

சென்னை: குடிநீர் குழாய் வழித்தடம் மாற்றும் பணி காரணமாக வேளச்சேரி, புழுதிவாக்கம் உள்ளிட்ட பகுதிகளில் நாளை முதல் செப். 29-ம் தேதி வரை குடிநீர் விநியோகம் பாதிக்கப்படும் என குடிநீர் வாரியம் தெரிவித்துள்ளது.
இது தொடர்பாக சென்னை குடிநீர் வாரியம் வெளியிட்ட செய்திக்குறிப்பு: சென்னை மாநகராட்சி சார்பில், சோழிங்கநல்லூர் மண்டலம், 199-வது வார்டு, டிஎன்எச்பி-ஏ பிரதான சாலையில் அமைக்கப்பட்டு வரும் மழைநீர் வடிகால் பணிகளுக்காக அப்பகுதியில் ஏற்கெனவே உள்ள நாளொன்றுக்கு 150 மில்லியன் லிட்டர் திறன் கொண்ட கடல் நீரைக் குடிநீராக்கும் நிலையத்திலிருந்து குடிநீர் கொண்டு செல்லும் 1400 மில்லி மீட்டர் விட்டமுடைய பிரதான குடிநீர் குழாயின் வழித்தடத்தை மாற்றியமைக்கும் பணிகள் நாளை (செப்.20) முதல் 29-ம் தேதி வரை மேற்கொள்ள திட்டமிடப்பட்டுள்ளது.
ஆகையால், 150 மில்லியன் லிட்டர் திறன் கொண்ட கடல் நீரைக் குடிநீராக்கும் நிலையத்திலிருந்து குடிநீர் வழங்கப்படும் வேளச்சேரியில் உள்ள 172, 175, 176, 177 ஆகிய வார்டுகள் மற்றும் பெருங்குடி மண்டலத்தில் உள்ளகரம், புழுதிவாக்கம், மடிப்பாக்கம், பள்ளிக்கரணை, ஜல்லடியன்பேட்டை பகுதிகளில் உள்ள 185, 186, 187, 188, 189, 190 191 ஆகிய வார்டுகளில் குடிநீர் விநியோகம் நிறுத்தப்படும்.
மாற்று ஏற்பாடாக செம்பரம்பாக்கம் 530 குடிநீர் சுத்திகரிப்பு நிலையம் மூலம் குடிநீர் வழங்கப்படும். எனவே, பொதுமக்கள் முன்னெச்சரிக்கையாக, வேண்டிய அளவு குடிநீரை சேமித்து வைத்துக்கொள்ள வேண்டும். இவ்வாறு செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளது.