

ஆர்.எஸ்.பாரதி
சென்னை: திமுகவின் பரிந்துரைகள் சேர்க்கப்பட்டிருந்தால், நாடாளுமன்றத்தில் தொகுதி மறுவரையறை மசோதாவை எதிர்க்க மாட்டோம் என்று அக்கட்சியின் அமைப்புச் செயலாளர் ஆர்.எஸ்.பாரதி தெரிவித்தார்.
நாடாளுமன்றத்தில் கடந்த ஏப்ரல் மாதம் நடைபெற்ற நீட்டிக்கப்பட்ட பட்ஜெட் கூட்டத்தொடரின்போது அறிமுகம் செய்யப்பட்ட தொகுதி மறுவரையறை மசோதா, இண்டியா கூட்டணியால் தோற்கடிக்கப்பட்டது. இந்த நிலையில் நாடாளுமன்ற மழைக்காலக் கூட்டத்தொடர் ஜூலை 20-ம் தேதி தொடங்கி ஆக.13-ம் தேதி வரை நடைபெற உள்ளது. இந்த கூட்டத்தொடரில் திருத்தப்பட்ட தொகுதி மறுவரையறை மசோதாவை மீண்டும் கொண்டுவர மத்திய அரசு முயற்சிப்பதாக கூறப்படுகிறது. இண்டியா கூட்டணியில் இருந்து காங்கிரஸ் வெளியேறிவிட்டதால், தற்போது 22 எம்.பி.க்கள் கொண்ட திமுக முடிவை நோக்கி பரவலாக எதிர்பார்ப்புகள் எழுந்துள்ளன.
இதுதொடர்பாக திமுக அமைப்புச் செயலாளர் ஆர்.எஸ்.பாரதி ஆங்கில செய்தி சேனலுக்கு அளித்த நேர்காணலில் கூறும்போது, “நாங்கள் ஏற்கெனவே ஒருமுறை தொகுதி மறுசீரமைப்பு மசோதாவை முறியடித்துள்ளோம். மீண்டும் மசோதா தாக்கல் செய்யப்படும்போது அதன் உள்ளடக்கத்தை நாங்கள் பரிசீலிப்போம்.
அது தமிழகம் உள்பட தென் மாநிலங்களின் நலன்களுக்கு எதிராக இருந்தால், திமுக அதை எதிர்க்கும். மாறாக, மத்திய அரசு திமுகவின் பரிந்துரைகளை அதில் இணைத்திருந்தால், அதை எதிர்க்க வேண்டிய அவசியமில்லை. அதேநேரம், மாநில உரிமைகளுக்கான போராட்டத்தில் திமுக உறுதியாக இருக்கிறது” என்றார்.
இதுகுறித்து டெல்லியில் செய்தியாளர்களிடம் திமுக செய்தித் தொடர்புக் குழு தலைவர் டி.கே.எஸ்.இளங்கோவன் கூறியது: தொகுதி மறுவரையறை மசோதாவை ஏப்ரல் மாதத்தில் தோற்கடித்தோம். கடந்த 2 தசாப்தங்களாக மக்கள்தொகையை வெற்றிகரமாக கட்டுப்படுத்திய தென்னிந்திய மாநிலங்களுக்கு அது மிகப்பெரிய பாதிப்பை ஏற்படுத்தும். எனினும், புதிய மசோதாவில் வேறு ஏதேனும் மாற்றம் இருந்தால் நாங்கள் அதை பரிசீலிப்போம்.
இண்டியா கூட்டணி குறித்த எங்கள் நிலைப்பாடு இன்னும் இறுதி செய்யப்படவில்லை. இந்த கூட்டணியின் முதல் நோக்கம் பாஜகவை எதிர்ப்பது தான். திமுகவின் நோக்கமும் பாஜகவை எதிர்ப்பதுதான். பொதுவான பிரச்சினைகளில் பாஜகவை எதிர்த்து இண்டியாகூட்டணியுடன் நாங்கள் நிற்போம். இவ்வாறு கூறினார்.
இதற்கிடையே, தற்போது லண்டனில் இருக்கும் ஸ்டாலின் திமுக எம்.பி.க்களுடன் காணொலி மூலம் நேற்று முன்தினம் ஆலோசனை நடத்தினார். அப்போது, மாநில உரிமைகளுக்காக திமுக தொடர்ந்து துணை நிற்கும். மத்தியில் உள்ள பாஜக அரசு கொண்டு வரும் எந்தவொரு புதிய சட்டமும் மாநில உரிமைகளை பறிக்கும் வகையிலோ அல்லது அரசியலமைப்புக்கு முரணாகவோ அமைந்தால் அதை திமுக எதிர்க்கும். கூட்டாட்சி தத்துவம் மற்றும் அரசியலமைப்பு கோட்பாடுகளை பாதுகாப்பதில் தனது நிலைப்பாட்டை திமுக தொடர்ந்து பின்பற்றும். மேலும், நாடாளுமன்றத்தில் தமிழகத்தின் பிரச்சினைகளையும் மிக வலுவாக எழுப்புவோம்” என்று ஸ்டாலின் கூறியிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
மத்திய இணை அமைச்சர் அத்வாலே நம்பிக்கை
சென்னை தலைமைச் செயலகத்தில் முதல்வர் விஜய்யை மத்திய சமூக நீதி மற்றும் அதிகாரமளித்தல் துறை இணை அமைச்சர் ராம்தாஸ் அத்வாலே நேற்று சந்தித்துப் பேசினார். அதைத் தொடர்ந்து சேப்பாக்கம் விருந்தினர் மாளிகையில் சமூக நீதி, பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை அதிகாரிகளுடன் ஆலோசனை மேற்கொண்டார். பின்னர் செய்தியாளர்களிடம் அத்வாலே கூறும்போது, ‘‘நாடாளுமன்ற மழைக்கால கூட்டத்தொடரில் பெண்கள் இட ஒதுக்கீடு மசோதா, தொகுதி மறு வரை மசோதா கொண்டுவரப்படும். தற்போது திமுக காங்கிரஸ் இடையே மோதல் நிலவுகிறது, ஆகையால் காங்கிரசின் முடிவுகளுக்கு திமுக ஒத்துழைப்பு தராது என நம்புகிறேன். மசோதாவுக்கு திமுக ஆதரவு தரலாம், இல்லை மசோதாவை புறக்கணிக்கலாம்’’ என்றார்.