

சென்னை: தொகுதி மறுவரையறை மசோதாவுக்கு எதிர்ப்பு தெரிவித்து தமிழகம் முழுவதும் இன்று கருப்புக் கொடி போராட்டம் நடத்தப்பட உள்ளதாக முதல்வர் மு.க.ஸ்டாலின் அறிவித்துள்ளார்.
தொகுதி மறுவரையறைக்கு திமுக தலைவரும் தமிழக முதல்வருமான மு.க.ஸ்டாலின் எதிர்ப்பு தெரிவித்து வருகிறார். இதுகுறித்து ஆலோசிக்க ஸ்டாலின் தலைமையில் திமுக எம்.பி.க்களின் அவசர ஆலோசனை கூட்டம் காணொலிக் காட்சி வாயிலாக நேற்று நடைபெற்றது.
இந்த கூட்டத்தில் மக்களவையில் தொகுதி மறுவரையறை மசோதாவுக்கு எதிர்ப்பை எவ்வாறு பதிவு செய்வது, இந்த விவகாரத்தில் தென் மாநிலங்களில் உள்ள கட்சிகளிடம் ஆதரவு பெறுதல் உட்பட பல்வேறு அம்சங்கள் தொடர்பாக விவாதிக்கப்பட்டது. தொடர்ந்து திமுக மாவட்டச் செயலாளர்களுடனும் ஸ்டாலின் காணொலிக் காட்சி மூலமாக ஆலோசனை நடத்தினார்.
இதுதொடர்பாக முதல்வர் மு.க.ஸ்டாலின் எக்ஸ் தளத்தில் வெளியிட்ட பதிவில், ‘‘தொகுதி மறுவரையறை சட்டத் திருத்தம் தமிழகத்துக்கும், தென் மாநிலங்களுக்கும் இழைக்கப்படும் மாபெரும் வரலாற்று அநீதி. பாஜக நெருப்போடு விளையாடுகிறது. இதற்கு எதிராக தமிழகம் முழுவதும் வீடுகளிலும், பொது இடங்களிலும் கருப்புக் கொடி ஏற்றும் போராட்டம் இன்று ஏப்.16-ம் தேதி நடத்தப்படும். தமிழகத்தின் குரலை மதித்து மத்திய அரசு பின்வாங்கவில்லை எனில், அதற்கான விளைவுகளை சந்திக்க வேண்டியிருக்கும்’’ என்று கூறியுள்ளார்.
இதேபோல், மற்றொரு எக்ஸ் தளப் பதிவில் ஸ்டாலின் கூறியுள்ளதாவது: சட்டத் திருத்தம் கொண்டு வந்து நாடாளுமன்றத்தில் தமிழகத்தின் குரலை ஒடுக்கப் பார்க்கின்றனர். புதிய சட்டத்தால் வட மாநிலங்களுக்கும் தென் மாநிலங்களுக்குமான உறுப்பினர்கள் எண்ணிக்கை வேறுபடும்.
மக்கள் தொகையைக் கட்டுப்படுத்தியதற்காகத் தென் மாநிலங்களுக்கு தண்டனையா இது? தேச நலனுக்காக நாங்கள் துணை நின்றால், எங்களின் அரசியல் உரிமையையே பறிப்பீர்களா? பிரதமர் மோடி, தமிழர்களையும், தென் மாநில மக்களையும் இரண்டாம் தர குடிமக்களாக்கவே பார்க்கிறார். மக்கள் தொகை அடிப்படையில் தொகுதிகளை முடிவு செய்யக் கூடாது. எட்டு கோடி தமிழர்களின் ஒற்றைக் கோரிக்கை இது. அரசியல் எல்லைகளைக் கடந்து, தமிழகத்தின் உரிமையை காக்க தமிழகமே ஓங்கி ஒலிக்கட்டும். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
திமுக போராட்டத்துக்கு தமிழகக் காங்கிரஸ் தலைவர் கு.செல்வப்பெருந்தகை, மதிமுக பொதுச் செயலாளர் வைகோ, மார்க்சிஸ்ட் மாநிலச் செயலாளர் பெ.சண்முகம், இந்திய கம்யூனிஸ்ட் மாநிலச் செயலாளர் மு.வீரபாண்டியன் உள்ளிட்ட தலைவர்கள் ஆதரவு தெரிவித்துள்ளனர்.