

மதுரை: “முதல்வர் விஜய் ஆட்சியில் தமிழகத்தில் போதைக் கலாச்சாரம் வேரோடு பிடுங்கி எறியப்படும்,” என அமைச்சர் ராஜ்மோகன் நம்பிக்கை தெரிவித்தார்.
மதுரை தமுக்கம் மைதானத்தில் ஏற்பாடு செய்துள்ள அரசு பொருட்காட்சியை தொடங்கி வைக்க, பள்ளிக் கல்வித் துறை அமைச்சர் ராஜ்மோகன் மதுரை வந்தார். முன்னதாக அவர் மதுரை காந்தி மியூசியம் புதுப்பிக்கும் பணி, அருங்காட்சியகத்தை ஆய்வு செய்தார். அப்போது, செய்தியாளர்களிடம் அவர் கூறுகையில், “குற்றங்களின் தாய்மடியே போதைப்பொருட்கள். இதை வேரோடும் அகற்ற பல்வேறு நடவடிக்கை எடுக்கப்படுகிறது. இது தொடர்பாக கடந்த ஒரு வாரத்தில் 1,638 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். இதன் தொடர்ச்சியாக நீதிமன்ற பிடிவாரண்டில் இருப்பவர்கள் 2 ஆயிரம் பேர் உட்பட 4 குற்றவாளிகள் சிறையில் அடைக்கப்படுவர்.
முதல்வர் விஜய் ஆட்சியில் தமிழகத்தில் போதை கலாச்சாரம் வேரோடும், வேரடி மண்ணோடும் பிடுங்கி எறியப்படும். கல்வி அலுவலர்களிடம் சென்னையில் ஆய்வுக் கூட்டம் நடத்தினேன். இதில் மாணவர்களை ஆசிரியர்கள் எப்படி அணுகுவது போன்ற பல்வேறு அறிவுரைகள் வழங்கப்பட்டன. டிஆர்பி தேர்வு வாரியம் மூலம் விரைவில் ஆசிரியர் காலியிடம் நிரப்பப்படும்.
தமிழகத்தில் முக்கியமாக கல்வி நிறுவனங்களை கருத்தில் கொண்டே 717 டாஸ்மாக் கடைகள் மூடப்பட்டுள்ளன. மேலும், கல்வி நிறுவனங்கள் அருகில் டாஸ்மாக் கடைகள் இருப்பதாக புகார் வருகிறது. அதுவும் ஆய்வு செய்து அகற்றப்படும். மாணவர்களுக்கு தன்னம்பிக்கையை ஏற்படுத்த தன்முனைப்பு வகுப்புகள் அதிகரிக்கப்படும். உடற்கல்வி வகுப்பு எக்காரணத்திலும் எந்த பள்ளியிலும் நிறுத்தக் கூடாது என உத்தரவிட்டுள்ளோம்.
முதல்வர் விஜய் பிரதமரை சந்தித்தபோது, மேகேதாட்டு அணை போன்ற பிரச்சினைகளை பேசவில்லை என்பதெல்லாம் இல்லை. காலநிலை மாற்றத்தால் இரு மாநிலத்திலும் மழை பொழிவு குறைவு என்ற நிலையை பார்க்கவேண்டும். இப்பிரச்சினையை அறிவியல் பூர்வமாக பார்க்கவேணடும். அரசியலாக பார்க்கக்கூடாது. அமைச்சர் ஆதவ் அர்ஜூனா நிழல் முதல்வர் போன்று ஆதிக்கம் அதிகரிப்பதாக விமர்சனம் செய்வது அண்ணா அறிவாலய ஐடி விங்க் திரைக்கதை வசனம். எங்களது தலைமை தலைவர் விஜய் மட்டுமே.
ஆதவ் அர்ஜூனா ஒரு ஆற்றமிக்க அமைச்சர். பொதுப்பணித்துறையில் கான்டிராக்டரிடம் யாருக்கும் பணம் கொடுக்ககூடாது என, லஞ்சம் லாவண்யத்தை உடைத்தவர். எதையும் துணிச்சலாக சொல்பவர். தமிழகத்தில் அவரால் பல்வேறு மாற்றம் நடத்திருக்கின்றன. இதையெல்லாம் பொறுக்காமல் அவரை சிறுமைப்படுத்த முயற்சிகின்றனர். இதற்காக அவருக்கு நான் புகழாரம் பாடவில்லை. நான் 28 ஆண்டாக யாருக்கும் புகழாரம் பாடியதில்லை. எங்களது முதல்வர் மக்களை புகழாரம் செய்வார். தமிழக திரைத்துறையில் ஒரே குடும்பத்தினரின் ஆதிக்கத்தை முதல்வர் தடுத்துள்ளார்.
முன்னாள் முதல்வர் மு.க.ஸ்டாலின் தொகுதியான கொளத்தூரில் இருந்து சிங்கப்பெண் சிறப்பு படைக்கு ஒரு தகவல் வந்தது. அங்கு சென்று சிங்கப்பெண் படையினர் உடனே தீர்வு கண்டனர். இது போன்ற மாற்றத்தை தமிழக முதல்வர் கொண்டு வந்துள்ளார். காந்தி மியூசியம் மறு சீரமைப்பு பணி முடிந்த பிறகு விரைவில் திறக்கப்படும். அருங்காட்சியகம், தொல்லியல்துறையில் ஒற்றை சாரள கலந்தாய்வில் அதிகாரிகள் பணி மாற்றம் செய்யப்படுவர். கல்வி நிலையங்களில் மத சார்ந்த அடையாளம் கூடாது என, ஏற்கெனவே நான் கூறினேன்.
இதற்காக திமுகவின் ‘பி டீம் ’ என எங்களை பாஜ விமர்ச்சிக்கிறது. மாணவர்களுக்குள் சாதி மோதல் தடுக்கவே அக்கருத்தை பதிவிட்டேன். சனிக்கிழமை என்றால் அதிமுகவிரை பிடிக்க வலை வீசுகிறோம் என விமர்ச்சிகின்றனர். எங்களது நல்ல தலைமை, லீடர் ஷீப்பை பார்த்து அலைகடலென திரண்டு வருகின்றனர். அவர்களை அரணைக்கிறோம். இவ்வாறு அவர் கூறினார். ஆய்வின்போது, கார்த்திகேயன் எம்எல்ஏ, காந்தி மீயூசிய செயலர் நந்தராவ் உடனிருந்தனர்.
திடீர் கோபமான அமைச்சர்:
முதல்வர் செய்தியாளர்களை சந்திக்க மறுக்கிறார். அவருக்கு நீங்கள் பயிற்சி கொடுங்கள் என, அமைச்சரிடம் ஒரு செய்தியாளர் கேள்வி எழுப்பினார். இதற்கு திடீரென சற்று கோபமடைந்த அமைச்சர், “முதல்வருக்கு பயிற்சி கொடுங்கள் என, நீங்கள் எதிர்மறையோடு பேசாதீர்கள். எங்களை போன்றவர்கள் செய்தியாளர்களை சந்திக்கும் பொன்னான வாய்ப்பை எங்கள் முதல்வர் எங்களுக்கு கொடுத்துள்ளார். இதற்கு அவருக்கு நன்றி தெரிவிக்கிறோம்” என்றார்.