

ஜூன் 8-ம் தேதி டெல்லியில் கூடும் இண்டியா கூட்டணி கூட்டத்தை புறக்கணிப்பதாக அதிரடியாக அறிவித்திருக்கிறது திமுக. காங்கிரஸின் துரோகத்தால் மனக்காயமுற்றிருக்கும் தொண்டர்களின் உணர்வுக்கு மதிப்பளிக்கும் விதமாக இந்த முடிவை எடுத்திருப்பதாக அறிவித்திருக்கும் திமுக, காங்கிரஸ் பங்கேற்கும் எந்தக் கூட்டத்திலும் இனி பங்கேற்கமாட்டோம் என்றும் அறிவித்திருக்கிறது.
திமுக-வின் இந்த முடிவு ஏற்கெனவே எதிர்பார்த்த ஒன்றுதான். அதேசமயம் இந்த விஷயத்தில் ஒரே கல்லில் இரண்டு மாங்காய்களை சத்தமில்லாமல் அடித்துச் சாய்த்துவிட்ட திருப்தியில் இருக்கிறது பாஜக. இத்தனை நாளும் இண்டியா கூட்டணியின் பிரதான அங்கமாக இருந்தது திமுக. ஸ்டாலின் தான் ‘ராகுல் பிரதமர்’ என்ற கோஷத்தை முதலில் முன்னெடுத்தவர். ‘ஸ்வீட் எடு... கொண்டாடு’ என்று சொல்லுமளவுக்கு ராகுலும் ஸ்டாலினும் அண்ணன் - தம்பி உறவுமுறை கொண்டாடினார்கள். அதேபோல், காங்கிரஸை விட ஆக்ரோஷமாக மோடியையும் பாஜக-வையும் எதிர்த்தவரும் ஸ்டாலின் தான்.
இதையெல்லாம் பாஜக ரசிக்கவில்லை. குறிப்பாக, வடமாநிலங்களில் தங்களால் வழித்துப் போடப்பட்ட காங்கிரஸை தமிழகத்தில் திமுக தோளில் தூக்கிச் சுமப்பதை பாஜக தலைமை சுத்தமாக விரும்பவில்லை. பல நேரங்களில் ‘காங்கிரஸை உடன் வைத்திருக்காதீர்கள்’ என்ற சமிக்ஞையை பாஜக தலைவர்கள் திமுக-வுக்கு மறைமுகமாக உணர்த்தினார்கள். அதைக் கேட்காததால் திமுக சந்தித்த சங்கடங்களும் ஏராளம் உண்டு.
திமுக-வை பொறுத்தவரை, மத்தியில் பாஜக-வை எதிர்கொள்ளும் தேசிய சக்தி என்ற முறையில் காங்கிரஸை பெரிதும் நம்பியது. ஆனால், இந்தத் தேர்தல் அந்த நம்பிக்கையை எல்லாம் தூள் தூளாக்கிவிட்டது. ஆரம்பத்திலிருந்தே தவெக-வைக் காட்டி திமுக-வை நெருக்கிய காங்கிரஸ், விரலில் வைத்த மை காயும் முன்பாகவே தவெக-வுக்கு ஆதரவளித்து அமைச்சரவையிலும் துண்டு போட்டது. அத்துடன், “இனி வரும் தேர்தல்களிலும் தவெக-வுடன் தான் கூட்டணி” என்றும் தாமாக முன்வந்து அறிவித்தது. இதெல்லாம் விசில் அலையிலும் காங்கிரஸுக்கு 5 எம்எல்ஏக்களை வென்று கொடுத்த திமுக-வுக்கு கடும் மன உளைச்சலை ஏற்படுத்தியது.
இந்த நிலையில், காங்கிரஸ் பங்கேற்கும் இண்டியா கூட்டணி கூட்டத்தை புறக்கணிப்பதாக அறிவித்திருக்கும் திமுக, “நாட்டு நலன் கருதி இண்டியா கூட்டணியில் இருக்கும் மற்ற கட்சிகள் முன்வைக்கும் பிரச்சினைகளுக்கு ஆதரவாக குரல்கொடுப்போம்” என்று சொல்லி இருக்கிறது. இண்டியா கூட்டணியில் ஆகப்பெரும் கட்சியாக காங்கிரஸ் இருந்தாலும் கூட்டணியில் இருக்கும் மற்ற கட்சிகளுக்கு காங்கிரஸ் மீது ஏதோ ஒரு மன வருத்தம் இருக்கவே செய்கிறது. அத்தகையை வருத்தம் ஏதும் இல்லாமல் இருந்த ஒரே கட்சி திமுக மட்டும் தான். இப்போது அதையும் பகைத்துக் கொண்டு விட்டது காங்கிரஸ். திமுக-வுக்குப் பதிலாக தவெக இண்டியா கூட்டணியில் சேரலாம் என செய்திகள் வருகின்றன.
தங்களுக்கு தமிழகத்தில் சிம்ம சொப்பனமாக இருந்த திமுக இந்தத் தேர்தலில் வீழ்த்தப்பட்டது பாஜக-வுக்கு கிடைத்த முதல் வெற்றி. இத்தனை நாளும் மத்திய பாஜக அரசை போட்டுத் தாக்கிக் கொண்டிருந்த திமுக-வுக்கு இப்போது, விஜய் அரசை விமர்சிக்கவே நேரம் போதவில்லை. அதனால், சிபிஎஸ்இ கேள்வித்தாள் விவகாரம் உள்ளிட்ட மத்திய அரசை சங்கடப்படுத்தும் பல விஷயங்களை திமுக கண்டுகொள்ளவே இல்லை. இந்த நிலையில், இண்டியா கூட்டணி கூட்டத்தை திமுக புறக்கணித்திருப்பதில் பாஜக-வுக்கு இரட்டிப்பு மகிழ்ச்சி. இதன் மூலம், தொடக்கம் முதலே தங்களுக்கு தொல்லை கொடுத்து வரும் இண்டியா கூட்டணியையும் கலகலக்க வைத்துவிட்ட சந்தோஷத்தில் திளைக்கிறது அந்தக் கட்சி.
இண்டியா கூட்டணி கூட்டத்தை புறக்கணிப்பதாக திமுக மட்டும் வெளிப்படையாக அறிவித்திருக்கிறது. காங்கிரஸ் மீதிருக்கும் வருத்தங்களால் இன்னும் சில கட்சிகளும் கூட்டத்தைப் புறக்கணித்தால் இண்டியா கூட்டணிக்கு மாற்றாக இன்னொரு கூட்டணி பிறக்கலாம். ஒருவேளை, இந்த விஷயத்தில் தேசிய அளவில் காங்கிரஸ் தனிமைப்படுத்தப்பட்டாலும் ஆச்சரியமில்லை.
அப்படி தாங்கள் தனிமைப்படுத்தப்பட்டால் விஜய்க்கு இருக்கும் பாப்புலாரிட்டியை வைத்து தமிழ்நாடு, கர்நாடகா, ஆந்திரா, தெலங்கானா, புதுச்சேரி மாநிலங்களில் தங்களை நிலைநிறுத்திக் கொள்ள நினைக்கலாம் காங்கிரஸ். அப்படியான சூழலில் விஜய் - காங்கிரஸ் கூட்டணியை சமாளிக்க திமுக - பாஜக கூட்டணி மலரவும் வாய்ப்புகள் அதிகம். ஆக, இண்டியா கூட்டணியில் இருந்து இந்த இரண்டு கட்சிகளில் எது தனிமைப்படுத்தப்பட்டாலும் பாஜக-வுக்கு பம்பர் குலுக்கல் தான்.