

புதுடெல்லி: தொகுதி மறுவரையறை மசோதாவை நிறைவேற்ற நாடாளுமன்ற சிறப்புக் கூட்டம் இன்று கூடுகிறது. மகளிர் இடஒதுக்கீடுக்கு ஆதரவு தெரிவிக்கும் இண்டியா கூட்டணிக் கட்சிகள், தொகுதி மறுவரையறைக்கு கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளன.
நாடாளுமன்ற மக்களவையில் தற்போது 543 எம்.பி.க்கள் உள்ளனர். நாடாளுமன்றம், சட்டப்பேரவைகளில் மகளிருக்கு 33 சதவீத இடஒதுக்கீட்டை அமல்படுத்த மத்திய அரசு திட்டமிட்டுள்ளது. அதற்காக மக்களவைத் தொகுதிகளின் எண்ணிக்கையை 816-ஆக உயர்த்துவது, தொகுதி மறுவரையறை மசோதாவை நிறைவேற்ற நாடாளுமன்றத்தின் சிறப்புக் கூட்டம் இன்று (ஏப்ரல் 16) தொடங்கி ஏப்.18-ம் தேதி வரை நடைபெறுகிறது. இதற்கு இண்டியா கூட்டணிக் கட்சிகள் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றன. சட்டப்பேரவைத் தேர்தல் நடைபெறும் இந்த வேளையில் நாடாளுமன்ற சிறப்புக் கூட்டத்தொடர் நடத்த கூடாது. இதை தள்ளிவைக்க வேண்டும் என்று காங்கிரஸ் உள்ளிட்ட கட்சியினர் கூறிவந்தனர். எனினும், திட்டமிட்டபடி இன்று நாடாளுமன்ற சிறப்புக் கூட்டத்தில் விவாதம் நடைபெறுகிறது.
இதுதொடர்பாக மத்திய அரசு வட்டாரங்கள் கூறியதாவது: நாடாளுமன்றத்தின் சிறப்புக் கூட்டத் தொடரில் மக்களவைத் தொகுதிகளின் எண்ணிக்கையை 543-ல் இருந்து 816 ஆக அதிகரிக்க வகை செய்யும் மசோதாவை நிறைவேற்ற திட்டமிடப்பட்டு உள்ளது. இதன்மூலம் மகளிர் இடஒதுக்கீட்டு சட்டத்தை முன்கூட்டியே அமல்படுத்த முடியும். மேலும், தொகுதி மறுவரையறை மசோதாவும் நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்யப்பட உள்ளது.
கடந்த 2023-ம் ஆண்டில் மகளிர் இடஒதுக்கீடு சட்டம் நிறைவேற்றப்பட்டது. இதன்படி மக்களவையில் மூன்றில் ஒரு பகுதி இடங்கள் மகளிருக்கு ஒதுக்கப்பட வேண்டும். புதிய மசோதாக்களின்படி மக்களவைத் தொகுதிகளின் இடங்கள் 816 ஆக அதிகரிக்கும். இதில் 273 இடங்கள் மகளிருக்கு ஒதுக்கப்படும்.
மக்களவை இடங்களை அதிகரிக்கவும், மகளிர் இடஒதுக்கீட்டை அமல்படுத்தவும் அரசியலமைப்பு (131-வது திருத்தம்) 2026, தொகுதி மறுவரையறை மசோதா, யூனியன் பிரதேச சட்டங்கள் (திருத்தம்) 2026 ஆகிய 3 மசோதாக்களை மத்திய அரசு அறிமுகம் செய்யவுள்ளது. இவ்வாறு மத்திய அரசு வட்டாரங்கள் தெரிவித்தன.
ஆனால், நாடாளுமன்ற சிறப்புக் கூட்டத் தொடரை கூட்டுவதற்கும் தொகுதி மறுவரையறை மசோதாவுக்கும் இண்டியா கூட்டணியில் உள்ள எதிர்க்கட்சிகள் கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளன.
இதுதொடர்பாக டெல்லியில் நேற்று இண்டியா கூட்டணிக் கட்சிகளின் தலைவர்கள் ஆலோசனையில் ஈடுபட்டனர்.
கூட்டத்துக்குப் பின்னர் காங்கிரஸ் கட்சியின் தேசியத் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே செய்தியாளர்களிடம் கூறியதாவது: நாங்கள் அனைவரும் மகளிர் இடஒதுக்கீடு மசோதாவுக்கு ஆதரவாக இருக்கிறோம். ஆனால், அவர்கள் அந்த மசோதாவைக் கொண்டு வரும் விதத்தில் எங்களுக்கு பலவித சந்தேகங்கள் உள்ளன. இது அரசியல் உள்நோக்கம் கொண்டதாக உள்ளது.
மகளிர் இடஒதுக்கீடு, தேசிய அளவிலான தொகுதி மறுவரையறை மற்றும் மக்களவை இடங்களின் எண்ணிக்கை அதிகரிப்பு என மூன்று தனித்தனி விவகாரங்கள் இருக்கின்றன. மக்களின் மனதில் குழப்பத்தை ஏற்படுத்தும் நோக்கில் அரசு இவற்றை வேண்டுமென்றே ஒன்றோடொன்று கலக்கிறது.
மகளிர் இடஒதுக்கீடு மசோதாவை ஆதரித்து வந்தாலும், அதில் திருத்தங்கள் செயல்படுத்தப்பட வேண்டும் என்று வலியுறுத்தி வருகிறோம். அவர்கள் தொகுதி மறுவரையறை விஷயத்தில் சில தந்திரங்களைச் செய்கின்றனர்.
அனைத்துக் கட்சிகளும் ஒன்றுபட்டு நாடாளுமன்றத்தில் போராட வேண்டும். நாங்கள் இந்த தொகுதி மறுவரையறை மசோதாவை எதிர்ப்போம். ஆனால் மகளிர் இடஒதுக்கீட்டுக்கு நாங்கள் எதிரானவர்கள் அல்ல. மகளிர் இடஒதுக்கீடு மசோதாவில் திருத்தங்கள் கொண்டு வந்து அதை நாடாளுமன்றத்தில் விவாதிக்க வேண்டும். அதேநேரத்தில் தொகுதி மறுவரையறை மசோதாவை இண்டியா கூட்டணி எதிர்க்கும். இவ்வாறு கார்கே கூறினார்.
இந்த ஆலோசனைக் கூட்டத்தில் திரிணமூல் காங்கிரஸ், சமாஜ்வாதி, திமுக, ஆம் ஆத்மி உள்ளிட்ட கட்சிகள் பங்கேற்றன.
மகளிர் இடஒதுக்கீடு மசோதாவுக்கு தெலங்கானா முன்னாள் முதல்வர் கே.சந்திரசேகர ராவ் தலைமையிலான பாரதிய ராஷ்டிர சமிதி (பிஆர்எஸ்) ஆதரவு தெரிவித்துள்ளது.
இதுதொடர்பாக பிஆர்எஸ் கட்சியின் செயல் தலைவர் கே.டி.ராமா ராவ் ஹைதராபாத்தில் நேற்று கூறியதாவது: மகளிர் இடஒதுக்கீடு திருத்த மசோதாவைக் கொண்டு வருவது மகிழ்ச்சி அளிக்கிறது. இந்த மசோதாவுக்கு பிஆர்எஸ் கட்சி ஆதரவை அளிக்கும். ஆனால், அதை தொகுதி வரையறை மசோதாவுடன் இணைப்பதை நாங்கள் எதிர்க்கிறோம்.
மக்களவையில் 543 இடங்கள் உள்ளன. உடனடியாக மகளிர் இடஒதுக்கீட்டை அங்கு அமல்படுத்துங்கள். அதுபோலவே, தெலங்கானா சட்டப்பேரவையில் 119 இடங்கள் உள்ளன. இங்கும் அதை அமல்படுத்துங்கள். இடங்களை அதிகரிப்பதையும், தொகுதி மறுவரையறையையும் இணைத்து ஏன் குழப்பத்தை ஏற்படுத்துகிறீர்கள். இவ்வாறு கே.டி.ராமா ராவ் தெரிவித்தார்.