திமுக மகளிரணிச் செயலாளர் ஹெலன் டேவிட்சன்
“கூட்டத்தை ஓட்டாக நினைத்தால் ஏமாந்து போவார் விஜய்” - திமுக மகளிரணிச் செயலாளர் ஹெலன் டேவிட்சன் நேர்காணல்
“இளைஞரணிக்கு இல்லாவிட்டாலும் இளைஞர்களுக்கு இம்முறை கூடுதல் வாய்ப்புகளை கொடுக்க வேண்டும்” என திமுக இளைஞரணி செயலாளர் உதயநிதி, தலைமைக்கு கோரிக்கை வைத்திருக்கும் நிலையில், “நமக்கும் இம்முறை கூடுல் கோட்டா கிடைக்குமா?” என்ற எதிர்பார்ப்பு திமுக மகளிரணியினர் மத்தியிலும் எழுந்திருக்கிறது. இதுகுறித்தும், மகளிரணி செயல்பாடுகள் குறித்தும் திமுக மகளிரணிச் செயலாளர் ஜெ.ஹெலன் டேவிட்சனிடம் ‘ஜனநாயகத் திருவிழா’வுக்காக பேசினோம்.
கனிமொழி காலத்தைப் போல திமுக மகளிரணி ஆக்டீவாக இல்லையே ஏன்?
கனிமொழி மகளிரணி செயலாளராக இருந்த போது திமுக எதிர்க்கட்சியாக இருந்ததால் நிறையப் போராட்டங்களை முன்னெடுத்தது மகளிரணி. அதனால் எங்களின் செயல்பாடுகள் வெளிப்படையாகத் தெரிந்தது. இப்போது அவர் துணைப் பொதுச்செயலாளராக இருந்தாலும் எங்களுடன் இணைந்தேதான் பயணிக்கிறார்.
தினமும் ஆலோசனைகளை வழங்குகிறார். கடந்த 3 ஆண்டுகளில் மகளிரணிக்கு 26 லட்சம் உறுப்பினர்களைச் சேர்த்திருக்கிறோம். 2023-ல் நடந்த மகளிர் உரிமை மாநாட்டுக்குப் பிறகு மாநாடு நடத்தவில்லையே எனக் கேள்வி வந்தது. அதனால் இப்போது திருப்பூரில் மண்டல மாநாட்டை நடத்த தயாராகி வருகிறோம். மக்களவைத் தேர்தலில் மகளிரணி ஆற்றிய பங்களிப்பை கட்சித் தலைமை அறியும். ஆக, எப்போதும் நாங்கள் ஆக்டீவாகத்தான் இருக்கிறோம்.
இம்முறை மகளிரணிக்கு கூடுதல் தொகுதிகளைக் கேட்கும் திட்டம் இருக்கிறதா?
நாங்களும் கேட்டிருக்கிறோம். மகளிரணிக்கு பொறுப்பேற்றுள்ள கனிமொழியும் எங்களுக்கு உரிய முக்கியத்துவத்தை பெற்றுத் தருவதில் உறுதியாக இருப்பதால் கண்டிப்பாக எங்களுக்கு கூடுதல் வாய்ப்புகள் கிடைக்கும்.
சீமான் 117 பெண்களுக்கு போட்டியிட வாய்ப்பளிப்பதை எப்படிப் பார்க்கிறீர்கள்?
உள்ளாட்சியில் 50 சதவீதம் பெண்களுக்கு வாய்ப்பளித்த கட்சி திமுக. அதேபோல் 1989 முதல், சொத்துரிமை உள்ளிட்ட பெண்களுக்கான பல சிறப்பான திட்டங்களை தந்து கொண்டிருப்பது திமுக தான். சீமான் மகளிருக்கு சரிபாதி வாய்ப்பளிக்கிறார் என்றால் அது அவரது நிலைப்பாடாக இருக்கலாம்.
தமிழகத்தில் பெண்களுக்கு எதிராக குறிப்பாக, மாணவிகளுக்கு எதிராக நடக்கும் பாலியல் வன்முறைகளை எப்படி கடக்கிறீர்கள்?
அது போன்ற சம்பவங்கள் நடக்காமல் இருப்பதற்கான அனைத்து முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளையும் அரசு எடுத்து வருகிறது. மற்ற மாநிலங்களை ஒப்பிடுகையில் இங்கே பெண்கள் மிகவும் பாதுகாப்புடன் இருக்கிறார்கள். இன்றைக்கே, இந்தியாவில் வேறெந்த மாநிலத்திலும் இல்லாத வகையில் தமிழகத்தில் 43 சதவீதம் பெண்கள் பணிக்குச் செல்லும் வாய்ப்பு உருவாக்கப்பட்டிருக்கிறது என்றால் பெண்களுக்கான பாதுகாப்புச் சூழல் இருப்பதே அதற்குக் காரணம்.
அறிவாலயத்துக்கு பேச்சுவார்த்தைக் குழுவை அனுப்பிய காங்கிரஸ், விஜய் வீட்டுக்கும் தூதுவரை அனுப்பியது சரிதானா?
எங்களது ஒப்புதல் இல்லாமல் விஜய் வீட்டுக்கு அவர் சென்றிருக்கிறார் என்று காங்கிரஸ் தரப்பிலேயே சொல்லும் போது நாம் பேசுவதற்கு என்ன இருக்கிறது?
உங்கள் பகுதிக்காரரான நாஞ்சில் சம்பத், “உதயநிதி தான் எனக்கு கெடுதல் செய்தார்” என்று சொல்லி இருக்கிறாரே?
அவர் ஒரு கொள்கையற்ற மனிதர். அவரது திருமணத்தை நடத்தி வைத்ததே கலைஞர் தான். அரசியலில் எத்தனையோ மனிதர்களைப் பார்த்திருக்கிறோம். ஆனால், நாஞ்சில் சம்பத்தைப் போல அரசியல் நாகரிகம் இல்லாத ஒருவரை பார்த்ததே இல்லை.
உண்மையைச் சொல்லுங்கள்... விஜய்யைக் கண்டு திமுக பயப்படவில்லையா?
எதற்காகப் பயப்பட வேண்டும்? நாங்கள் கொள்கைக் கூட்டம். அவருக்கு என்ன கொள்கை இருக்கிறது அவரைக் கண்டு நாங்கள் பயப்பட?
பயமில்லை என்றால், விஜய்யின் முன்னாள் மேலாளர் திமுக-வில் சேர்ந்ததை எதற்காக இத்தனை பிரமாதப்படுத்த வேண்டும்?
செல்வக்குமார் எங்கள் ஊர்க்காரர் தான். பத்துப் பதினைந்து ஆண்டுகளாக மக்கள் சேவை செய்து வருபவர். இயக்கத்தில் சேர்ந்தால் அந்தப் பணிகளை இன்னும் சிறப்பாகச் செய்யலாம் என்பதால் அவர் திமுக-வுக்கு வந்திருக்கிறார். அப்படி வரும் நல்லவர்களை வரவேற்று மரியாதை செய்வதுதானே சரியாக இருக்க முடியும்.
திமுக-வுக்குச் சாதகமான சிறுபான்மையினர் வாக்குகளில் விஜய் இம்முறை சேதாரம் ஏற்படுத்துவார் என்கிறார்களே..?
அதற்கான வாய்ப்பு இல்லை. ஏன்னா இன்று, திருப்பரங்குன்றம் விவகாரத்தில் விஜய் நியாயத்தைப் பேச முன்வரவில்லை. இப்படியான நிலையில், சிறுபான்மையினர் வாக்குகள் விஜய்க்குப் போகும் என்பது தவெக தட்டிவிடும் கற்பனைக் குதிரை. என்றைக்குமே சிறுபான்மை மக்கள் திமுக பக்கம் தான்.
பெண்களின் வாக்குகள் இம்முறை கணிசமாக விஜய் பக்கம் சரியும் போல் தெரிகிறதே..?
மகளிருக்கான திட்டங்களை திமுக அரசு காலங்காலமாக செயல்படுத்தி வருகிறது. இந்த ஆட்சியிலும் எண்ணற்ற திட்டங்கள் தொடர்கின்றன. 25 ஆண்டுகளாக சினிமாவில் இருக்கிறார் விஜய். அந்த விதத்தில் அவருக்குக் கூடும் கூட்டமானது ஒரு நடிகரைப் பார்க்க திரளும் கூட்டம் தானே தவிர அது தனக்கான வாக்குகளாக மாறும் என நினைத்தால் ஏமாந்து போவார் விஜய்.
பாஜக மீது மதவாக முத்திரை குத்தும் நீங்கள், ஓட்டுக்காக சிறுபான்மையினரை தூக்கிப் பிடிப்பது மட்டும் சரியா?
பாஜக-வின் நோக்கம் என்ன இன்று... சிறுபான்மையினருக்கு தொல்லை கொடுத்து அதன் மூலம் பெரும்பான்மை மக்களின் வாக்குகளை கவரலாம் என நினைப்பதால்தான் நாங்கள் சிறுபான்மை மக்களுக்கு ஆதரவாக நிற்கிறோம்.
தமிழச்சி தங்கபாண்டியன் ஆண்டாள் வேடமிட்டு இன்ஸ்டாவில் பதிவிட்ட போட்டோ கடும் விமர்சனத்துக்கு உள்ளாகி இருக்கிறதே..?
சாரி... அதை நான் பார்க்கவில்லை.
