

திருச்சி: தேர்தல் விதிமுறைகள் அமலில் உள்ள போது, கட்சி நிர்வாகிகள் 7 பேருக்கு சொகுசு கார்கள் பரிசளித்த விவகாரம் தொடர்பாக தேர்தல் அலுவலர் அனுப்பிய விளக்க நோட்டீஸுக்கு மண்ணச்சநல்லூர் தொகுதி திமுக எம்எல்ஏ பதில் அளித்துள்ளார்.
திருச்சி மாவட்டம் மண்ணச்சநல்லூர் தொகுதி திமுக எம்எல்ஏ கதிரவன். வரும் சட்டப்பேரவைத் தேர்தலிலும் திமுக சார்பில் போட்டியிட விருப்ப மனு அளித்துள்ளார். இந்நிலையில், திமுக ஒன்றியச் செயலாளர்கள் 5 பேர், பேரூராட்சி செயலாளர்கள் 2 பேர் என 7 பேருக்கு ரூ.15 லட்சம் மதிப்பிலான காரை தனது தந்தை அண்மையில் பரிசளித்துள்ளதாக எம்எல்ஏ கதிரவன் சமூகவலைதளப் பக்கத்தில் பதிவிட்டிருந்தார். அதில்,கட்சி பதவிகளை குறிப்பிடாமல், அவர்களது பெயர்களை மட்டும் குறிப்பிட்டிருந்தார்.
இந்நிலையில், இதுதொடர்பாக அதிமுக புறநகர் வடக்கு மாவட்ட தகவல் தொழில்நுட்பப் பிரிவு மாவட்டச்செயலாளர் ஏவூர் பி.நாகராஜன், திருச்சி மாவட்ட தேர்தல் நடத்தும் அலுவலர் ஆட்சியர் வே.சரவணன், உதவி தேர்தல் நடத்தும் அலுவலர் சிவா ஆகியோரிடம் கடந்த 19-ம் தேதி புகார் மனு அளித்தார்.
அந்த மனுவில், ‘தமிழகத்தில் கடந்த 15-ம் தேதி முதல் தேர்தல் விதிமுறைகள் அமலில் உள்ள நிலையில் தேர்தல் விதிமுறைகளை மீறி மண்ணச்சநல்லூர் தொகுதி திமுக எம்எல்ஏ கதிரவன் மற்றும் அவரது தந்தையும் சேர்ந்து மார்ச் 16, 17 ஆகிய இரு தினங்களில் தனது தொகுதிக்குட்பட்ட திமுக நிர்வாகிகள் 7 பேருக்கு புதிய கார்களை பரிசாக வழங்கி உள்ளனர். இது தேர்தல் விதிமுறைகளை மீறிய செயலாகும். அவர்கள் இருவர் மீதும் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்’ என புகார் அளித்தார்.
இதுதொடர்பாக உதவி தேர்தல் நடத்தும் அலுவலர் சிவா, விளக்கம் கேட்டு எம்எல்ஏ கதிரவனுக்கு நோட்டீஸ் அனுப்பி உள்ளார். இதுதொடர்பாக எம்எல்ஏ கதிரவனும் உதவி தேர்தல் அலுவலருக்கு பதில் அளித்துள்ளார்.
நடவடிக்கை என்ன? - இதுகுறித்து மண்ணச்சநல்லூர் தொகுதி உதவி தேர்தல் நடத்தும் அலுவலர் சிவாவிடம் கேட்டபோது, ‘எம்எல்ஏ கதிரவன் அளித்துள்ள விளக்கம் தொடர்பாக மாவட்ட தேர்தல் நடத்தும் அலுவலருக்கு அறிக்கையாக சமர்பிக்கப்படும்’ என்றார். இந்த அறிக்கையை தொடர்ந்து மாவட்ட தேர்தல் நடத்தும் அலுவலரின் நடவடிக்கை இருக்கும் என தேர்தல் அலுவலர்கள் தெரிவித்துள்ளனர்.