

திருச்சி: தமிழகத்தில் காற்று சுழற்சியுடன் கூடிய வெப்பச் சலனம் காரணமாக சென்னை மற்றும் திருச்சி உள்ளிட்ட டெல்டா மாவட்டங்களில் காலையில் வெயிலும், மாலையில் இடியுடன் கூடிய மழையும் பெய்யும் என்று தன்னார்வ வானிலை ஆய்வாளர் செல்வக்குமார் தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து அவர் கூறியதாவது: வங்கக்கடலில் உருவாகி இருக்கும் தீவிர தாழ்வுப்பகுதி தொடர்ந்து தமிழகத்தின் அருகிலேயே நீடித்து கொண்டிருக்கிறது. இது மன்னார் வளைகுடா மற்றும் குமரிக்கடல் பகுதியில் நீடிக்கக்கூடிய காற்று சுழற்சியுடன் இணைந்து காணப்படுகிறது.
இருவேறு நிகழ்வுகளும் தமிழகத்தையொட்டி வங்கக்கடல் பகுதிக்கு நெருக்கமாக வந்து செயலிழந்து மேற்கு நோக்கி நகரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இதன் காரணமாக கடந்த 2 நாட்களாக கடலோர மாவட்டங்களில் தொடர் மழை நீடித்த நிலையில், சென்னை உள்ளிட்ட வட கடலோரமும் இம்மழை எட்டியுள்ளது.
இதனிடையே குமரிக்கடல் காற்று சுழற்சி காரணமாக கோவை உள்ளிட்ட மேற்கு தொடர்ச்சி மலை மாவட்டங்களில் மழை தொடர்கிறது. இன்று (மே 16) செயலிழந்த காற்று சுழற்சி மேற்கு நோக்கி நகரும்போது தமிழகத்தின் உள்மாவட்டங்களிலும் ஆங்காங்கே மழை பெய்யும்.
வானிலை ஆய்வாளர் செல்வக்குமார்
கடலோரமும் அவ்வப் போது மழை தொடரும். நாளை (மே் 17) முதல் கேரளா, மேற்கு தொடர்ச்சி மலை பகுதிகள், கன்னியாகுமரி முதல் நீலகிரி வரை மழை தீவிரமடையும்.
உள்மாவட்டங்கள் முதல் கடலோர மாவட்டங்கள் வரை மழை இருக்கும். மேற்கு மாவட்டங்களில் பரவலாக மழை இருக்கும். கடலோர பகுதிகளில் இரவு, நள்ளிரவு நேரங்களில் ஆங்காங்கே மழை இருக்கும்.
சென்னை மற்றும் திருச்சி உள்ளிட்ட காவிரி டெல்டா மாவட்டங்களில் ஆங்காங்கே பெய்யக்கூடிய மேகமூட்டத்துடன் கூடிய தூறல் மழை,17-ம் தேதிக்கு பிறகு காலையில் வெயில், மாலைக்கு பின்பு இடியுடன் மழையாக தொடரும்.
காற்று சுழற்சியும், வெப்ப சலனமும் இணைந்து மழை தரும் என்பதால் அக்னி நட்சத்திர வெயிலின் தாக்கம் பெரிதாக இருக்காது என்றார்.