

கள்ளக்குறிச்சி: ‘நாம் இப்போது அங்கீகாரம் பெற்ற கட்சியாக இருக்கிறோம். வரும் காலத்தில் விசிக தமிழகத்தில் ஆளும் கட்சியாக வளர வேண்டும். விசிகவும் தவெகவும் இனி தமிழக அரசியல் களத்தில் இணைந்தே பயணிக்கும்’ என விசிக தலைவர் திருமாவளவன் தெரிவித்தார்.
கள்ளக்குறிச்சி மாவட்டம் உளுந்தூர்பேட்டையில் விடுதலை சிறுத்தைகள் கட்சியின் சார்பில் ‘தமிழ்த் தேசிய எழுச்சி மாநாடு’ இன்று நடைபெற்றது. இந்த மாநாட்டில் உரையாற்றிய விசிக தலைவர் திருமாவளவன், “இலங்கை அரசு புதிதாக வரையறுக்கவுள்ள அரசியலமைப்பு சட்டம், கடந்த 77 ஆண்டுகளாக தமிழர்கள் எதிர்கொண்டுவரும் இன பாகுபாடு, அரசியல் உரிமைகள் மறுப்பு, இன நில ஆக்கிரமிப்பு, திட்டமிட்ட சிங்கள குடியேற்றம், தமிழர் அடையாள சிதைப்பு போன்றவற்றை மேலும் தீவிரப்படுத்தும் வகையில் அமையும் என்ற அச்சம் தமிழர்களிடையே மேலோங்கியுள்ளது.
முழுமையான ஒற்றையாட்சி முறையை திணித்து, தமிழ் மக்களின் வாழ்வுரிமைகளை முற்றாக சிதைக்கும் வகையில் இச்சட்டம் வடிவமைக்க இருப்பதாக தெரியவருகிறது. தமிழர்களின் ஜனநாயக உரிமைகளை பாதுகாக்கும் வகையில் இச்சட்டம் அமைந்திட வேண்டுமென வலியுறுத்துகிறோம்.
நாம் இப்போது அங்கீகாரம் பெற்ற கட்சியாக இருக்கிறோம். வரும் காலத்தில் விசிக தமிழகத்தில் ஆளும் கட்சியாக வளர வேண்டும். இத்தனை காலம் நாம் ஆளும் கட்சியோடு கூட்டணி வைத்தோம். திமுக ஆளும் கட்சி, அதிமுக ஆளும் கட்சி, காங்கிரஸ் ஆளும் கட்சி. இன்று ஆளும் முதல்வர் ஜோசப் விஜய்யோடு கூட்டணி வைத்திருக்கிறோம். விசிகவும் தவெகவும் இனி தமிழக அரசியல் களத்தில் இணைந்தே பயணிக்கும். விசிகவும் ஆளும் கட்சியாக பரிணமிக்கும்.
விசிக தமிழகத்தில் தவிர்க்க முடியாத ஓர் அரசியல் சக்தி என்பதை இம்மாநாடு மீண்டும் உறுதிப்படுத்தியுள்ளது. இந்த மாநாட்டுக்கு லட்சக்கணக்கான சிறுத்தைகள் திரண்டுள்ளன. உங்களுக்கு பாதிப்பு ஏற்படக்கூடாது என்பதற்காக, நீண்ட நேரம் பேச விரும்பியும், பேச இயலாத நிலையில் இருக்கிறேன். அனைவரும் பாதுகாப்பாக கலைந்து செல்ல வேண்டும்” என்று பேசினார்.