொன்னீர்களே? காவிரி நதிப் பிரச்சனைக்காக நீங்கள் வாய் திறந்திருக்கிறீர்களா? கர்நாடகாவில் தமிழர்களைச் சுட்டுக் கொன்றார்களே, அதற்காக வாய் திறந்து பேசியிருக்கிறீர்களா? ஜூன் 12-ஆம் தேதி மேட்டூர் தண்ணீர் திறந்து விட வேண்டுமே, அதைப்பற்றி வாய் திறந்து பேசியிருக்கிறீர்களா?
மேகேதாட்டு அணை கட்டப்படுவதைத் தடுக்கத் தனியாக டிரிப்யூனல் அமைக்கப்பட வேண்டும் என்று ஒன்றிய அமைச்சரிடத்தில் போய்க் கேட்டிருக்கிறீர்களா? ஒன்றிய அரசிடத்தில் பம்புகிற முதல்வராகத்தான் இருக்கிறீர்களே தவிர, தமிழ்நாட்டில் சட்டப் பேரவையிலும் வெளியிலேயும் மட்டும்தான் பாயும் முதல்வராகக் காட்டிக்கொள்கிறீர்கள்.
சட்டப்பேரவையில் எதிர்க்கட்சித் தலைவர். கோவையில் நடைபெற்ற கொலைச் சம்பவத்திற்கும், தமிழ்நாட்டில் நடைபெற்று வருகிற பல்வேறு கொலைக் குற்றங்களுக்கும் சிறப்பு கவன ஈர்ப்பு தீர்மானத்தைக் கொடுத்து, பதில் கொடுக்க வேண்டிய இடத்தில் இருக்கக்கூடிய முதல்வர் இன்றைக்கு சட்டப்பேரவைக்குள் வந்து உட்காரவில்லை.
காவல் துறையைக் கையில் வைத்திருக்கும் முதல்வர் பேசாமல் ஓடி ஒளிந்துகொண்டிருக்க, சம்பந்தமே இல்லாத அமைச்சர்கள் எல்லாம் எழுந்து பேசிக்கொண்டிருக்கிறார்கள். இது என்ன மாண்பு? என்ன மரபை நீங்கள் கடைப்பிடிக்கிறீர்கள்?
இந்த 100 நாட்களில் சட்டம்-ஒழுங்கு சந்தி சிரித்திருக்கிறது. விலைவாசி கட்டுக்கடங்காமல் ஏறியிருக்கிறது. அரிசி விலை கிலோவுக்கு ரூ.30 ஏறியிருக்கிறது, ஆவின் பால் தட்டுப்பாடு ஏற்பட்டிருக்கிறது, மின்சாரக் கட்டணம் ஷாக் அடிக்கிறது. மக்களுடைய அன்றாடப் பிரச்சினையைப் பற்றி அரசாங்கத்தில் யாராவது வாய் திறந்து பேசுகிறார்களா? சட்டப்பேரவையில் கேட்கும் கேள்விக்கு அந்தந்தத் துறை மந்திரிகள் யாராவது பதில் சொல்கிறார்களா?
சட்டமன்றம் நடந்துகொண்டிருக்கும்போது தேவையில்லாமல் முதல்வரோ அமைச்சர்களோ வெளியில் நிகழ்ச்சிகளில் போய் கலந்துகொள்ளக் கூடாது. கவன ஈர்ப்பு தீர்மானத்தின் போது எங்கே போயிருந்தீர்கள் சார்? போன இடத்தில் உங்கள் சாதனையைப் பேசினீர்களா? இல்லையே. முதலீட்டாளர்கள் மாநாட்டில் பத்திரிகையாளர்களை அனுமதித்தீர்களா? ஏனென்றால் குட்டு வெளிப்பட்டுவிடும். உள்ளே போனால் வந்திருப்பவர்கள் உண்மையான முதலீட்டாளர்களா அல்லது கோட்-சூட் மாட்டி வந்தவர்களா என்பது தெரிந்துவிடும் என்பதால் பத்திரிகையாளர்களை அனுமதிக்கவில்லை.
சினிமா படத்தில் நடிப்பது போலவே இன்னைக்கு ஆட்சியிலும் நடித்துக்கொண்டிருக்கிறீர்கள். 100 நாளில் சாதித்தது என்ன என்று ஒரு வீடியோ வெளியிடுகிறீர்கள்; அதில் பதவி ஏற்பு விழாவில் பேசிய பேச்சையும் விட்ட டயலாக்குகளையும்தான் காட்டியிருக்கிறீர்களே தவிர, சாதனையை அல்ல! பத்திரிகையாளர்களைச் சந்தித்துச் சாதனை எதையாவது சொல்லியிருக்கிறாரா?
ரூ.15,000 கோடி வருவாய் வந்துவிட்டதாகப் பொய் சொல்கிறார்கள். லீக்கேஜை அடைத்துவிட்டோம் என்று வாயில் வடை சுடுகிறார்களே தவிர, நிஜமாக எந்த ஆதாரமும் நிதிநிலை அறிக்கையில் இல்லை. பாரதிய ஜனதா கட்சியைக் கண்டு அஞ்சி பம்பும் 'டம்மி முதல்வராக' விஜய் இருக்கிறார். இந்த 100 நாள் ஆட்சியில் சட்டம்-ஒழுங்கு சீர்குலைந்து, போதைப்பொருள் புழக்கம் அதிகரித்து, தமிழ்நாட்டை நாசமாக்கிக் கொண்டிருக்கிறார்கள். சட்டப்பேரவையில் அந்தந்த கேள்விகளுக்கு அந்தந்த அமைச்சர் பதில் சொல்ல வேண்டும். ஆனால் அது எல்லாம் தெரியாமல் அரவேக்காட்டு அமைச்சராக உள்ளார்கள்.
நீட் மசோதா பற்றிப் பேசும் தவெக அமைச்சர் ஆதவ் அர்ஜுனாவுக்கு அடிப்படை அரசியல் அறிவோ பாராளுமன்ற நடவடிக்கைகளோ தெரியவில்லை. 'மெடிக்கல் கவுன்சில் ஆஃப் இந்தியா' அறிவிப்பை நாடாளுமன்ற மசோதா என்று அரைகுறையாகப் பேசுகிறார்கள். மாநில உரிமைகளை விட்டுக் கொடுக்க மாட்டோம் என்று சொல்லும் முதல்வர் விஜய், பல்கலைக்கழகத் துணைவேந்தர் நியமனத்தில் யுஜிசி பிரதிநிதியை நியமிக்க ஒப்புக்கொண்டது ஏன்? பொம்மை முதல்வராக, டம்மி முதல்வராகத்தான் இவர் இருக்கிறார்.
இந்த 100 நாள் ஆட்சி மக்களுக்கான 'சர்க்கார்' அல்ல, வெறும் 'சர்க்கஸ் சர்க்கார்'. நாளுக்கு நாள் நாசமாகும் தமிழ்நாடு இது. இந்த 100 நாட்களில் செய்ததெல்லாம் சட்டம் ஒழுங்கு சந்தி சிரிக்குது.
போதை பொருள் நடமாட்டம் அதிகரித்துள்ளது. விலைவாசி பிரச்சினை, விவசாயிகள் பிரச்சினை என எதையும் சரிசெய்ய முடியாமல் பல்லிளிக்கிறது இந்த 100 நாள் ஆட்சி’ எனத் தெரிவித்துள்ளார்.