

சென்னை: சட்டப்பேரவைத் தேர்தல் தோல்வி குறித்து கள ஆய்வு செய்ய சிறப்புக் குழு அமைத்து திமுக தலைவர் ஸ்டாலின் உத்தரவிட்டுள்ளார்.
இதுகுறித்து திமுக தலைமை அலுவலகம் நேற்று வெளியிட்ட அறிவிப்பில் கூறியிருப்பதாவது: திமுக தலைவர் ஸ்டாலின் தலைமையில் சென்னை அண்ணா அறிவாலயத்தில் மாவட்டச் செயலாளர்கள் கூட்டம் கடந்த மே 14-ம் தேதி நடைபெற்றது. இதில், தேர்தல் தோல்விக்கான உண்மையான காரணங்களைக் கண்டறிய, தலைமைக் கழகம் சார்பில் விரிவான கள ஆய்வு மேற்கொள்ளப்படும் என்று ஸ்டாலின் தெரிவித்தார். இதற்காக சிறப்புக் குழு அமைக்கப்படும் என்றும் அறிவித்தார். அதன்படி, சட்டப்பேரவை தேர்தல் முடிவுகள் குறித்து கள ஆய்வு செய்வதற்காக 36 பேர் கொண்ட குழு அமைக்கப்படுகிறது.
குழுவினர் பிரிக்கப்பட்டு பல்வேறு தொகுதிகளுக்கு பொறுப்பாளர்களாக நியமிக்கப்பட்டுள்ளனர். அதன்படி, திருவொற்றியூர், மாதவரம், ஆர்.கே.நகர், பெரம்பூர், ராயபுரம், கும்மிடிப்பூண்டி, பொன்னேரி உள்ளிட்ட தொகுதிகளில் எம்.எம்.அப்துல்லா, ரேகா பிரியதர்ஷினி ஆகியோர் ஆய்வு நடத்துகின்றனர். எழும்பூர், கொளத்தூர், வில்லிவாக்கம், சைதாப்பேட்டை, அண்ணா நகர், சேப்பாக்கம் - திருவல்லிக்கேணி உள்ளிட்ட தொகுதிகளுக்கு எஸ்.கே.பி. கருணா, கே.ஈ.பிரகாஷ் எம்.பி.ஆகியோர் நியமிக்கப்பட்டுள்ளனர்.
உத்திரமேரூர், காஞ்சிபுரம், ஆலந்தூர், செங்கல்பட்டு, தாம்பரம், பல்லாவரம், மயிலாப்பூர் உள்ளிட்ட தொகுதிகளில் ஹெலன் டேவிட்சன், கே.இளமகிழன் ஆகியோர் கள ஆய்வு மேற்கொள்கின்றனர். இதேபோல, தமிழகம் முழுவதும் ஆய்வு மேற்கொள்ளும் குழுவினரின் பெயர்கள் அறிவிக்கப்பட்டுள்ளன.
இந்த குழுவினர் தமிழகம் முழுவதும் உள்ள அனைத்து தொகுதிகளுக்கும் சென்று, தேர்தல் முடிவுகள், கள நிலவரம் குறித்து விரிவான ஆய்வை மேற்கொள்வார்கள். மாவட்டச் செயலாளர்கள், வேட்பாளர்கள், தொகுதிப் பார்வையாளர்கள், தொண்டர்களை இக்குழுவினர் தனித்தனியே சந்தித்துப் பேசுவார்கள். குறிப்பாக, மாநகர, ஒன்றிய, நகர, பகுதி, பேரூர் செயலாளர்களிடம் கருத்து கேட்கும்போது, மாவட்டச் செயலாளர்கள், வேட்பாளர்கள், தொகுதிப்பார்வையாளர்கள் உடன் இருக்கக் கூடாது.
இவ்வாறு தொகுதி வாரியாக நிர்வாகிகளிடம் பெறப்படும் பரிந்துரைகள், கருத்துகளின் அடிப்படையில் தொகுக்கப்படும் முழுமையான கள ஆய்வு அறிக்கையை திமுக தலைவர் ஸ்டாலினிடம் இக்குழுவினர் ஜூன் 5-ம் தேதிக்குள் சமர்ப்பிப்பார்கள். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.