

விசிக தலைவர் திருமாவளவன்
திருச்சி: “திராவிடத்தால்தான் தமிழ் உயிர்ப்புடன் நிற்கிறது. திராவிடம் என்பது தமிழ்த் தேசியத்துக்கும், தமிழ் மொழிக்கும், தமிழ் மண்ணுக்கும் எதிரானது அல்ல” என்று விசிக தலைவர் திருமாவளவன் கூறினார்.
மதிமுக பொதுச் செயலாளர் வைகோவின் சமத்துவ நடைபயணம் தொடக்க விழா இன்று திருச்சியில் நடைபெற்றது. இதில் விசிக தலைவர் திருமாவளவன் பேசியது: “2026 சட்டப்பேரவைத் தேர்தல் வழக்கமானது அல்ல. தமிழகத்தை ஆக்கிரமிக்க துடிக்கும் சக்திகள் ஒருபுறமும், அப்படி விடமாட்டோம் என முதல்வர் மு.க.ஸ்டாலின் தலைமையில் ஜனநாயக சக்திகள் மற்றொரு புறமும் அணி திரண்டுள்ளோம்.
சமத்துவக் கூட்டணிக்கு எதிராக வெளிப்படையாக நிற்கும் சக்திகளையும், அவர்களுக்கு துணையாக பல்வேறு முகமூடிகளை அணிந்து வருவோரையும் எதிர்க்க வேண்டிய பொறுப்பு நமக்கு உள்ளது. அவர்களை வீழ்த்தும் வலிமை, முதல்வர் மு.க.ஸ்டாலின் தலைமையில் உள்ளது. அதை உணர்ந்துதான் அனைவரும் கைகோர்த்து உறுதியுடன் நிற்கிறோம்.
திராவிடத்தால்தான் தமிழ் உயிர்ப்புடன் நிற்கிறது. திராவிடம் என்பது தமிழ்த் தேசியத்துக்கும், தமிழ் மொழிக்கும், தமிழ் மண்ணுக்கும் எதிரானது அல்ல. பெரியார், அண்ணா, கருணாநிதி ஆகியோர் போராடாமல் இருந்திருந்தால், இந்தியை திராவிடம் தடுக்காமல் இருந்திருந்தால், இன்றைக்கு நாம் இந்தி பேசுபவர்களாக மாறியிருப்போம். தமிழ்த் தேசியம் என்கிற சொல்லே பிறந்திருக்காது.
தமிழகத்தில் இன்று தமிழ் வாழவும், தமிழுணர்வு மேலோங்கி நிற்பதற்கும் அடித்தளம் அமைத்தவர் பெரியார். அதைப் பரப்பியவர் அண்ணா. அதை கட்டிக் காத்தவர் கருணாநிதி. அதை முன்னெடுத்து செல்பவர் முதல்வர் மு.க.ஸ்டாலின். திராவிடம் என்பது சமூக நீதி, சகோதரத்துவம், சமத்துவம். நாங்கள் எடுக்கும் முயற்சிகள் தமிழ் மொழி, சகோதர நீதி, சமத்துவத்தை காக்கும்” என்றார் திருமாவளவன்.