தவெக வசமானது ‘திராவிட கட்சிகளின் கோட்டை’ தாராபுரம்!

தவெக வசமானது ‘திராவிட கட்சிகளின் கோட்டை’ தாராபுரம்!
Updated on: 
1 min read

திருப்பூர்: ஐம்பது ஆண்டுகால அரசியல் வரலாற்றில் இருபெரும் திராவிட கட்சிகளின் கோட்டையாக விளங்கிய தாராபுரம் தொகுதி, 2026 இடைத்தேர்தல் மூலம் தவெக வசமாகியுள்ளது.

திருப்பூர் மாவட்டம் தாராபுரம் சட்டபேரவைத் தொகுதியில், கடந்த மே மாதம் நடைபெற்ற பொதுத் தேர்தலில் அதிமுக சார்பில் போட்டியிட்டு வென்ற சத்யபாமா, தனது எம்எல்ஏ பதவியை ராஜினாமா செய்துவிட்டு, தவெகவில் இணைந்தார். இதையடுத்து, கடந்த 6-ம் தேதி நடந்த இடைத்தேர்தலில் தவெக சார்பில் களமிறங்கினார்.

பல்வேறு சர்ச்சைகள், எதிர்ப்புகளுக்கு மத்தியில் நேற்று நடந்த வாக்கு எண்ணிக்கையில் சத்யபாமா வரலாற்றுச் சிறப்புமிக்க வெற்றியை பதிவு செய்துள்ளார். மிகுந்த எதிர்பார்ப்பை ஏற்படுத்தியிருந்த இத்தேர்தலில், 66,586 வாக்குகளைப் பெற்று அவர் வெற்றி பெற்றதாக அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது.

சத்யபாமாவை எதிர்த்துப் போட்டியிட்ட திமுக வேட்பாளர் சுகன்யா 56,757 வாக்குகளையும், அதிமுக வேட்பாளர் பானுமதி 44,874 வாக்குகளையும் பெற்று தோல்வியைத் தழுவினர். மேலும், இத்தேர்தலில் நாம் தமிழர் கட்சி வேட்பாளர் கார்த்திகா 5,249 வாக்குகளையும், இந்திய கம்யூனிஸ்ட் கட்சி வேட்பாளர் லட்சுமணன் 1,150 வாக்குகளையும் பெற்றனர்.

மொத்தம் 9,829 வாக்குகள் வித்தியாசத்தில் சத்யபாமா வெற்றி பெற்றுள்ளார். அவரது வெற்றி, கடந்த ஐம்பது ஆண்டுகால தாராபுரம் தொகுதியின் அரசியல் வரலாற்றில் எட்டப்படாத ஒரு புதிய மைல்கல்லாக அரசியல் நோக்கர்களால் பார்க்கப்படுகிறது.

பாரம்பரிய திராவிடக் கட்சிகளின் கோட்டையாக கருதப்படும் தாராபுரத்தில், புதிய அரசியல் சக்தியான தவெக பெற்றுள்ள வெற்றி, தமிழக அரசியலில் அதிர்வலையை ஏற்படுத்தியுள்ளது.

தாராபுரம் சட்டப்பேரவைத் தொகுதி நீண்ட காலமாகவே திமுக மற்றும் அதிமுக ஆகிய இருபெரும் திராவிடக் கட்சிகளின் முக்கிய செல்வாக்கு மண்டலமாக விளங்கி வந்துள்ளது. இதுவரை நடைபெற்ற தேர்தல்களில் அதிமுக மற்றும் அதன் கூட்டணி கட்சிகள் 7 முறையும், திமுக 5 முறையும் வெற்றி பெற்றுள்ளன.

கடந்த 2021 பொதுத் தேர்தலில் திமுக வேட்பாளர் கயல்விழி செல்வராஜ் வெற்றி பெற்றிருந்த நிலையில், இந்த ஆண்டின் (2026) தொடக்கத்தில் நடைபெற்ற பொதுத்தேர்தலில் அதிமுக இத்தொகுதியை கைப்பற்றியிருந்தது.

அதேநேரம், தற்போது நடைபெற்ற இடைத்தேர்தலில் அதிமுக மூன்றாம் இடத்துக்கு தள்ளப்பட்டுள்ளது. இடைத்தேர்தல் முடிவு பல அரசியல் மாற்றங்களுக்கு வழிவகுக்கும் என அரசியல் நோக்கர்கள் கருதுகின்றனர்.

தவெக வசமானது ‘திராவிட கட்சிகளின் கோட்டை’ தாராபுரம்!
“திமுகவின் வலிமையை உணர்த்தியது மதுராந்தகம்” - பரந்தாமன்

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in