“ராகுல் காந்தி பாஜகவின் பி-டீம்” - கேரள முதல்வர் பினராயி விஜயன் சாடல்!

கேரள முதல்வர் பினராயி விஜயன்
கேரள முதல்வர் பினராயி விஜயன்
Updated on
1 min read

திருவனந்தபுரம்: காங்கிரஸ் மற்றும் ராகுல் காந்தியை பாஜகவின் பி-டீம் என்று கேரள முதல்வர் பினராயி விஜயன் சாடியுள்ளார்.

தனியார் தொலைக்காட்சிக்கு அளித்த பேட்டியில், ராகுல் காந்தியின் அரசியல் அணுகுமுறை மீண்டும் மீண்டும் பாஜகவுக்கே சாதகமாக அமைவதாகவும், டெல்லி, ஹரியானா போன்ற மாநிலங்களில் எதிர்க்கட்சிகளின் ஒற்றுமையை அவர் சிதைத்ததே பாஜகவின் வளர்ச்சிக்குக் காரணம் என்றும் பினராயி விஜயன் குற்றம் சாட்டினார்.

கேரளாவைப் பொறுத்தவரை, காங்கிரஸ் தலைமையிலான ஐக்கிய ஜனநாயக முன்னணி மற்றும் இடதுசாரிகள் இடையே நேரடிப் போட்டி நிலவுகிறது. பேப்பூர், எலத்தூர் மற்றும் கொல்லம் போன்ற இடதுசாரிகளின் கோட்டைகளைக் கைப்பற்ற காங்கிரஸ் மேற்கொள்ளும் முயற்சிகள் பலிக்காது என்றார்.

மேலும் “கேரளாவில் பாஜக ஒரு இடத்தில் கூட வெற்றி பெறாது. அவர்களுக்குச் சற்றே வாக்கு வங்கி உயர்ந்திருக்கலாம், ஆனால் ஒரு தொகுதியில் கூட வெல்லும் அளவுக்கு அவர்களுக்கு வலிமை இல்லை” என்று அவர் தெரிவித்தார்.

சபரிமலை விவகாரம் இந்தத் தேர்தலில் பெரிய தாக்கத்தை ஏற்படுத்தாது என்றும், மக்கள் வளர்ச்சியின் அடிப்படையிலேயே வாக்களிப்பார்கள் என்றும் அவர் கூறினார். சமீபத்தில் வெளியான 'தி கேரளா ஸ்டோரி 2' திரைப்படம் குறித்துப் பேசிய அவர், கேரளா கடந்த 10 ஆண்டுகளாக எவ்வித மதக்கலவரமும் இன்றி அமைதிப் பூங்காவாகத் திகழ்வதாகவும், இத்தகைய திட்டமிட்டப் பிரச்சாரங்கள் உண்மையை மறைக்க முடியாது என்றும் தெரிவித்தார்.

இந்தத் தேர்தலில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி மொத்தம் 86 இடங்களில் போட்டியிடுகிறது. இதில் 56 எம்எல்ஏ-க்களுக்கு மீண்டும் வாய்ப்பு வழங்கப்பட்டுள்ளது. முதல்வர் பினராயி விஜயன் மீண்டும் கண்ணூர் மாவட்டத்தின் தர்மடம் தொகுதியில் களம் காண்கிறார். முன்னாள் சுகாதாரத் துறை அமைச்சர் கே.கே.ஷைலஜா இம்முறை பேராவூர் தொகுதியில் போட்டியிட உள்ளார். தாலிப்பறம்பு தொகுதியில் பி.கே.ஷியாமளா போட்டியிடுகிறார்.

பாஜக வலுவாக உள்ள நெமம், வட்டியூர்காவு மற்றும் மஞ்சேஸ்வரம் தொகுதிகளிலும் பலமான வேட்பாளர்கள் நிறுத்தப்பட்டுள்ளதாக தெரிகிறது. 140 தொகுதிகளைக் கொண்ட கேரள சட்டப்பேரவைக்கு ஏப்ரல் 9-ஆம் தேதி ஒரே கட்டமாகத் தேர்தல் நடைபெற உள்ளது. இதற்கான வாக்கு எண்ணிக்கை மே 4-ஆம் தேதி நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

கேரள முதல்வர் பினராயி விஜயன்
ஈரான் போர் தாக்கம்: கோவில்பட்டி கடலை மிட்டாய் உற்பத்தி 30% பாதிப்பு

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in