

சென்னை: “திமுக என்றும் வலிமையானது என்பதை உணர்த்தியுள்ள மதுராந்தகம் தொகுதி வாக்காளர்களுக்கு மனமார்ந்த நன்றி” என திமுக சட்டத்துறை இணைச் செயலரும், மதுராந்தகம் தொகுதி திமுக வேட்பாளருமான வழக்கறிஞர் பரந்தாமன் தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், “குதிரை பேர தவெக அரசால் மக்கள் மீது திணிக்கப்பட்ட இடைத்தேர்தலில் மதுராந்தகம் தொகுதி திராவிட முன்னேற்றக் கழகத்தின் வேட்பாளராகப் போட்டியிட்ட எனக்கு 52 ஆயிரம் வாக்குகளை அளித்த மதுராந்தகம் வாக்களார்களுக்கு மனமார்ந்த நன்றியினைத் தெரிவித்துக் கொள்கிறேன்.
தேர்தல் களத்தில் வெற்றியும் தோல்வியும் இயல்பானவை. அதுவும் திணிக்கப்பட்ட இடைத்தேர்தல் களத்தில் ஆளும் கட்சியினரின் அனைத்து வகையான அத்துமீறல்களையும், அதிகார பலத்தையும் மீறி திமுக மீது நம்பிக்கை வைத்து உதயசூரியனுக்கு அளிக்கப்பட்டுள்ள வாக்குகள் திமுக என்றும் வலிமையானது என்பதை உணர்த்துகின்றன.
பொதுத்தேர்தலில் பெற்ற மூன்றாம் இடத்திலிருந்து, இடைத்தேர்தலில் இரண்டாம் இடத்துக்கு முன்னேறி வந்திருப்பதன் மூலம், தமிழக மக்களின் உள்ளங்களில் இருந்து திமுகவை யாராலும் பிரிக்கமுடியாது என்பது உறுதியாகியுள்ளது.
மதுராந்தகத்தில் திமுக வேட்பாளராகப் போட்டியிடும் வாய்ப்பினை எனக்கு வழங்கிய திமுக தலைவருக்கும், வழிநடத்திய சட்டப்பேரவை எதிர்க்கட்சித் தலைவருக்கும் எனது நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன்.
தேர்தல் களத்தில் பரப்புரையாற்றிய திமுக துணைப் பொதுச் செயலர் கனிமொழி எம்பி, திமுக உடன்பிறப்புகள், தோழமைக் கட்சியினர், பொதுவாக நான் வெற்றிப்பெற வாழ்த்திய பொதுமக்கள் உள்ளிட்ட அனைவருக்கும் இதயப்பூர்வமான நன்றி” என்று பரந்தாமன் தெரிவித்துள்ளார்.
இதனிடையே, மதுராந்தகம் மற்றும் தாராபுரம் தொகுதிகளில் திமுக சார்பாக போட்டியிட்ட வேட்பாளர்களான பரந்தாமன் மற்றும் சுகன்யா ஆகியோர் சென்னையில் திமுக தலைமை அலுவலகத்தில் அக்கட்சியின் தலைவர் மு.க.ஸ்டாலினை சந்தித்தனர்.
பிறகு செய்தியாளர்களிடம் பரந்தாமன் கூறும்போது, “வெற்றி பெற்றுவிட்டோம் என்ற மமதையில் தலைமைச்செயலக அறைக்குள் அமைச்சர்கள் செய்கின்ற செயல்கள் அநாகரீகத்தின் உச்சமாகும். வாக்குக்கு ரூ.5 ஆயிரம் கொடுக்கப்பட்டதாக கிராமங்களைக் குறிப்பிட்டு மார்க்சிஸ்ட் மூத்த தலைவர் கனகராஜ் பகிரங்கமாகச் சவால் விட்டதை வைகோ பார்க்க வேண்டும். ஆட்சி அதிகாரப் பலத்தை வைத்துதான் அவர்கள் வெற்றி பெற்றுள்ளனர்.
இந்தத் தேர்தலே குதிரைப்பேரத்தால் மக்கள் மீது திணிக்கப்பட்ட தேர்தல் என்று அனைத்துக் கட்சிகளுமே கூறி வருகின்றன. இன்னும் 15 எம்எல்ஏக்களை ராஜினாமா செய்யப் போவதாக ஆதவ் அர்ஜுனா கூறுவது அவர்களின் நோக்கத்தைக் காட்டுகிறது. பேரவைத் தலைவரை வைத்துக்கொண்டு ஒவ்வொருவராக ராஜினாமா செய்ய வைத்து இடைத்தேர்தலுக்கு வழிவகுக்கும் நோக்கத்துடன் இருக்கிறார்கள்.
எஸ்ஐஆர் மூலமாகத்தான் தவெக ஆட்சிக்கு வந்தது என்று விடுதலைச் சிறுத்தைகள் கட்சித் தலைவர் திருமாவளவன் கூறியுள்ளார். அப்படியானால் அவரை வெளியேற்றுவதற்கான முயற்சியில் அவர்கள் இறங்கிவிட்டார்களா?
அதிமுகவைச் சிதைப்பதும், திமுகவை அதிகாரத்திலிருந்து அகற்றுவதும்தான் பாஜகவின் வியூகம். தமிழகத்தில் திராவிட இயக்கத்தின் சித்தாந்தத்தைச் சிதைப்பதற்காகவே பாஜகவால்கொண்டுவரப்பட்டவர்தான் விஜய். அவர் தனிப்பெரும் அரசியல் ஆளுமையால் வரவில்லை, இதற்குப் பின்னால் பாஜகவின் மூளையே செயல்படுகிறது” என்று அவர் தெரிவித்தார்.
தமிழகத்தில் கடந்த ஏப்ரல் மாதம் நடந்த சட்டப்பேரவை தேர்தலில் வெற்றி பெற்ற அதிமுக எம்எல்ஏகள் 6 பேர் தங்களின் எம்எல்ஏ பதவியை ராஜினாமா செய்துவிட்டு தவெகவில் இணைந்தனர். இதனால் அந்தத் தொகுதிகள் காலியானதாக அறிவிக்கப்பட்டன.
இதில் முதல்வர் விஜய் வென்று ராஜினாமா செய்த திருச்சி கிழக்கு உட்பட 5 தொகுதிகளுக்கு தேர்தல் வழக்கு நிலுவையில் இருப்பதால், மதுராந்தகம் மற்றும் தாராபுரம் ஆகிய 2 தொகுதிகளுக்கு அக்டோபர் 6-ம் தேதி இடைத்தேர்தல் நடைபெற்றது. வாக்குகள் வெள்ளிக்கிழமை (அக்.9) எண்ணப்பட்டன.
இதில், மதுராந்தகத்தில் தவெக வேட்பாளர் மரகதம் குமரவேல் 137 தபால் வாக்குகள் உட்பட 74,048 வாக்குகள் (39.96 சதவீதம்) பெற்று வெற்றி பெற்றார். திமுக வேட்பாளர் பரந்தாமன் 358 தபால் வாக்குகள் உட்பட 54,008 வாக்குகள் (29.15 சதவீதம்) பெற்று 2-வது இடம் பிடித்தார்.